மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 25 செப் 2020

பொருளாதார வளர்ச்சிக்கு ஒரே வழி!

பொருளாதார வளர்ச்சிக்கு ஒரே வழி!

நடப்பு நிதியாண்டின் ஆரம்ப காலாண்டுகளில் ஏற்பட்ட சரிவுக்குப் பிறகு, இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 சதவிகிதமாகக் குறையும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

2018-2019 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.9 சதவிகிதமாக இருந்து வந்தது. நடப்பு கணக்கு பற்றாக்குறை 2.1 சதவிகிதமாக விரிவடைந்துள்ளது என்று உலக வங்கி வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டுள்ளது. உலகப் பொருளாதார மந்தம் தெற்காசியாவிலும் எதிரொலிப்பதால், நடப்பு நிதியாண்டில் தெற்காசியாவின் பொருளாதார வளர்ச்சி குறையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கி நேற்று (அக்டோபர் 13) வெளியிட்டுள்ள அறிக்கையில், நேபாளம், வங்கதேசம் ஆகிய சிறிய நாடுகள் இந்தியாவை விடப் பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளது.

உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், “உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக, 2019ஆம் ஆண்டில் தெற்காசியாவின் பொருளாதார வளர்ச்சி 1.1 சதவிகிதம் குறைந்து 5.9 சதவிகிதமாகச் சரியும். தெற்காசியாவின் இறக்குமதியும் குறைந்துள்ளது. பாகிஸ்தான், இலங்கையின் இறக்குமதி 15 முதல் 20 சதவிகிதம் வரை குறைந்துள்ளது.

இந்தியாவுடன் ஒப்பிடும்போது நேபாளம், வங்கதேசம் ஆகியவற்றின் பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகமாக இருக்கிறது. பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரை, நடப்பு நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட வளர்ச்சியைக் காட்டிலும் 2.4 சதவிகிதமாகக் குறையும். அந்நாட்டின் நிதிச்சூழல் இன்னும் மோசமாகி, உள்நாட்டுத் தேவை மோசமாகச் சுருங்கும்” எனக் கூறப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் நிலை

உலக வங்கி இந்தியாவைப் பற்றிக் குறிப்பிடுகையில், “இந்தியாவைப் பொறுத்தவரை உள்நாட்டுத் தேவை குறைந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன் 7.3 சதவிகிதம் இருந்த தனியார் நுகர்வு இப்போது 3.1 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. உற்பத்தித் துறையின் வளர்ச்சியும் இரண்டாவது காலாண்டில் ஒரு சதவிகிதத்துக்கும் கீழ் குறைந்து கடந்த பத்தாண்டுகளில் இல்லாத மோசமான நிலையை எட்டியுள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 6 சதவிகிதமாகக் குறையும். ஆனால், அடுத்த ஆண்டில் படிப்படியாக உயர்ந்து 2021ஆம் ஆண்டில் 6.9 சதவிகிதமாகவும், அதைத் தொடர்ந்து 7.2 சதவிகிதமாகவும் அதிகரிக்கும்” எனத் தெரிவித்துள்ளது.

சரிவில் தொழில்துறை உற்பத்தி

இந்தியாவின் தொழில்துறை நேற்று முன்தினம் (அக்டோபர் 12) வெளியிட்ட அறிக்கையில், உற்பத்தி, மின் உற்பத்தி மற்றும் சுரங்கத் துறைகளின் மோசமான செயல்திறன் காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 1.1 சதவிகிதமாக குறைந்துள்ளது எனக் குறிப்பிட்டிருக்கிறது.

மேலும், தொழில்துறை உற்பத்தியின் குறியீடு ஆகஸ்ட் 2018ஆம் ஆண்டில் 4.8 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஏப்ரல் - ஆகஸ்ட் காலகட்டத்தில் ஒட்டுமொத்த ஐ.ஐ.பி (Index of industrial production) வளர்ச்சி 2.4 சதவிகிதமாக இருந்தது, இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 5.3 சதவிகிதமாக இருந்தது. ஐ.ஐ.பிக்கு 77 சதவிகிதத்துக்கும் அதிகமான பங்களிப்பு செய்யும் உற்பத்தித் துறை, ஆகஸ்ட் 2019இல் உற்பத்தியில் 1.2 சதவிகிதச் சரிவைக் காட்டியது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் உற்பத்தித் துறை 5.2 சதவிகித வளர்ச்சியைக் காட்டியது.

தொடர்ந்து பொருளாதார நெருக்கடியை இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் சந்தித்து வரும் நிலையில், உலக வங்கியின் தெற்காசிய மண்டலத்தின் துணைத் தலைவர் ஹார்ட்விக் ஸ்காபர் இதுகுறித்து கூறுகையில், “தொழில்துறை உற்பத்திக் குறைவு, இறக்குமதி குறைவு, நிதிச் சந்தையில் ஏற்படும் பதற்றமான சூழல் ஆகியவை தெற்காசியாவில் பொருளாதார வளர்ச்சிக் குறைவை ஏற்படுத்துகின்றன. உலகளவில் பொருளாதாரத்தில் நிலையற்ற சூழலின் தாக்கம் தெற்காசியாவிலும் எதிரொலிக்கிறது. தனியாரின் நுகர்வை அதிகரித்தல், முதலீட்டை வரவழைத்தல் மூலம் வளர்ச்சியைப் பெருக்க முடியும்” என இதற்கான வழியையும் தீர்வையும் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 13 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon