மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 22 ஜன 2021

வேட்பாளர் மீது தாக்குதல், கார் தீ வைப்பு!

வேட்பாளர் மீது தாக்குதல், கார் தீ வைப்பு!வெற்றிநடை போடும் தமிழகம்

மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கும் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில், ஸ்வாபிமானி கட்சியின் வேட்பாளர் மீது தக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. மேலும், அவரது கார் எரிக்கப்பட்டிருக்கிறது.

அமராவதி மாவட்டம், மோரிஷி-வருட் தொகுதியின் வேட்பாளர் தேவேந்திர புயர் வந்த வாகனத்தை அடையாளம் தெரியாத சிலர் தாக்கி அவரின் வாகனத்தைத் தீவைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஸ்வபிமானி கட்சியின் தலைவர் ராஜு ஷெட்டி இது குறித்து கூறுகையில், 'தேவேந்திர புயர் அதிகாலை 5.30 மணியளவில் அவரது காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத சிலர் அவரை தாக்கியிருக்கின்றனர். பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் பெட்ரோல் ஊற்றி காருக்கு தீ வைத்தனர். ஒரு முக்கியமான தொகுதியில் காவல்துறை ஏன் இவ்வளவு கவனக்குறைவாக இருந்தது? மகாராஷ்டிராவின் பீகாரை உருவாக்க விரும்புகிறீர்களா?” என்ற கேள்வியை ராஜு ஷெட்டி எழுப்பினார்.

ஸ்வாபிமான் கட்சியினர், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியினருடன் இணைந்து இத்தேர்தலில் போட்டியிடுகின்றது. பாஜகவைச் சேர்ந்த மாநில வேளாண் அமைச்சர் அனில் போன்டேவை எதிர்த்து தேவேந்திர புயர் போட்டியிடுகிறார். இந்நிலையில், இவர் தாக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா வாக்குப்பதிவு நிலவரம்!

288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா- சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாக போட்டியிடுகின்றன. மகாராஷ்டிராவின் தெற்கு கொங்கன் பகுதி, மேற்கு மற்றும் மத்தியப்பகுதிகள், லாட்டூர், ஓஸ்மானாபாத், மாரத்வாடா பகுதியில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்து மக்கள் மாநிலம் முழுவதும் உள்ள 96,661 வாக்குச்சாவடிகளில் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே சமயம், இன்று காலையிலிருந்தே இந்தப்பகுதிகளில் இடைவெளி விட்டுத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை அதிகமாகப் பெய்யும் இடங்களில் வாக்குப்பதிவு மந்தமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் அவரின் மனைவியுடன் வந்து, நாக்பூரில் இன்று காலை வாக்குப்பதிவு செலுத்தினார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மராட்டிய மாநிலம் நாக்பூர் தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார். தற்போதைய நிலவரப்படி, மகாராஷ்டிரத்தில் 6.78 சதவீத வாக்குப்பதிவுகள் பதிவாகி இருக்கின்றன.

சைக்கிளில் வந்து வக்களித்த ஹரியானா முதல்வர்

ஹரியானாவில் 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. ஹரியானா தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஜனநாயக ஜனதா கட்சி, இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

முதல்வர் மனோகர்லால் கட்டார் வாக்குச்சாவடிக்கு வித்தியாசமாக சைக்கிளில் வந்து வாக்களித்தார். ஜனநாயக ஜனதா கட்சித் தலைவரும், ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரனுமான துஷ்யந்த் சவுதாலா தனது குடும்பத்தினருடன் டிராக்டரில் வந்து வாக்களித்தார்.

தற்போதைய நிலவரப்படி, ஹரியானாவில் 17.39 சதவீத வாக்குப்பதிவுகள் பதிவாகி இருக்கின்றன.

திங்கள், 21 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon