மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 22 ஜன 2021

நாங்குநேரி: எம்.பி கைது பரபரப்பு!

நாங்குநேரி: எம்.பி கைது பரபரப்பு!வெற்றிநடை போடும் தமிழகம்

தமிழகத்தில், விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜர் நகரில் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. தேர்தல் புறக்கணிப்பு, எம்.பி.வசந்தகுமார் கைது என ஒரு சில பிரச்சினைகளுக்கு மத்தியில் நாங்குநேரி தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

நாங்குநேரியில், தங்கள் சமுதாயத்தில் உள்ள 7 உட்பிரிவுகளை தேவேந்திர குல வேளாளர் என்று அறிவித்து அரசாணை வெளியிடக் கோரி 113 கிராமங்களில் இச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணித்தனர். இந்நிலையில், கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் தேர்தல் நடத்தை விதிகளை மீறி நாங்குநேரி தொகுதிக்குள் வந்ததாக போலீசார் அவரை கைது செய்துள்ளனர்,

கலுங்கடி பகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி உள்ளே வர முயன்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அவரை போலீசார் அழைத்துச் சென்றனர். வசந்தகுமார் மீது 143, 171 (எச்.ஐபிசி) ஆர்/டபிள்யு 123 ஆர்.சி என 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிறிது நேரத்தில் ஜாமீனில் வெளி வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். ”பாளையங்கோட்டையில் உள்ள எனது வீட்டுக்கு செல்ல இவ்வழியாக வந்தேன், ஒரு எம்.பி.யான நான் இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்ற காரணத்தால் இந்த தொகுதியின் வழியாக சாலையில் நடந்து செல்லக்கூட உரிமை இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார். தோல்வி பயம் காரணமாகவே ஆளும் கட்சியினர் இவ்வாறு செய்வதாக அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் நாங்குநேரி தொகுதியில் வாக்களித்த பின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அதிமுக வேட்பாளர், நாராயணன், நான் இங்கு குடும்பத்துடன் வாக்களித்தேன். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வாக்களிக்கவில்லை. ஏனென்றால் அவருக்கு இங்கு வாக்கு இல்லை, இந்த தொகுதியில் வசிக்காதவர், எப்படி மக்களுக்காக உழைப்பார் என்று கேள்வி எழுப்பியிருந்தார்,

இவரது பேச்சைத் தொடர்ந்து திமுக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம் நாராயணன் மீது புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அதில், வாக்குச்சாவடிக்கு வெளியே நாராயணன் பேட்டி அளித்துள்ளார். இது மினி பிரச்சாரம் போல் உள்ளது. இது தேர்தல் நடத்தை விதிமீறலாகும். வாக்குச்சாவடிக்குள் தடை செய்யப்பட்ட காலத்தில் பேட்டி அளித்ததன் மூலம் வாக்காளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றுள்ளார்’ என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நாங்குநேரி இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி 62.32 % வாக்குகள் இங்கு பதிவாகியுள்ளன.

திங்கள், 21 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon