மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

டிஜிட்டல் திண்ணை: ரஜினி - பாஜக - முருகதாஸ்: அரசியல் தர்பார்!

டிஜிட்டல் திண்ணை: ரஜினி - பாஜக - முருகதாஸ்: அரசியல் தர்பார்!

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. தயாராக இருந்த மெசேஜுக்கு சென்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.

“இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்குப் பெரிய அறிமுகம் தேவை இல்லை. கமர்ஷியல் இயக்குநர். விஜய்காந்துக்கு ரமணா, அஜித்துக்கு தீனா ,விஜய்க்கு துப்பாக்கி, கத்தி, சர்க்கார், சூர்யாவுக்கு கஜினி, ஏழாம் அறிவு என ஹிட் கொடுத்த இயக்குநர்.

முருகதாஸ் படம் என்றாலே ஆக்‌ஷன் இருக்கும் அளவுக்கு அரசியலும் இருக்கும். ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் அரசியல்வாதிகளை வெச்சு செய்வார். சர்க்கார் படத்தில் அரசாங்கம் கொடுத்த இலவசப் பொருட்களைத் தீயிட்டுக் கொளுத்துவதுபோல காட்சி வைத்தார். அதிமுகவினர் சர்க்காருக்கு எதிராக கொந்தளித்தார்கள். தியேட்டருக்கு முன்பு போராட்டங்கள்

நடத்தினார்கள். அதன் பிறகே அந்தக் காட்சியை வெட்டினார் முருகதாஸ்.

ரமணா படத்தில் டாக்டர்கள் மீது முருகதாஸ் கோபம் திரும்பியது எல்லாம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். இப்படியான முருகதாஸ் தற்போது ரஜினியை வைத்து தர்பார் படத்தை இயக்கி வருகிறார். தர்பார் பட ஷூட் முழுக்கவே மும்பையில்தான் நடந்தது. இந்தப் படத்தில் ரஜினிக்கு மும்பை போலீஸ் ஆபீஸர் கேரக்டர். படத்தில் மத்திய அரசை உரசிப் பார்ப்பது போல சில காட்சிகளும் வசனங்களும் வைக்கப்பட்டு இருந்தன. ஷூட்டிங் சமயத்தில் இதுதொடர்பாக ரஜினி எதுவுமே பேசவில்லை.

அதன்பிறகு, பிஜேபியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவர் முருகதாஸைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார். ஆனால், முருகதாஸ் சந்திக்கவில்லை. ரஜினி மூலமாக அந்தப் பிரமுகர் முருகதாஸைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது, ‘உங்க படத்துல மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து போல சில காட்சிகள் வெச்சிருக்கீங்கன்னு எங்களுக்கு சொன்னாங்க. படம் வந்த பிறகு அதுக்கு ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று நடத்துவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. உங்களுக்கும் எங்களுக்கும் என்ன பிரச்சினை? எதுக்காக எங்களைச் சீண்டிப் பார்க்கணும்னு நினைக்கிறீங்க? உங்க வேலையை நீங்க பாருங்க. எங்க வேலையை நாங்க பார்க்கிறோம்’ என்று சொல்லியிருக்கிறார்.

முருகதாஸ் சில விளக்கங்களைக் கொடுத்தும் அந்த பிஜேபி பிரமுகர் சமாதானம் ஆகவில்லை. ஒருகட்டத்தில், ‘வருமான வரியெல்லாம் கரெக்டா கட்டிட்டு இருக்கீங்களா?’ எனக் கேட்டிருக்கிறார் அந்தப் பிரமுகர். அதன் பிறகே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.

‘எந்த சங்கடமும் வராமல் பார்த்துக்கலாம்...’ என முருகதாஸ் தரப்பில் இருந்து உறுதி கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். இது தொடர்பாக அதன் பிறகு ரஜினியே முருகதாஸிடம் பேசியதாகவும் தகவல். ‘பிஜேபியை கண்ணை மூடிட்டு எல்லோரும் எதிர்த்துட்டு இருக்காங்க. அவங்க நல்லது பண்ணினால் பாராட்டலாம். தப்பு செஞ்சா தட்டிக் கேட்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார் ரஜினி. அதன்பிறகு முருகதாஸ் கொஞ்சம் அடக்கியே வாசிக்க ஆரம்பித்ததாகச் சொல்கிறார்கள்.

அண்மையில் தர்பார் படம் தொடர்பாக வார இதழ் ஒன்றில் முருகதாஸ் பேசியபோது, ’மத்திய அரசைப் பொறுத்தவரைக்கும் இந்தியா முழுக்க வரவேற்பு, செல்வாக்கு அதிகரிச்சிட்டே போகுது. ஆனா, தமிழ்நாட்டுல மட்டும் எதிர்ப்பு. தமிழகத்தை அழிக்கப் பார்க்குறாங்க, நசுக்கப் பார்க்குறாங்கன்ற மாதிரியான பிம்பம் இங்கே இருக்கு. இது உண்மையா, இல்லை உருவாக்கப்பட்டதான்னு என்னால உறுதியாச் சொல்ல முடியல. இந்த டிஜிட்டல் யுகத்துல காலைல ஒருத்தரை நல்லவராவும், அதே ஆளை சாயங்காலம் கெட்டவராவும் சித்திரிக்க முடியும்’ என்று சொல்லி இருக்கிறார்.

அதாவது மற்ற மாநிலங்களில் எல்லாம் பிஜேபிக்கு வரவேற்பு இருக்கிறது. தமிழகத்தில் மட்டும்தான் அந்தக் கட்சியை எதிர்க்கிறோம் என்பதை இதைவிட வெளிப்படையாக எப்படி சொல்ல முடியும் எனக் கேட்கிறார்கள் விவரமறிந்தவர்கள். முருகதாஸை வைத்தே பிஜேபி மறைமுக பிரச்சாரத்தைத் தமிழகத்தில் தொடங்கிவிட்டது என்றும் அவர்கள் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள்” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்த ஃபேஸ்புக், ‘அப்படின்னா இது பிஜேபி தர்பார்!’ என்று கமென்ட் போட்டுவிட்டு சைன் அவுட் ஆனது.

வெள்ளி, 18 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon