மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 22 ஜன 2021

சினிமாவல்ல நிஜம்... மாடியில் இருந்து ரிக்‌ஷாவில் விழுந்த குழந்தை!

சினிமாவல்ல நிஜம்...  மாடியில் இருந்து  ரிக்‌ஷாவில் விழுந்த குழந்தை!வெற்றிநடை போடும் தமிழகம்

அதிர்ஷ்டம், நல்வாய்ப்பு, நல்ல நேரம் என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் அந்தக் குழந்தைக்கு. சினிமாவில் நடப்பது போல ஒரு காட்சி மத்தியப் பிரதேசத்தில் நிஜமாகவே நடந்திருக்கிறது.

இரண்டாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஒன்று தவறி கீழே விழ, சரியாக அந்த நேரமாகப் பார்த்து ரிக்‌ஷா ஒன்று அந்த வீட்டை மெதுவாகக் கடக்க, நல்வாய்ப்பாக அந்த ரிக்‌ஷாவின் மீது வந்து விழுந்ததால் உயிர் பிழைத்துவிட்டது அந்தக் குழந்தை.

மத்தியப் பிரதேச மாநிலம் டிகாம்கர் பகுதியைச் சேர்ந்த ஆஷிஷ் ஜெயின் என்பவரின் வீடு இரண்டாவது மாடியில் இருக்கிறது. அக்டோபர் 18 ஆம் தேதி வீட்டு வரண்டாவில் விளையாடிக் கொண்டிருந்தான் ஆஷிஷின் 3 வயது மகன். கூடவே குடும்பத்தினரும் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

இளங்கன்று பயமறியாது என்பதைப் போல மாடியின் ஓரத்தில் நின்று விளையாட்டாய் துள்ளிக் குதித்த அந்த பாலகன் நிலை தடுமாறி அப்படியே கீழே விழுந்துவிட்டான். தலையில் இடி விழுந்ததைப் போல தெறித்துப் போய் கீழே அலறியடித்துக் கொண்டு ஓடியிருக்கிறார்கள் குடும்பத்தினர். கீழே போய்ப் பார்த்தால், மிகச் சரியாக அந்த நொடிக்கு வீட்டு வாசலைக் கடந்த சைக்கிள் ரிக்ஷாவின் சீட் பகுதியில் போய் விழுந்திருக்கிறான்.

”செகண்ட் ஃப்ளோர்ல விளையாடினவன் திடீர்னு கீழே விழுந்துட்டான். நல்லவேளை தெய்வமா அந்த ரிக்‌ஷா காரர் வந்தார்” என்று சிலிர்த்தபடியே சொல்கிறார் அந்த பாலகனின் தந்தை ஆஷிஷ் ஜெயின். உடனே குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார்கள். பயப்படும்படியாக எந்தக் காயமும் இல்லை என்று சொல்லி அந்தக் குடும்பத்தின் நிம்மதியை உறுதிப்படுத்திவிட்டார் டாக்டர்.

35 அடி உயரத்தில் இருந்து சிறுவன் சைக்கிள் ரிக்‌ஷாவில் விழுந்த காட்சி அதே வளாகத்திலிருக்கும் சிசிடிவியில் பதிவாகியிருக்கிறது. இதை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

திங்கள், 21 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon