மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 5 ஆக 2020

கரு வரை பாதிக்கும் காற்று மாசு!

கரு வரை பாதிக்கும் காற்று மாசு!

சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து பல்வேறு நாடுகளில் வெவ்வேறு கோணங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டுக்கொண்டு வருகின்றன. தற்போது காற்று மாசுபாடு குறித்து சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கும் புதிய ஆய்வு முடிவு அதிர்ச்சியை தருவதாக அமைந்திருக்கிறது.

சுற்றுச்சூழல் மாசுபாடு பெரியவர்களில் இருந்து குழந்தைகள் வரை அனைவரையுமே பாதிக்கும் என்பது நாம் அறிந்த தகவலே. அண்மையில் நமது தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசு பிரச்சினையால் பலதரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.

ஆனால் தற்போதைய ஆய்வு முடிவில் காற்று மாசுபாடு கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவை 50 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும் என்று ஒரு தெரிவித்துள்ளது. சீனாவின் BEIJING NORMAL UNVERSITY-ஐ சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், காற்று மாசுபாட்டிற்கும், கருச்சிதைவுக்கும் இடையில் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு செய்து வந்தனர்.

இந்த குழு, 2009 முதல் 2017 வரை சீன தலைநகரில் வசிக்கும் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான கர்ப்பிணிப் பெண்களின் மருத்துவ பதிவுகளை ஆய்வு செய்தது.

காற்று மாசுபாட்டின் அதிகரிப்பு காரணமாக கருச்சிதைவு ஏற்பட 52 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எரிபொருட்களால் உருவாகும் நச்சு இரசாயனங்களின் அளவிற்கும் இதுவரை ஏற்பட்ட கருச்சிதைவுகளுக்கும் இடையே ஒரு நேரடி தொடர்பையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பெய்ஜிங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், ஆய்வின் தலைமை ஆசிரியருமான, பேராசிரியர் லிகியாங் ஜாங், கர்ப்பத்திற்கு முன்னால் சில தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் கருச் சிதைவுகளை தடுக்க அல்லது குறைக்க சாத்தியமான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

."கர்ப்பிணிப் பெண்கள் அல்லது கர்ப்பமடைய விரும்புவோர் காற்று மாசுபாட்டிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும், இது அவர்களின் சொந்த ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அவர்களின் கருவின் ஆரோக்கியத்திற்கும் கூட அவசியமாகிறது" என தெரிவித்துள்ள பேராசிரியர் ஜாங் மேலும் கூறுகையில், இந்த விவகாரத்தில் இன்னும் தொடர் ஆய்வுகள் தேவை என்று கூறியுள்ளார்.

காற்றை சுத்தப்படுத்த தற்போது காற்று சுத்திகரிப்பு கருவிகள் கண்டிபிடிக்கப்பட்ட நிலையிலும் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு யாராலும் காற்று மாசுவிலிருந்து தப்பிக்க இயலாது. மேலும் காற்று சுத்திகரிப்பு கருவிகள் வாங்குவதைப்பற்றி ஏழை எளிய மக்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாது. ஏனென்றால் அவை அவ்வளவு அதிகமானவை.

இயன்றவரை சுற்றுச்சூழலை மாசுபடுத்திவிட்டோம். எந்த தவறும் செய்யாத எதிர்கால தலைமுறையினருக்கு தன்னிலையிலிருந்து மாறிய உலகை விட்டு செல்கிறோம், இந்த தண்டணை போதும். மேலும் மாசுபடுத்தி அவர்கள் உடல்நிலையையும் நாசம் செய்யாமல் காத்து நிற்போம் என்ற உறுதிமொழியை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

காற்று மாசுபாடு தவிர்ப்பு, நம் உடல்நலனை மட்டுமல்ல கருவில் இருக்கும் சிசுவின் உடல்நலனையும் காக்கும்.

திங்கள், 21 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon