மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 22 ஜன 2021

பாக்யராஜ் தலைமையில் புதிய சங்கம்!

பாக்யராஜ் தலைமையில் புதிய சங்கம்!வெற்றிநடை போடும் தமிழகம்

திரைப்படங்களில் கதையின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிகர் நடிகைகளை இயக்குநர்களுக்கு அடையாளம் காட்டும் பணியை செய்து வந்தவர்கள் அனைவரும் தென்னிந்தியாவில் ஒன்றிணைந்து 'தென்னிந்திய திரைப்பட நடிப்பு இயக்குநர்கள் மற்றும் நட்சத்திர மேலாளர்கள் சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளனர்.

முன்னணி திரை நட்சத்திரங்களுக்கு மேலாளராக இருப்பவர்கள் இச்சங்கத்தில் ஒரு அங்கமாக இணைக்கப்பட்டுள்ளனர். ‘இச்சங்கம் வரும் காலங்களில் திரைத்துறையில் புதிதாய் வாய்ப்பு தேடுவோர் மற்றும் திரைப்பட இயக்குநர் தயாரிப்பாளர் ஆகியோருக்கு பாலமாக அமையும்’ எனத் தெரிவித்துள்ளனர்.

இதனை வழிநடத்த இயக்குநர் பாக்யராஜ் அவர்களை கௌரவ வழிகாட்டியாகவும், கௌரவ ஆலோசகர்களாக இயக்குநர் பிரபு சாலமன், தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன், நடிகை ஊர்வசி, அர்ச்சனா மற்றும் மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு ஆகியோர் இச்சங்கத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

சங்கத்தின் தலைவராக மனோஜ் கிருஷ்ணா, செயலாளராக ஜெனிஃபர் சுதர்சன், பொருளாளராக வேல் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் துவக்க விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

விழாவில் நடிகர் நாசர் பேசும்பொழுது “நடிக்க வாய்ப்பு தேடுகிறவர்களுக்கும் , நடித்துக்கொண்டிருப்பவர்களுக்கும் மேனேஜர்கள் மிக அவசியம். அப்படிப்பட்ட மேனேஜர்கள் யூனியனாக செயல்படுவது, தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். கேஸ்ட்டிங் டைரக்டர் பணி தமிழ் சினிமாவில் இன்னும் முக்கியத்துவமானதாக இல்லை. இனி அந்த வேலையும் முக்கியமானதாக இருக்கும். இந்த சங்கத்தினருக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு” என்றார்.

விழாவில் நடிகர் நாசர், பாக்யராஜ், ராதாரவி, அஸ்வின், அசோக், கவுதமி, தேஜாஸ்ரீ, நமீதா, சாக்‌ஷி அகர்வால், அர்ச்சனா, உள்ளிட்ட திரைத்துறை நடிகர் நடிகைகள் பலர் கலந்துகொண்டனர்.

திங்கள், 21 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon