மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 5 ஆக 2020

மகாராஷ்டிரா, ஹரியானா: மந்தநிலை வாக்குப்பதிவு ஏன்?

மகாராஷ்டிரா, ஹரியானா: மந்தநிலை வாக்குப்பதிவு ஏன்?

நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தல்களில் மகாராஷ்டிராவில் 55.83 சதவீத வாக்குப்பதிவும், ஹரியானாவில் 57 சதவீத வாக்குப்பதிவும் பதிவாகியுள்ளன.

288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா- சிவசேனா கட்சிகள் கூட்டணியும், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும் போட்டியிடுகின்றன. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்து மக்கள் மாநிலம் முழுவதும் உள்ள 96,661 வாக்குச்சாவடிகளில் மக்கள் வாக்களித்தனர். இன்று மாலை வாக்குப்பதிவு முடிந்த நிலையில், மொத்தம் 55.83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கார்வீரில் அதிக வாக்குப்பதிவு 79,19 சதீவத வாக்குப்பதிவும், குறைந்த பட்சமாக காஸ்பாபெத்தில் 36.08 சதவீத வாக்குப்பதிவும் பதிவாகியுள்ளன.

ஹரியானாவில் 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. ஹரியானா தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஜனநாயக ஜனதா கட்சி, இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில், ஹரியானாவில் 57.04 சதவீத வாக்குப்பதிவுகள் பதிவாகியுள்ளன.

மந்த நிலைக்கு காரணம் என்ன?

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மகாராஷ்டிராவின் பெரும்பாலான பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மந்தமானது. இதனிடையில், அமராவதி மாவட்டம், மோரிஷி-வருட் தொகுதியின் வேட்பாளர் தேவேந்திர புயர் வந்த வாகனத்தை முகமூடியணிந்த மூன்று நபர்கள் வழிமறித்து காருக்குள் இருந்த தேவேந்திர புயரை துப்பாக்கியால் சுட்டனர். மேலும், அவரை வாகனத்திலிருந்து வெளியே இழுத்து தாக்கிவிட்டு, அவரது காருக்கும் தீயிட்டுக் கொழுத்தி விட்டு தப்பி ஓடியிருக்கின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தையும் கலவரத்தையும் உண்டாக்கியிருக்கிறது. இதனால், அமராவதி தொகுதியில் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் மகாராஷ்டிராவிலுள்ள ஜல்னா, பீட், விரார் ஆகிய மாவட்டங்களில் சிறு சிறு மோதல்களும் கலவரங்களும் ஏற்பட்டன.

மகாராஷ்டிராவை விட ஹரியானா மாநிலத்தில் 3 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவுகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக வாக்குப்பதிவு செய்யப்பட்ட தொகுதிகளில் ஜூலானா (61 சதவீதம்), நரங்கர் (55.60), முலானா ரிசர்வ்ட் செக்மண்ட் (54.50), ஜெகத்ரி (58.40), ராடாவுர் (56.70), லத்வா (61), தானேசர் (56), அசாந்த் ( 52), தோஹானா (58.20), ஃபதேஹாபாத் (58.90), எல்லெனாபாத் (58), கர்ஹி சம்ப்லா-கிலோய் (62.10) ஆகிய தொகுதிகள் இடம்பெற்றன.

ஹரியானாவிலுள்ள நுஹ் மாநிலத்தில், இன்று காலை வாக்குப்பதிவு நடைபெற்ற போது, பூத் மீது கல்வீச்சு நடத்தப்பட்டதை தொடர்ந்து, பிஜேபி-காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் வெடித்தது. ஆனால், இந்த மோதல் பூத்திற்கு வெளியே நடைபெற்றதால், வாக்குப்பதிவை பாதிக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதே சமயம், இந்த மோதலில் ஒரு பெண் பலத்த காயம் அடைந்திருக்கிறார்.

இன்று மாலை 6.30 மணிக்கு மேல், தேர்தல் ஆணையம் மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் வாக்குப்பதிவு குறித்த முழு நிலவரங்களையும் அளிக்கவுள்ளது.

திங்கள், 21 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon