மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 15 ஆக 2020

காந்தி தற்கொலை செய்து கொண்டாரா? சர்ச்சை கேள்வி!

காந்தி தற்கொலை செய்து கொண்டாரா? சர்ச்சை கேள்வி!

1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது நாம் அறிந்ததே.தேசத் தந்தை என்றழைக்கப்படும் காந்தியின் மரணம் குறித்த வரலாறு நாடு முழுவதும் அறியப்பட்ட நிலையில் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கேள்வித்தாளில் காந்தி குறித்துக் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

சுபலாம் ஷாகா விகாஸ் சங்குல் என்ற அமைப்பு குஜராத் மாநிலம் காந்திநகரில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் கீழ் பல சுயநிதி பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளுக்கு சுபலாம் ஷாகா விகாஸ் சங்குல் அமைப்பு தேர்வு வினாத்தாளை தயாரித்து வழங்குகிறது.

கடந்த 12ஆம் தேதி இந்த அமைப்பின் கீழ் இயங்கும் பள்ளி ஒன்றில் உள்ளீட்டு மதிப்பெண் தேர்வு நடைபெற்றது. 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில், காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்? என்று கேட்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை நடந்தால், அதுதொடர்பாக போலீசிடம் எவ்வாறு புகார் அளிப்பீர்கள்? சட்டவிரோத செயல்புரிபவர்களால், எத்தகைய இன்னல்களை அனுபவிக்கிறீர்கள் என்பது குறித்த மற்றொரு சர்ச்சைக்குரிய கேள்வியையும் எழுப்பியுள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள மாவட்ட கல்வித்துறை அதிகாரி பரத் வதேர், ”இந்த கேள்விகள் மிகவும் ஆட்சேபிக்கத்தக்கவை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் இந்த கேள்வித்தாள் தயாரிப்பில், மாநில கல்வித்துறைக்குப் பங்கில்லை” என்று தெரிவித்துள்ளார்.

திங்கள், 14 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon