மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

சுவிஸ் வங்கியில் திமுக பணம்: எடப்பாடி பழனிசாமி

சுவிஸ் வங்கியில் திமுக பணம்: எடப்பாடி பழனிசாமி

திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினருக்கு சுவிஸ் வங்கியில் கணக்கு இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் நாராயணனும், காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரனும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஏழு நாட்களே உள்ள நிலையில், நாங்குநேரி தொகுதியில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (அக்டோபர் 13) பிரச்சாரம் தொடங்கினார்.

காங்கிரஸுக்குப் பாடம் புகட்டுங்கள்

நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திறந்த வேனில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர், “நாங்குநேரி தொகுதியை மறந்த காங்கிரஸுக்கு அதிமுகவின் வெற்றி மூலமாகத் தகுந்த பாடம் கற்பிக்கப்பட வேண்டும். அதிமுக வேட்பாளர் நாராயணன் இந்தத் தொகுதியைச் சேர்ந்தவர். ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளரோ சென்னையில் வசிக்கிறார்.

நாராயணன் சாதாரணமானவர். அவரை எளிதில் உங்களால் அணுக முடியும். ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் கோடீஸ்வரர் என்பதால் அவரை உங்களால் பார்க்கவே முடியாது. ஏற்கனவே நாங்குநேரியில் வெற்றி பெற்ற வசந்தகுமார், தனக்குப் பெரிய பதவி வந்ததும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகிவிட்டார். அதுபோலதான் தற்போது போட்டியிடும் ரூபி மனோகரனும் இருப்பார். ஆனால், நாராயணன் மிகவும் நல்லவர். எனவே அவருக்கு வாக்களிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

“தாமிரபரணி - நம்பியாறு - கருமேனியாறு திட்டத்தை அதிமுக கிடப்பில் போட்டுவிட்டதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ஒரு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால் அதற்குத் தேவையான நிலங்களை முதலில் கையகப்படுத்த வேண்டும். திமுகவின் பேராசை காரணமாக அவசர அவசரமாகத் திட்டத்தை அறிவித்து அடிக்கல் நாட்டிவிட்டுச் சென்றுவிட்டனர். 2020க்குள் அந்தப் பணிகள் முடிவடையும்” என்று விளக்கம் அளித்த முதல்வர், திமுகவையும் சாடினார்.

சுவிஸ் வங்கியில் திமுக பணம்

“கொள்ளையடித்த பணத்தை வைத்து புதிய தொழில்கள் தொடங்குவதற்காக நாங்கள் வெளிநாட்டுக்குச் செல்லவில்லை. ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சுவிஸ் வங்கியில் பணம் போட்டு வைத்திருப்பதாகக் கூறுகிறார்கள். இந்தியாவிலிருந்து சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்திருப்பவர்களின் பட்டியலைப் பிரதமர் பெற்றுள்ளார். அந்தப் பட்டியலில் திமுக இடம்பெற்றிருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. அது உண்மையாக இருந்தாலும் இருக்கலாம்” என்று தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதற்காகத்தான் ஸ்டாலின் அச்சப்பட்டுக்கொண்டு இருக்கிறார். நாங்கள் வெளிநாடு செல்வதாகக் கூறும் ஸ்டாலின் ஏன் அடிக்கடி லண்டன் செல்கிறார் என்று கேள்வியும் எழுப்பினார்.

ஞாயிறு, 13 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon