மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

நாங்குநேரி: தரவுகள் சொல்லும் உண்மை!

நாங்குநேரி: தரவுகள் சொல்லும் உண்மை!

நான்கு ஏரிகளுக்கு இடைப்பட்ட பகுதி. நான்கு ஏரிகளின் கரைகளும் கூன் முதுகைப் போன்று வளைந்திருப்பதால் நான்கூன் ஏரி என்று அழைக்கப்பட்டு அது மருவி நாங்குநேரி ஆயிற்று என்று இந்தப் பெயருக்குக் காரணம் கூறுகிறார்கள்.

காங்கிரஸின் வரலாற்றுக் கோட்டையாக இருந்த நாங்குநேரியில் 1952, 57, 62 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியே வெற்றிபெற்றது. 1967இல் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்த நிலையிலும்கூட நாங்குநேரி காங்கிரஸ் தொகுதியாகவே நீடித்தது.

1971ஆம் ஆண்டு இந்திரா காந்தியோடு கலைஞர் கூட்டணி வைத்து சந்தித்த தேர்தலில்தான் முதன்முறையாக நாங்குநேரியில் திமுக வெற்றி பெற்றது. அதன்பின் ஜனதா, அதிமுக, திமுக என நாங்குநேரியில் யார் ஜெயித்தாலும் காங்கிரஸ் ஆதரவு அதற்கு முக்கியமானதாக இருந்தது. பல தேர்தல்களுக்குப் பின் 2006இல் காங்கிரஸ் மீண்டும் நாங்குநேரியில் போட்டியிட்டு வென்றது.

நாங்குநேரியில் அதிமுக, திமுக ஆகிய இரு பெரும் அணிகள் முக்கிய வாக்கு வங்கிகளைப் பெற்றிருக்கின்றன. காங்கிரஸ் இந்த வாக்கு வங்கியின் பிரதானமாக இருக்கிறது. காங்கிரஸ் சார்பை வைத்துதான் இரு பெரும் அணிகளின் வாக்கு வங்கி நிர்ணயிக்கப்படுகிறது.

2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும் காங்கிரஸும் கூட்டணி வைத்து போட்டியிட்டபோது நாங்குநேரி தொகுதியில் அதிமுக நின்றது. அப்போது காங்கிரஸ், தமாகா எல்லாம் ஒரே அணியில் இருந்த நிலையில், நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் 46,619 வாக்குகள் பெற்று பதிவான வாக்குகளில் 51.54 சதவிகிதம் பெற்றார். அப்போது திமுக கூட்டணியில் மக்கள் தமிழ் தேசம் கட்சியின் வேட்பாளர் போட்டியிட்டார். திமுகவின் கூட்டணி பலத்தோடு களம்கண்ட அவர் 41.41 சதவிகித வாக்குகள் பெற்று 37,458 வாக்குகள் வாங்கினார். இதே தேர்தலில் மதிமுக தனியாகக் களமிறங்கி 3 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றது.

2006 தேர்தலில் நீண்ட நாட்களுக்குப் பின் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் பதிவான வாக்குகளில் 51.76 சதவிகிதம் ஓட்டுகளைப் பெற்று திமுக - காங்கிரஸ் கூட்டணியில் வெற்றி பெற்றார்.

இந்த இரு பெரும் வாக்கு வங்கிகளுக்கு அடுத்த வாக்கு வங்கி என்பது இத்தொகுதியைப் பொறுத்தவரை சற்று தூரத்திலேயே இருக்கிறது. கிராமங்கள் நிறைந்த இந்தத் தொகுதியில் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கணிசமான வாக்குகளைப் பெற்று வந்திருக்கிறது என்பதை நாம் இங்கே கருத்தில்கொள்ள வேண்டும். 2006 தேர்தலில் ஃபார்வர்டு பிளாக் தனித்து நின்று 6,869 வாக்குகளைப் பெற்று 6.56 சதவிகிதத்தைக் கைப்பற்றியது. 2016 தேர்தலில் ஃபார்வர்டு பிளாக்கின் வாக்கு சதவிகிதம் 8.24 ஆக அதிகரித்துள்ளது. எனவே ஃபார்வர்டு பிளாக்கின் வாக்குகள் இந்தத் தொகுதியின் முடிவில் முக்கிய கூட்டுக் காரணியாக விளங்குகிறது.

அதேபோல 2006, 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களில் இந்தத் தொகுதியில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் 1.28 என ஆரம்பித்து 3.71, 3.83 என உயர்ந்துகொண்டிருக்கிறது. 2016 சட்டமன்றத் தேர்தலில் நாங்குநேரியில் பாஜக 6,609 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. தேமுதிகவும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 9,446 வாக்குகள் பெற்றுள்ளது.

நாம் தமிழர் கட்சியும் இந்தச் சட்டமன்றத் தொகுதியில் கடந்த மக்களவைத் தேர்தலில் 4 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மக்களவைத் தேர்தலில் நெல்லை தொகுதிக்கு உட்பட்ட நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் திமுக - காங்கிரஸ் அணி 51.22 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. அதிமுக அணி 30.62 சதவிகிதம் பெற்றிருக்கிறது.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் இரு பெரும் அணிகளின் வாக்குப் பங்கீடும் இதே விகிதத்தில் இருக்குமா அல்லது மாற்றங்கள் ஏற்படுமா என்பதை தேர்தல் முடிவு சொல்லும்!

வியாழன், 17 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon