மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

தீபாவளி போனஸ்: லாப நிறுவன ஊழியர்களுக்கு 20% - நஷ்ட நிறுவன ஊழியர்களுக்கு 10%

தீபாவளி போனஸ்: லாப நிறுவன ஊழியர்களுக்கு 20% - நஷ்ட நிறுவன ஊழியர்களுக்கு 10%

தமிழக அரசு ஊழியர்களுக்கு, தீபாவளி போனஸ் அறிவிப்பை நேற்று (அக்டோபர் 15) தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015இன்படி, 2018-19ஆம் ஆண்டுக்கான போனஸ் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21,000 என உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பும் ரூ.7,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 2018-19ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத்தொகை கீழ்க்கண்டவாறு வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

* லாபம் ஈட்டியுள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்த நிறுவனங்கள் ஒதுக்கக்கூடிய உபரி தொகையைக் கணக்கில்கொண்டு 8.33 சதவிகித போனஸ் மற்றும் 11.67 சதவிகிதம் கருணைத்தொகை என மொத்தம் 20 சதவிகிதம் வரை போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும்.

* நஷ்டம் அடைந்துள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 சதவிகிதம் குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 சதவிகிதம் கருணைத்தொகை என மொத்தம் 10 சதவிகிதம் போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும்.

* தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 சதவிகிதம் போனஸ் மற்றும் 11.67 சதவிகிதம் கருணைத்தொகை என மொத்தம் 20 சதவிகிதம் போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும்.

* லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத்தொகையுடன் மொத்தம் 20 சதவிகிதம் வரையிலும் ஒதுக்கக்கூடிய உபரி தொகைக்கு ஏற்ப வழங்கப்படும். பிற கூட்டுறவுச் சங்கங்களில் பணியாற்றும் அனைத்துத் தகுதியுடைய பணியாளர்களுக்கும் 8.33 சதவிகிதம் குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 சதவிகிதம் கருணைத்தொகையும் வழங்கப்படும்.

* அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வனத்தோட்ட கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு, அந்த நிறுவனங்களின் ஒதுக்கக்கூடிய உபரித் தொகையைக் கருத்தில்கொண்டு 8.33 சதவிகிதம் போனஸ் மற்றும் 11.67 சதவிகிதம் கருணைத்தொகையோ அல்லது 8.33 சதவிகிதம் போனஸ் மற்றும் 1.67 சதவிகிதம் கருணைத்தொகையோடு வழங்கப்படும்.

* தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவிகிதம் போனஸ் மற்றும் 11.67 சதவிகிதம் கருணைத்தொகை என மொத்தம் 20 சதவிகிதம் போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும்.

* தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்குச் சென்ற ஆண்டு வழங்கப்பட்டதைப்போல, இந்த ஆண்டும் 8.33 சதவிகிதம் போனஸ் மற்றும் 1.67 சதவிகிதம் கருணைத்தொகையும் வழங்கப்படும்.

* தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்குச் சென்ற ஆண்டு வழங்கியதைப் போல 8.33 சதவிகிதம் போனஸ் வழங்கப்படும்.

* ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டியுள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவிகிதம் போனஸ் மற்றும் 11.67 சதவிகிதம் கருணைத்தொகை என மொத்தம் 20 சதவிகிதம் போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும். ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டாத தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவிகிதம் போனஸ் மற்றும் 1.67 சதவிகிதம் கருணைத்தொகை என மொத்தம் 10 சதவிகிதம் வழங்கப்படும்.

* இது தவிர, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 4,000 ரூபாயும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000 ரூபாயும், போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்டக் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000 ரூபாயும், தொடக்கக் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2,400 ரூபாயும் கருணைத்தொகையாக வழங்கப்படும்.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் 8,400 ரூபாயும், அதிகபட்சம் 16,800 ரூபாயும் பெறுவர். மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து 48 ஆயிரத்து 503 தொழிலாளர்களுக்கு 472 கோடியே 65 லட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணைத்தொகையாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கிறது அரசு.

புதன், 16 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon