மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 24 பிப் 2020

முஸ்லிம்களுக்கு எதுக்கு செஞ்சு தரணும்?: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

முஸ்லிம்களுக்கு எதுக்கு செஞ்சு தரணும்?: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இடைத்தேர்தல் பணிக்காக நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். அவரிடம் மனு கொடுப்பதற்காகச் சென்ற இஸ்லாமியர்கள் மனம் புண்பட்டுத் திரும்பியுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் இதழில், ராஜேந்திரபாலாஜியை நாங்குநேரிக்கு அனுப்பாதீர்கள்: முதல்வருக்குச் சென்ற தகவல் என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம்.

அதில், “அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் பேச்சுகள் மற்ற அமைச்சர்களைக் காட்டிலும் எல்லைத் தாண்டிப் போய்விட்டது. அவரை நாங்குநேரி தொகுதியில் பிரசாரத்துக்கு அனுப்பினால் விரும்பத் தகாத வார்த்தைகளைப் பேசி மக்களிடம் மேலும் நமக்கு பெயர்தான் கெடும். அவர் விருதுநகரில் பேசியபோது போல் நாங்குநேரியில் பேசினால் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் குவியும் இடத்தில் சுமுகமாக இருக்காது. சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் கூட ஏற்படும். எனவே ராஜேந்திரபாலாஜியை தேர்தல் பணிக்கு அனுப்ப வேண்டாம். அப்படி அனுப்பினால் பக்குவமாக பேசும்படி எச்சரிக்கை செய்து அனுப்புங்கள்” என்று முதல்வருக்கு அதிமுக பிரமுகர்கள் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். இதற்கு முதல்வர் தரப்பில் இருந்து இன்னும் அவர்களுக்கு பதில் கிடைக்கவில்லை” என்று அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

அந்த அதிமுக பிரமுகர்கள் அச்சப்பட்டபடியே நேற்று (அக்டோபர் 16) நாங்குநேரி தொகுதிக்குள் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

அதை களக்காடு ஒன்றியம் கேசவனேரி பகுதியின் ஜமாத் தலைவர் முகமது ஷெரிப் என்கிற ஃபைசல் நம்மிடம் அலைபேசியில் விளக்கினார்.

“நேற்று முன் தினம் களக்காட்டில் இருந்து வந்த ஒரு நிருபர் எங்களிடம், ‘அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தேர்தல் பணிக்காக இங்கதான் இருக்காரு. அவர் உங்களை கூப்பிட்டு விட்டாரு. நீங்க ஜமாத் சார்பா அவரை வந்து பாருங்க. பள்ளிவாசலுக்கு ஏதும் தேவைன்னா அவர்கிட்ட கோரிக்கை வைங்க செய்துகொடுப்பாரு’ என்று சொன்னார்.

’பள்ளிவாசலின் கோரிக்கை அப்புறம் இருக்கட்டும். எங்கள் ஊருக்கு பொதுவான கோரிக்கை இருக்கிறது. ரேஷன் கடை எங்கள் ஊரில் இல்லை’ என்று சொன்னபோது அமைச்சரை நாளைக்கு காலையில பத்தரை மணி போல வந்து பாருங்க என்று அவர் சொன்னார்.

எங்கள் ஊரான கேசவனேரி, அருகே இருக்கும் கீழ கேசவநேரி, கட்டார்குளம் ஆகிய மூன்று ஊர்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ரேஷன் கடைக்காக நான்கு கிலோ மீட்டரில் இருக்கும் கல்லடி சிதம்பராபுரத்துக்கு போக வேண்டியிருக்கிறது. காடு போன்ற பாதையைக் கடந்துதான் போகவேண்டும். இதனால் பெண்கள் ரேஷன் கடைக்கு சென்று வருவது சிரமமாக இருக்கிறது. எனவே கேசவநேரியில் ஒரு ரேஷன் கடை தொடங்க வேண்டும். ஏற்கனவே இங்கே பஞ்சாயத்து ரேடியோ ரூம் ஒன்று பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. அதிலே கூட ரேஷன் கடையை வைத்துக் கொள்ளலாம் என்று மனு எழுதிக் கொண்டு நானும், ஜமாத் நிர்வாகிகள் ஒரு ஐந்து பேரும் நேற்று காலை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை சந்திக்கச் சென்றோம்.

அமைச்சர் அருகே உள்ள கருவேலங்குளத்தில் ஒரு வீட்டில் தங்கி தேர்தல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். நேற்று காலை பத்தரை மணிக்கு நாங்கள் கருவேலங்குளம் சென்றபோது, அமைச்சர் அப்போதுதான் வீட்டு வாசலில் இருந்து வெளியே வந்து தன் காரில் ஏறி அமர்ந்திருந்தார். வெளியூர் காரர்கள் நிறையே பேர் அங்கே இருந்தனர்.

அப்போது எங்களை வரச்சொன்ன அந்த நிருபரும் அங்கே நின்றிருந்தார். அவர்தான் அமைச்சரிடம் எங்களைக் காட்டி, ‘இவர் பக்கத்து ஊர் கேசவனேரி ஜமாத் தலைவர்...’ என்று அறிமுகப்படுத்தினார். அப்போது அமைச்சர் எங்களைப் பார்த்து எடுத்த எடுப்பிலேயே, ‘முஸ்லிம்கதான் எங்களுக்கு ஓட்டுப் போட மாட்டீங்களே... அப்புறம் நாங்க ஏன் உங்களுக்கு பண்ணித் தரணும்? போங்க, மனுவைக் கொண்டுட்டு திரவியத்துட்ட போய் கொடுங்க.(திமுக எம்பி ஞானதிரவியம்)

நீங்களும் ஓட்டுப் போட மாட்டீங்க. கிறிஸ்டினும் எங்களுக்கும் ஓட்டுப் போட மாட்டாங்க. பிஷப், பாதிரியார்லாம் கூப்பிட்டுச் சொல்லிடுவாங்க. நீங்க ரெண்டு பேரும் எங்களுக்கு ஓட்டுப் போட மாட்டீங்க. அப்புறம் ஏன் உங்களுக்கு நான் செஞ்சு தரணும்?

பிஜேபி கூட நாங்க கூட்டணி இருக்கிறதால மோடி ஏதோ தமிழ்நாட்ல ஆட்சி செய்யுறமாதிரி நீங்க நினைக்கிறீங்க. ஆனா எடப்பாடிதான் ஆட்சி செய்யுறாரு. இப்படியே நீங்க எங்களை புறக்கணிச்சீங்கன்னா, ஜம்மு காஷ்மீர்ல உங்கள ஒதுக்கிவச்ச மாதிரி இங்கயும் ஒதுக்கி வக்க வேண்டியிருக்கும். வெறும் 5% இருக்குற உங்களால என்ன செய்ய முடியும்?’ என்று அமைச்சர் சொல்லச் சொல்ல நாங்கள் அதிர்ந்து போய்விட்டோம்.

மனுவை வாங்கிட்டு, சரி தம்பி நான் பாக்குறேன் என்றுதான் அமைச்சர் சொல்வார் என எதிர்பார்த்துதான் நாங்கள் போனோம். ஆனால் அமைச்சர் இவ்வளவு தூரம் பேசுவார்னு நாங்க எதிர்பார்க்கவே இல்லை. இந்த வார்த்தைகள் பேசுவார்னு நாங்க எதிர்பாக்கவே இல்லை. அவர் மனசுல இப்படிப்பட்ட வார்த்தைகள் இருக்கானு எங்களுக்கே ஒரு மாதிரியாய் ஆகிவிட்டது. நாங்கள் கொண்டு போன மனுவை அவருக்கு எதிரிலேயே கிழித்துப் போட்டுவிட்டு வந்துவிட்டோம். அவரும் காரில் கிளம்பிப் போய்விட்டார்” என்று அந்த கருவேலங்குளத்துக் காட்சியை விவரித்து முடித்தார்.

தொடர்ந்து நம்மிடம் பேசிய ஃபைசல், “நாங்கள் பள்ளிவாசலுக்காக கூட எதுவும் கேட்கப் போகவில்லை. ஊருக்கு ரேஷன் கடைதான் கேட்கப் போனோம். எங்களிடம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இப்படி பேசுவார் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. அவர் இஸ்லாமியர்களைப் பற்றி என்ன புரிதலில் இருக்கிறார் என்பதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. ஜமாத்தில் ஆலோசித்து அடுத்த கட்டம் செய்ய வேண்டியது பற்றி முடிவு செய்வோம்” என்று முடித்தார் முகமது ஷெரிஃப் என்கிற பைசல்.

அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை இது தொடர்பாக தொடர்புகொள்ள முயன்றபோது முடியவில்லை. அவரது பதில் கிடைத்தாலும் மின்னம்பலம் பிரசுரிக்கத் தயாராகவே இருக்கிறது.

வியாழன், 17 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon