மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

டிஜிட்டல் திண்ணை: சசிகலா ஆதரவு -அமைச்சர்கள் நிலை என்ன?

டிஜிட்டல் திண்ணை: சசிகலா ஆதரவு -அமைச்சர்கள் நிலை என்ன?

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ்அப் ஆன்லைனுக்கு வந்தது.

 "பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா கண்களில் நீர் வடிந்து கொண்டும் சர்க்கரை அதிகமானதாலும் கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில்... அதிமுகவில் மீண்டும் அவர் பெயரைச் சொல்லி புயல் அடிக்க ஆரம்பித்திருக்கிறது.

சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று முதல்வரும் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி தெளிவாக இருக்கும் நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும்  துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் சசிகலா அதிமுகவில் சேர்க்கப்படுவது பற்றி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி இடைத்தேர்தலில் அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே பெரும் பேச்சாக இருக்கிறது.

சத்தியத்தின் கோட்டைக்குள் சாத்தான்களை விட மாட்டோம் என நமது அம்மா நாளிதழில் கவிதை எழுதச் சொல்லி உத்தரவு போட்டது எடப்பாடி பழனிச்சாமி என்பதை அறிந்து கொண்ட பன்னீர்செல்வம், சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது பற்றி தலைமைக் கழகம் முடிவு செய்யும் என கொஞ்சம் இறங்கிவந்து பேட்டி கொடுத்தது எடப்பாடிக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கான காரணங்கள் பற்றி முதல்வர் தரப்பு விசாரிக்க ஆரம்பித்தது.  பன்னீர்செல்வம் தன் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கேட்டு கடந்த 5 மாதங்களாக போராடியும் எந்த பதிலும் இல்லை. மேலும் கட்சிக்குள் எடப்பாடிபழனிசாமி செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.ஒருவேளை இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிட்டால் அது பன்னீரின் தலைமை என்பதைவிட எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை என்பது தான் அதிகமாக காட்டப்படும் என்று பன்னீர் கருதுகிறார். அதனால்தான் இடைத் தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு குண்டை தூக்கி அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மத்தியில் வீசியிருக்கிறார்.

சென்ற இடமெல்லாம் எடப்பாடி பழனிசாமி தன் ஆளுமையை நிலை நிறுத்திக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் சசிகலாவை திடீரென கட்சிக்கு கொண்டு வருவது பற்றிய பேச்சு இப்போதைக்கு தேவையில்லை. ஆனால் பன்னீர் தனக்கு எதிராகவே இப்படி ஒரு முயற்சியை பகிரங்கமாக செய்கிறார் என்று எடப்பாடி பழனிச்சாமி நெருக்கமான அமைச்சர்களிடம் கூறியிருக்கிறார்.

ஆனால் பன்னீர் தரப்பினரோ ஒரே ஒரு கணக்கு மட்டும் சொல்கிறார்கள். இப்போது எடப்பாடி கட்சிக்குள் ஒரு எதேச்சதிகார முதல்வராக உருவாகிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு ஆதரவாக கொங்கு மண்டலத்தை சேர்ந்த 6 அமைச்சர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள். சசிகலா கட்சிக்குள் வருவது பற்றி பன்னீர் பேச ஆரம்பித்ததும் ராஜேந்திர பாலாஜி உட்பட பல அமைச்சர்கள் வெளிப்படையாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.  மொத்த அமைச்சர்களில் எடப்பாடிக்கு நெருக்கமான கொங்கு அமைச்சர்களை தவிர மற்ற அனைவரும் சசிகலாவின் வரவை எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்கிறார் பன்னீர் தரப்பைச் சேர்ந்த அந்த சீனியர்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

புதன், 16 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon