மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 15 ஆக 2020

பிகில் சென்சார் தொடங்கியது!

பிகில் சென்சார் தொடங்கியது!

கடந்த சில வருடங்களாக தீபாவளியன்று படத்தை ரிலீஸ் செய்வதை திட்டமிட்டு செய்துகொண்டிருக்கும் நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வருமா வராதா என்கிற சந்தேகம் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் இருந்து வந்தது. ஆனால், எல்லா பிரச்னைகளையும் கடந்து இன்று(14.10.2019) மதியம் 3 மணிக்கு பிகில் திரைப்படம் சென்சார் அதிகாரிகளுக்குத் திரையிடப்படுகிறது.

மெர்சல், சர்க்கார் ஆகிய இரண்டு படங்களும் கதைத்திருட்டு, வியாபாரப் பஞ்சாயத்து ஆகியவற்றில் சிக்கிக்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியது. படம் வெளியானதற்கு பின்னால் ஆளுங்கட்சி, மற்றும் அரசியல்வாதிகளின் விமர்சனத்திற்கு உள்ளாகி பரபரப்பை ஏற்படுத்தி படம் வெற்றி பெற்றது.

பிகில் திரைப்படத்தை பொறுத்தவரை கதை திருட்டு, பைனான்ஸ் பிரச்சனை போன்ற எந்தவிதமான சர்ச்சைகளும் இல்லை. சொந்த முதலீட்டில் படம் தயாரிக்கும் நிறுவனங்கள் தமிழ்சினிமாவில் மிகவும் குறைவு. அவற்றில் ஏஜிஎஸ் நிறுவனமும் ஒன்று. அதனால் பைனான்ஸ் பிரச்னை ஏற்படுவதற்கும் வாய்ப்பு இல்லை.

படத்தின் ஆடியோ வெளியீட்டில் விஜய் பேசிய அரசியல் சார்ந்த சில விஷயங்கள் ஆளுங்கட்சியை கோபப்படுத்தியது. இதனால் படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்படும் என்று முதல்வர் அலுவலக வட்டாரத்தில் கூறப்பட்டு வந்தது .

அப்படிப்பட்ட ஒரு நெருக்கடி, மத்திய மாநில அரசுகளால் பிகில் திரைப்படத்திற்கு ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தரப்பில் அழுத்தமாக கூறப்பட்டது. இந்த சூழலில் மதியம் 3 மணிக்கு சென்னையில் உள்ள NFDC திரையரங்கில் தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக பிகில் திரைப்படம் தணிக்கைத் துறை அதிகாரிகளுக்குத் திரையிடப்பட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

விஜய் ரசிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிகில் திரைப்படம் என்ன சான்றிதழ் பெறப்போகிறது என்பது இன்று மாலை தெரிந்துவிடும்.

திங்கள், 14 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon