�இறுதி கட்டத்தில் அயோத்தி வழக்கு: மெகா கூட்டத்துக்கு ஆர்.எஸ்.எஸ்.அழைப்பு!

public

உத்தரப் பிரதேசத்தில் அயோத்தி நகரில் ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டதாகக் கூறி பாபர் மசூதி இடித்து நொறுக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையிலிருந்து வருகிறது. கடந்த விசாரணையின் போது ராமஜென்மபூமி–பாபர் மசூதி நில உரிமை விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காக உச்ச நீதிமன்றம் மூவர் குழுவை அமைத்தது. ஓய்வு பெற்ற நீதிபதி இப்ராகிம் கலிஃபுல்லா தலைமையில், ஆன்மிகவாதி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் உறுப்பினர்களாகக் கொண்ட மத்தியஸ்தர் குழு அமைக்கப்பட்டது. மத்தியஸ்தர் குழு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து கடந்த மாதம் 6 ஆம் தேதி முதல் உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது. தலைமை நீதிபதி நவம்பர் 17 ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக தீர்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த முடிவு விரைவில் வரும் என்பதால் அயோத்தியில் டிசம்பர் 10 ஆம் தேதி வரையில் 144 தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை குறித்து இன்று (அக்டோபர் 16) கருத்து தெரிவித்துள்ள தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், 40ஆவது நாள் விசாரணை இன்று நடைபெறுகிறது இன்றுடன் விசாரணை நிறைவு பெறும். முடிந்தது முடிந்ததுதான். இன்று மாலை 5 மணிக்குள் அனைத்து தரப்பு வாதங்களையும் முடிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்து மகாசபை சார்பில் தங்களையும் வழக்கில் ஒரு மனுதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது. மாலை 5 மணிக்குள் விசாரணை நிறைவடையவுள்ள நிலையில், இந்து தரப்பில் வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜராகி வாதாடினார். அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என்பது இந்துக்களின் நீண்ட கால நம்பிக்கை. உலகில் ராம ஜென்ம பூமி அயோத்தியில் மட்டுமே இருக்கிறது. எனவே, அங்கு மட்டுமே இந்துக்களால் ராம ஜென்ம பூமி என்ற பிணைப்புடன் வழிபட முடியும். முஸ்லிம்களுக்கு வேறு பல வழிபாட்டுத் தலங்கள் இருக்கலாம். எங்களிடம் இது மட்டுமே உள்ளது என்று வாதிட்டுள்ளார்.

இதற்கிடையில் இந்து மகாசபா சார்பில் சமர்ப்பித்த புத்தகத்தை முஸ்லீம் தரப்பு வழக்கறிஞர் கிழித்துள்ளார். இதற்கு அதிருப்தி தெரிவித்த தலைமை நீதிபதி, வழக்கறிஞர் இவ்வாறு நடந்து கொண்டால், நாங்கள் எழுந்து சென்றுவிடுவோம். இப்படி நடப்பது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக உள்ளது என்று எச்சரித்துள்ளார்.

தொடர்ந்து வாதங்கள் நடைபெற்று வருகிறது. விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அயோத்தி விவகாரத்துக்காக அக்டோபர் 31 முதல் நவம்பர் 4 வரை ஹரித்வாரில் மெகா கூட்டம் நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், சுரேஷ் பய்யாஜி ஜோஷி, தத்தாத்ரேயா ஹோசபாலே, டாக்டர் கிருஷ்ணா கோபால், மற்றும் விஎச்பி செயல் தலைவர் அலோக் குமார் உள்ளிட்ட அனைத்து ஆர்எஸ்எஸ் செயற்பாட்டாளர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *