மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 22 ஜன 2021

இடைத் தேர்தல்: வாக்குப் பதிவு ஆரம்பமானது!

இடைத் தேர்தல்: வாக்குப் பதிவு ஆரம்பமானது!வெற்றிநடை போடும் தமிழகம்

தமிழகம், புதுச்சேரியில் இடைத் தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் வாக்குப் பதிவு ஆரம்பமானது.

தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரியின் காமராஜர் நகர் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு இன்று (அக்டோபர் 21) காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்குச் செலுத்தி வருகின்றனர். இடைத் தேர்தலுக்காகப் பல்வேறு ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வனும், திமுக சார்பில் புகழேந்தியும் பிரதான வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். தொகுதியில் ஒட்டுமொத்தமாக 2.23 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்குப் பதிவு நடைபெற்றுவரும் 275 வாக்குச் சாவடிகளில் 61 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு அவற்றுக்குக் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்குப் பதிவு முழுவதும் வெப்-காஸ்டிங் செய்யப்பட உள்ளது. தேர்தல் பணிகளில் 1,330 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாங்குநேரி

நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் நாராயணனும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரனும் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர். தொகுதியில் மொத்தமுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 2,57,418. வாக்குப் பதிவு நடைபெறவுள்ள 299 வாக்குச் சாவடிகளில் 151 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளன.

இரண்டு தொகுதிகளின் வாக்குப் பதிவு பாதுகாப்புப் பணிகளில் 1,800க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும், ஆறு கம்பெனி துணைநிலை ராணுவத்தினர், மூன்று கம்பெனி தமிழ்நாடு சிறப்புப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

வாக்குப் பதிவையொட்டி விழுப்புரம், தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்குமாறு தொழிற்சாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கே முடிந்த நிலையில், வெளியூரிலிருந்து வந்து தேர்தல் பணியாற்றிய தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் தொகுதியிலிருந்து வெளியேறினர். சில நிர்வாகிகள் தொகுதிக்கு வெளியே அருகாமையில் இருக்கும் இடங்களில் தங்கி, செல்போன் மூலமாக உள்ளூர் நிர்வாகிகளுக்குத் தேர்தல் பணிகள் தொடர்பாக அறிவுறுத்தி வருகின்றனர்.

காமராஜர் நகர் தொகுதி

காமராஜர் நகர் தொகுதியில் 35,023 வாக்காளர்கள் உள்ளனர். 21 இடங்களில் 32 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அதில் ஏழு பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இங்கு 523 போலீசார், துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மூன்று தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவுறுகிறது. வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக தேர்தல் ஆணையம் தரப்பிலிருந்து பல்வேறு வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 24ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

ஞாயிறு, 20 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon