மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 5 ஆக 2020

முருகன் கொள்ளை நகைகள்: தமிழக போலீஸிடம் ஒப்படைத்த கர்நாடக போலீஸ்!

முருகன் கொள்ளை நகைகள்: தமிழக போலீஸிடம் ஒப்படைத்த கர்நாடக போலீஸ்!

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியான முருகன், கர்நாடக வழக்கறிஞர்களின் உதவியுடன் கடந்த 11ஆம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தான். பெங்களூர் பகுதியில் ஷொஷ்திகா நகைக்கடை கொள்ளைக்கு பொறுப்பேற்றுக்கொண்ட முருகன், அதனை பெரம்பலூரில் மறைத்து வைத்திருப்பதாகவும், போலீஸ் வந்தால் எடுத்துக்கொடுப்பேன் என்றும் வாக்குமூலம் அளித்திருக்கிறான்.

இதனையடுத்து, ஒரு டி.எஸ்.பி, ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் ஆறுபேர் கொண்ட பெங்களூரு போலீஸ் டீம் நேற்று (அக்டோபர் 12) கொள்ளையன் முருகனை அழைத்துக்கொண்டு பெரம்பலூர் விரைந்தது. கிருஷ்ணாபுரம் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை தோண்டி எடுத்தது.

இதனையடுத்து அங்கு விரைந்த திருச்சி குற்றப்பிரிவு துணை ஆணையர் மயில்வாகனன், கர்நாடக போலீஸை தடுத்து, ‘மீட்கப்பட்ட நகைகள் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டது’ என நகைகளில் இருந்த முத்திரைகளைக் காட்டி சொல்லியிருக்கிறார். ஆனால், நகைகளை பெங்களூரு எடுத்துச் செல்வோம் என கர்நாடக போலீஸ் பிடிவாதம் காட்டியிருக்கிறார்கள்.

இதுதொடர்பாக இன்று காலை 7.00 மணிப் பதிப்பில், முருகன் கொள்ளையடித்த நகை யாருக்கு? தமிழக போலீஸாருடன் மோதும் கர்நாடக போலீஸ் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்தத் தகவல் தமிழக டிஜிபி திரிபாதியிடம் தெரியப்படுத்தப்பட்ட பிறகு, டிஜிபி திரிபாதி, கர்நாடக டிஜிபி நீலாமணி ராஜுவிடம் சிலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கிறார். அதில், தீர்வு எட்டப்பட்டதைத் தொடர்ந்து மீட்கப்பட்ட நகைகளை அனைத்தையும் கர்நாடக போலீஸ் நேற்று இரவு 9.45 மணியளவில் தமிழக போலீஸ் அதிகாரியான மயில்வாகனனிடம் ஒப்படைத்தனர். இதன் பிறகுதான் கர்நாடக போலீஸாரும், முருகனும் பெங்களூருவுக்கு அனுப்பப்பட்டனர்.

கர்நாடக போலீஸ் பிடியில் இருந்த முருகனைப் பார்த்து, உன்னைச் சீக்கிரம் தமிழகத்துக்கு கொண்டுவந்து விசாரிக்கிறேன் என்று ஆக்ரோஷமாகக் கூறியுள்ளார் போலீஸ் அதிகாரி ஒருவர்.

ஞாயிறு, 13 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon