மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 5 ஆக 2020

எச்சரித்த ஆட்சியர்: எதிர்ப்புத் தெரிவித்த அலுவலர்கள்!

எச்சரித்த ஆட்சியர்: எதிர்ப்புத் தெரிவித்த அலுவலர்கள்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமிக்கு எதிராக இன்று (அக்டோபர் 21) ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்தனர்.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு பயனாளிகளை தேர்வு செய்வது குறித்து திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி கடந்தவாரம் அதிகாரிகளுக்குக் கடுமையான எச்சரிக்கையை விடுத்திருந்தார்.

‘வீடுகளை ஒதுக்குவதற்கு திங்கள் கிழமைதான் கடைசி நாள். வீடுகளை ஒதுக்கவில்லை என்றால் எத்தனை பேர் என்றாலும் பணியிலிருந்து நீக்கத் தயார் என்று தெரிவித்திருந்தார்.

இதனைக் கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் திருவண்ணாமலையில் திடீரென ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். சங்கத்தின் மாவட்ட தலைவர் பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் பிரபு, உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். ஆட்சியரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.

அதன்படி எச்சரித்த ஆட்சியர் கந்தசாமிக்கு எதிராக இன்று ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்தனர். ஆட்சியரின் பேச்சுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவிக்கும் நிலையில் அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பாரி கூறுகையில், பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்துக்குப் பொருளாதார அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட பயனாளர்களில் பலர், ரூ.1.7 லட்சத்தில் வீடுகளைக் கட்டி முடிக்கவில்லை என்று ஏற்க மறுக்கின்றனர். சிலர் வீடுகள் கட்ட அஸ்திவாரம் போட்ட பிறகும் பணம் எடுக்க முடியவில்லை என்று அப்படியே விட்டுவிடுகின்றனர். இத்திட்டத்தின் மூலம் கொடுக்கப்படும் பணம் போதுமானதாக இல்லை. இத்திட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களை உயரதிகாரியாக இருப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் சாதனை புரிய வேண்டும் என்ற மத்திய மாநில அரசுகளின் செயல்பாட்டால் ஏற்படும் பிரச்சினை இது. இப்பிரச்சினை குறித்து சென்னையில் ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் மற்றும் மனித உரிமை ஆணையத்தில் முறையிடுவது என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்றார்.

ஆட்சியர் விதித்த கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில் அலுவலர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் விரைவில் ஆட்சியர் தரப்பிலிருந்து விரைவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் திருவண்ணாமலை ஆட்சியருக்கு ஆதரவு குரல் கொடுக்க அம்மாவட்ட இளைஞர்கள் திட்டமிட்டுள்ளனர். #ISupportThiruvannamalaiCollector என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் பயன்படுத்தி வருகின்றனர். பாமக தலைவர் ராமதாஸ், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏழை மக்களுக்குக் குறித்த காலத்தில் இலவச வீடுகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி காட்டும் அக்கறை பாராட்டத்தக்கது. இத்தகைய அதிகாரிகள் தான் தமிழகத்தின் முன்னேற்றத்திற்குத் தேவை” என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

urltag: rural-development-officers-wore-black-batch-as-sign-of-protest-against-district- thiruvannamalai -collector

திங்கள், 21 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon