மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 5 ஆக 2020

சென்சார் பிடியில் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம்?

சென்சார் பிடியில் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம்?

நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்ற ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியாகும் தொடர்கள், திரைப்படங்களை தணிக்கை செய்வது குறித்து இந்திய அரசு ஆலோசித்து வருகிறது.

தியேட்டர்களில் மட்டுமே படங்களைப் பார்த்து வந்த காலம் போய் டிவி டெக், விசிடி., டிவிடி., என வீட்டிலிருந்தபடியே சினிமாவை பார்க்கும் அனுபவம், காலத்திற்கும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றபடி மாறிக்கொண்டே இருக்கின்றது. அலைபேசிகளில் படம் பார்க்கும் தற்காலத்தில், நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் போன்ற ஸ்ட்ரீமிங் நிறுவனங்கள் இன்று ரசிகர்கள் மத்தியில் கோலோச்சுகின்றன. ரசிகர்களால் அதிகம் விரும்பிப் பார்க்கப்படும் பிராந்திய சினிமாக்கள், தொடர்கள், திரைப்பட விழாக்களில் வெளிவரும் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள், ஆவண படங்கள் என அனைத்து வகையான சினிமா ரசிகர்களையும் ஈர்க்கும் தளமாக இவை மாறி வருகின்றன.

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி சான்றிதழ் வழங்கும் அமைப்புகள் இந்தியாவில் பொது உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றன. ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கின் அதிகரிப்பிற்கு முன்பிருக்கும் சட்டங்கள், இந்தியாவில் அதிகரித்து வரும் ஸ்ட்ரீமிங் தளங்களின் உள்ளடக்கத்தை தணிக்கை செய்ய அனுமதிக்காது.

நெட்பிளிக்ஸ், அமேசானில் வெளி வரும் நிகழ்ச்சிகளில், சில உள்ளடக்கங்கள் ஆபாசமானவையாகவும், மத உணர்வை அவமதித்ததாகக் குற்றம் சாட்டி, பல நீதிமன்ற வழக்குகள் சமீபத்திய மாதங்களில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. நெட்பிளிக்ஸ் உலகளவில் இந்தியா மீதும் இந்துக்கள் மீதும் தவறான சித்திரத்தை உருவாக்குகிறது என சிவசேனா ஐ.டி. பிரிவு கடந்த மாதம் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளதை இங்கே நினைவு கூறலாம்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், நெட்ஃபிளிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் ஒரு சுய கட்டுப்பாட்டுக் குறியீட்டில் கையெழுத்திட்டன. ஆனால் அமேசான் 'தற்போதைய சட்டங்கள் போதாது' என்று கூறி கையெழுத்திட மறுத்திருக்கிறது.

எந்தவொரு ஒழுங்குமுறைகளுக்கும் எதிராக அரசாங்கம் முடிவெடுக்கும் சாத்தியம் இருந்தாலும், வேறு பல வழிமுறைகளும் ஆராயப்படுகின்றன என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இந்திய படங்களில் புகைப் பிடிக்கும் காட்சிகள், மது அருந்தும் காட்சிகள் வரும் போது, ‘புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு’ என ‘ஸ்க்ரோல்’ வருவது போல, ஆன்-லைன் ஸ்ட்ரீமிங்கில் வருவதில்லை என குற்றச்சாட்டுகள் அதிகளவு எழுந்து வருகின்றன. இவையும் இனி கட்டுப்படுத்தப்படும் என அரசு தரப்பில் இருந்து கூறப்படுகின்றது.

ஒவ்வொரு ஊடகங்களும் அதற்கென பிரத்யேகமான உள்ளடகங்களை பின்பற்றுகின்றது. குறிப்பாக இந்தியாவிலுள்ள இளம் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் ஆன்-லைன் ஸ்ட்ரீமிங்கள் செயல்படுகின்றன. ஸ்மார்ட்போன்களின் அதிக பயன்பாடு, ஜியோ அறிவித்த தாராள இணைய சேவை உள்ளிட்டவை அமேசான், நெட்பிளிக்ஸ் சேவைகளுக்கான தேவையை உண்மையில் அதிகரிக்க வைத்திருக்கிறது.

ஆர்எஸ்எஸ் சந்திப்பு: மறுத்த நெட்ஃபிளிக்ஸ்!

டில்லி மற்றும் மும்பையில் கடந்த நான்கு மாதங்களில் ஆர்எஸ்எஸ் மூத்த அதிகாரிகள் ஆறு முறைசாரா சந்திப்புகளை நெட்பிளிக்ஸ் உடன் நடத்தியதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

நெட்ஃபிளிக்ஸின் இந்தியத் தலைவர் சிருஷ்டி பெஹ்ல் ஆர்யா, ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) மூத்த அதிகாரிகள், இந்தியா எதிர்ப்பு மற்றும் இந்து எதிர்ப்பு உள்ளடக்கத்தை கட்டுப்படுத்த ஸ்ட்ரீமிங் ஏஜெண்டுடன் சந்திப்புகளை நடத்தியதாக வெளியான செய்திகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

தற்போது மும்பையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும், ஜியோ மமி 21ஆவது திரைப்பட விழாவில் கலந்து கொண்ட இவர், கலைஞர்களுக்கான சுதந்திரம் என்ற தலைப்பில் நேற்று(அக்.20) உரையாற்றினார். அப்போது ஆர்எஸ்எஸ் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பிய போது, “இது உண்மையல்ல. அப்படி ஒரு சந்திப்பு நிகழவேயில்லை. பொய்யான செய்தி” என மறுத்துள்ளார். மேலும், நாங்கள் தொடர்ந்து இந்தியாவின் சட்டத்திற்கு இணங்குவோம் எனக் கூறியுள்ளார்.

அதே சமயம், நெட்பிளிக்ஸ், அமேசான் பிளாட்ஃபார்ம்களில் வெளியாகும் நிகழ்ச்சிகள் சென்சார் செய்யப்படுவது குறித்து அரசு தரப்பிலிருந்து, விரைவில் தெளிவான அறிக்கைகள் வெளியிடப்படும் என ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட ஊடகங்கள் உறுதி பட தெரிவித்துள்ளது.

திங்கள், 21 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon