மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 5 ஆக 2020

சிறப்புக் கட்டுரை: பள்ளத்தாக்குகளில் விழுந்திருக்கும் பழங்குடியினரின் கல்வி! - தீர்வு என்ன?

சிறப்புக் கட்டுரை: பள்ளத்தாக்குகளில் விழுந்திருக்கும் பழங்குடியினரின் கல்வி! - தீர்வு என்ன?

பேராசிரியர் நா. மணி

நாடு சுதந்திரம் பெற்ற 70 ஆண்டுகளில் எத்தனையோ ஏற்றங்கள், ஏமாற்றங்கள், பின்னடைவுகள், சிக்கல்கள் என மாறிக்கொண்டே உள்ளன. இந்த மாறிக்கொண்டே இருக்கும் சூழலில் பெறும் மாற்றங்களைக் காண இயலாத சமூகம் பழங்குடி சமூகம்.

இந்திய மக்கள்தொகையில் சுமார் எட்டு விழுக்காடு பழங்குடியினர். தமிழக மக்கள்தொகையில் இது சுமார் ஒரு விழுக்காடு. சதவிகித அடிப்படையில்தான் இவர்கள் ஒரு விழுக்காடு. ஆனால் எண்ணிக்கையில் இவர்கள் சுமார் எட்டு லட்சம் பேர். இவர்கள் தமிழ்நாட்டின் வெவ்வேறு மலைகளில் வெவ்வேறு விதமான சமூக, கலாச்சார, பொருளாதாரச் சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது வாழ்வில் அடிப்படை மாறுதலை ஏற்படுத்த வேண்டிய கல்வி அதன் தரம், கல்வி உரிமை எப்படி இருக்கிறது?

இவர்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 303 அரசு பழங்குடியினரது உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 30,880 குழந்தைகள் பயின்று வருகின்றனர். இது தவிர, இதே மலைப்பகுதியில் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், அரசுப் பள்ளிகள் மற்றும் வனத் துறை பள்ளிகள் ஆகியனவும் இயங்கி வருகின்றன.

பழங்குடிக் குழந்தைகளின் கல்வித் தரம் எப்படி இருக்கிறது?

பழங்குடியினர் மத்தியில் செயல்படும் சமூகச் செயற்பாட்டாளர்கள், பழங்குடியினர் நலவாழ்வில் அக்கறை செலுத்தி வரும் பழங்குடி மக்கள் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் ஓரளவு அறிந்த உண்மைதான். பழங்குடி மக்களின் எழுத்தறிவு விகிதமே ஐம்பது விழுக்காடு அளவில் உள்ளதெனில், கல்வியின் தரம், தரமான கல்விக்கான உரிமை ஆகியவை பற்றி சொல்லவும் வேண்டுமோ?! பள்ளிக்கூடங்கள் பழங்குடிப் பகுதிகளில் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதைக் காட்டிலும் முக்கியமான கேள்வி, அந்தப் பள்ளிகளின் தரம் எப்படி உள்ளது என்பதே?!

சமவெளியில் வாழும் மக்களின் பொதுப் புத்தியில் சினிமாக் காட்சிகளில் வரும் பழங்குடிகளே கண்ணில் தெரிகின்றனர். கல்வி கற்பதற்கான சமமான வாய்ப்புகளும் தரமான கல்வியும் உத்தரவாதப்படுத்தப்பட்டால்தான் பழங்குடி மக்களின் கல்வி ஓர் அடிப்படை உரிமையாகும்.

பழங்குடி மக்களின் கல்விச் சிக்கல்கள்

பழங்குடி மக்களின் இன்றைய கல்வி சிக்கல்களை இப்படி வரிசைப்படுத்தலாம்...

* இன்னும் போதுமான கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

* கல்வித்தரம் அதலபாதாளத்தில் உள்ளது.

* போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை

* ஆசிரியர் வருகை குறைவு

* கல்வி நிர்வாகம் சிக்கல் வடிவம் கொண்டது. கல்வி நிர்வாகத்தில் நேரடி பயிற்சி இல்லாத அனுபவம் இல்லாத ஆதிதிராவிடர் நலத்துறை நிர்வகித்து வருகிறது. பழங்குடி மக்களின் குழந்தைகளுக்கு ஏற்ற கற்றல் கற்பித்தல் முறைகள் இல்லை.

* பழங்குடி மக்களின் பாரம்பரிய அறிவு ஆவணப்படுத்தப்படவில்லை. அது கல்வியாக கற்றுத் தரப்படவும் இல்லை.

பெயரளவுக்கான கல்வி

ஒட்டுமொத்தமாக பழங்குடி மக்களுக்கு வழங்கப்படும் கல்வியைப் பரிசீலிக்கும்போது பெயரளவுக்கான கல்வியே சில இடங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும். அந்த ஆய்வுகள் பழங்குடி மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றோடு நேரடித் தொடர்பு உடையது பல்வேறு தரப்பினர் கருத்துகளும் ஸ்தூலமான நிலைகளைக் கணிக்க பயன்படும்.

பழங்குடி குழந்தைகளின் கல்வித் தரம் உயரவும் கல்வி உரிமை நிலைநாட்டவும் கீழ்காணும் இலக்குகளை எட்ட வேண்டும். பழங்குடி மக்களின் கல்வி வேலைவாய்ப்பு ஆகியவற்றை அவர்களது சமூக பொருளாதார கலாச்சார வாழ்நிலையிலிருந்து மதிப்பீடு செய்து கீழ்காணும் தீர்வை நோக்கிச் செல்ல வழிவகைகள் கண்டறியப்பட வேண்டும்.

இலக்குகளை எட்ட என்ன வழி?

* பழங்குடி மக்களின் குழந்தைகளுக்கு இலவச சமமான கட்டாய தரமான கல்வி உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்.

*பழங்குடி பள்ளிகளில் மாணவர் ஆசிரியர் விகிதம் சமவெளிப் பகுதியில் உள்ளது போல் அல்லாமல் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும்.

* ஆசிரியர் வருகையை உறுதிப்படுத்த வேண்டும்.

* பழங்குடி மக்களின் குழந்தைகளுக்கு ஏற்ற கற்றல் கற்பித்தல் முறைகள் உருவாக்கப்படவேண்டும்.

* பழங்குடி மக்களின் குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்க பணி அமர்த்தப்படும் ஆசிரியர்களுக்கான தேர்வு முறைகள் முற்றாக மாற்றப்பட வேண்டும்.

*அர்ப்பணிப்பு உணர்வு மலைப்பகுதியில் தங்கிப் பணியாற்றும் மனோபாவம் உள்ளவர்களாகக் கண்டறிதல் அவசியம்.

* பழங்குடி மக்களின் குழந்தைகள் தாய்மொழி தவிர பிற மொழி அறியாதவர் என்பதால் அந்தப் பகுதியில் பணிக்கு நியமிக்கப்படும் ஆசிரியர்கள், பழங்குடி மக்களின் தாய்மொழியில் நன்கு பயிற்சி உள்ளவர்கள் மட்டுமே குழந்தைகளோடு உறவாடமுடியும். குழந்தைகளுக்குப் பள்ளி அந்நியமாகாமல் இருக்க இயலும்.

* ஒவ்வோர் உண்டு உறைவிடப் பள்ளிக்கும் அதிகபட்ச சேர்க்கை இலக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சேர்க்கை இலக்குக்கு மேல் அந்தப் பகுதி குழந்தைகள் பள்ளியில் சேர விதிகள் இடம் தருவதில்லை. இது கல்வி மறுப்புக்குச் சமமானது.

* ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகைப் பணியாளர்களுக்கும் போதுமான குடியிருப்பு வசதிகளும் முன் நிபந்தனைகளாக இருத்தல் அவசியம்.

* போதுமான கட்டடங்கள் வசதி, கழிப்பிட வசதி, தண்ணீர் வசதி, ஆய்வக நூலக வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

பள்ளிக் கல்வித் துறையோடு இணைய வேண்டும் பழங்குடிப் பள்ளிகள்

* ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் செயல்படும் உண்டு உறைவிடப் பள்ளிகளின் பள்ளிக் கல்வி நிர்வாகம் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையோடு இணைக்கப்பட வேண்டும்.

* தமிழ்நாட்டின் எந்தவித பள்ளி முறையிலிருந்தும் மலைப்பகுதியில் பணியாற்ற விரும்பும் ஆசிரியர்கள் தடையின்றி வந்து பணியாற்றவும் தங்கள் தாங்கள் தாய்த் துறையில் இணையும் வசதி செய்து தரப்பட வேண்டும்.

* பழங்குடி மக்களின் பாரம்பரிய அறிவு ஆவணப்படுத்தப்பட வேண்டும். அத்தோடு அவற்றை மலைப்பகுதியில் உள்ள பள்ளிகளில் கற்பிக்கவும் ஏற்பாடுகள் வேண்டும். உண்டு உறைவிடப் பள்ளிகளில் பழங்குடி மக்களின் பாரம்பரிய உணவு வழங்கவும் உத்தரவாதம் வேண்டும்.

* இயற்கையோடு இணைந்த நீண்ட நெடிய வாழ்வியல் வழிமுறையில் கண்டறியப்பட்ட குன்றா வளர்ச்சிக்கான அடிப்படையாகக் கூறுபாடுகளை எப்படிப் பிற பகுதி மக்கள் பின்பற்ற முடியும் என்பதற்கான ஆய்வுகள் வேண்டும்.

* மலைப்பகுதியில் வாழ்பவர்கள் தாங்கள் கற்ற கல்வியை மூலதனமாகக்கொண்டு தாங்கள் வாழும் பழங்குடி பகுதியில் கிடைக்கும் வாழ்வாதாரங்களைக் கொண்டு வாழ்க்கை தேவைகளை முழுவதும் பூர்த்தி செய்யும் பொருளாதார முறை திட்டமிடப்பட்டு மலையை, மண்ணைக் கெடுக்காத ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உத்தரவாதம் செய்யும் திட்டமிடலும் உருவாக்கப்பட வேண்டும்.

* தற்போது நடைமுறையில் உள்ள கல்வி உரிமைச் சட்டம் கூறுவதைப் போல் பள்ளி அமைவிடம் குழந்தை நேயமாக இருத்தல் வேண்டும்.

மேற்காணும் இலக்குகளை அடைய, தக்க தீர்வுகளை எட்ட, பழங்குடி மக்கள் நலனில் அக்கறை கொண்ட அனைவரும் இணைந்து அர்த்தம் உள்ள உரையாடல்களை நடத்தி நல்ல கொள்கை திட்டம் ஒன்றை உருவாக்கி அதை நடைமுறைப்படுத்தும்படி தொடர் இயக்கங்களை நோக்கி தயாராக வேண்டும்.

கட்டுரையாளர் குறிப்பு

ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொருளியல் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவராக இருக்கும் நா. மணி, கல்வி தொடர்பான பல்வேறு ஆய்வுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருப்பவர். தமிழகக் கல்விச்சூழல், இந்தியக் கல்விச்சூழல் தொடர்பான விவாதங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறவர். ‘இவர்களுக்கு ஏன் இல்லை கல்வி?’ என்பது உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

திங்கள், 21 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon