மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 5 ஆக 2020

விமர்சனம்: பப்பி

விமர்சனம்: பப்பி

திருமணத்துக்கு முந்தைய உறவினால் சிக்கிக்கொள்ளும் முரட்டு சிங்கிளின் கதையே பப்பி.

பொறியியல் மாணவர் வருண் வகுப்பறையிலேயே ஆபாசப் படம் பார்த்ததால் ‘சஸ்பெண்ட்’ செய்யப்படுகிறார். எந்நேரமும் காமத்தைப் பற்றி மட்டுமே அதிகம் சிந்திப்பதால், அதிலிருந்து விடுபட நினைக்கிறார் வருண். சீனியர் யோகி பாபு கொடுக்கும் யோசனையின் பேரில் தன்னுடைய பாலியல் வறட்சியை போக்க வருண் விலை மாதரையும் அணுகுகிறார். ஆனால், அங்கும் வருண் சொதப்ப, முரட்டு சிங்கிளாகவே காலத்தைக் கடக்கிறார்.

இந்த நிலையில், வருண் வீட்டு மாடிக்குப் புதிதாகக் குடிவரும் நாயகி சம்யுக்தா ஹெக்டே வருணுடன் நட்போடு பழகத் தொடங்குகிறார். நட்பு காதலாகிறது; காதல் எல்லை மீறுகிறது. சில மாதங்கள் கழித்து, சம்யுக்தா தான் கர்ப்பமடைந்ததாக காதலன் வருணிடம் கூறுகிறார். வருண் இனி என்ன செய்வதென்றே தெரியாமல் சிக்கலில் தவிக்க, அடுத்து நடக்கக்கூடிய விளைவுகளே பப்பி படத்தின் மீதிக் கதை.

எப்படி இருக்கிறது ‘பப்பி’?

அறிமுக நாயகன் வருண், ஆபாசத் தளங்களை முடக்கியதற்காக வருத்தப்படுவது, கண்டிப்பான அப்பாவைப் பார்த்துப் பயப்படுவது, தனது நாய் ‘பப்பி’ மீது அன்பு வைத்திருப்பது, காமத்தின் மீதான ஏக்கத்துடனே இருப்பது என இளைஞர்களைக் குறிவைத்து எழுதப்பட்ட கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். ஆனால், தனது செயற்கையான நடிப்பால் படம் முழுவதும் ரசிகர்களை ஈர்க்கத் தவறுகிறார்.

வாட்ச்மேன், கோமாளி போன்ற படங்களில் நடித்த சம்யுக்தா ஹெக்டே, தனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு நடிப்பால் நியாயம் சேர்த்திருக்கிறார். சிக்கலான உணர்வுகளையும் இயல்பாகக் கொண்டு வருகிறார் சம்யுக்தா. வசனக் காட்சிகளில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தினால் நல்ல நடிகையாகப் பரிணமிக்க முடியும்.

படத்தில் ஹீரோ, ஹீரோயினையும் கடந்து நம்மை ஈர்ப்பது நகைச்சுவை கலந்த குணச்சித்திர கதாபாத்திரம் ஏற்றிருக்கும் யோகி பாபு. வருணுக்கு சீனியரான இவர், யோசனை சொல்கிறேன் பேர்வழி என அடுத்தடுத்த சிக்கல்களை ஏற்படுத்தி மாட்டிக்கொள்ளும் இடம் ரசிக்க வைக்கிறது. ஹவுசிங் போர்டில் இருப்பதாலேயே கால்பந்தாட்டத்தில் கலந்து கொள்ள மறுக்கப்படும் இவரது கதை, வலுவாக மாறியிருக்க வேண்டியது. திரைக்கதையின் தொய்வினால், வலுவற்ற காட்சிகளாகவே அவை கடந்து செல்கின்றன.

குறை சொல்ல முடியாத ஒளிப்பதிவைப் படத்துக்குக் கொடுத்திருக்கிறார் தீபக் குமார். தரண் குமார் இசையில் பாடல்கள், பின்னணியிசை சுமார். படத்தொகுப்பாளர் ரிச்சி இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

‘பப்பி’ எதைப் பற்றிய படம் என்ற தெளிவில்லாமலேயே திரைக்கதை அமைத்திருக்கிறார்கள் போலும். ஓர் அலைவரிசையே இல்லாமல் ஆரம்பம் முதல் முடிவு வரை சீரற்று பயணிக்கிறது பப்பி. ‘அடல்ட் காமெடி’ என்ற பெயரில் அபத்தக் காமெடியாக வந்திருக்கிறது படம். விளைவுகளைப் பற்றி யோசிக்காமல், திருமணத்துக்கு முந்தைய உறவினால் காதலர்கள் சந்திக்கும் சிக்கல்களை பற்றிய கதையாக வந்த விதத்தில் மட்டும் ‘பப்பி’ தப்பிக்கிறது.

மற்றபடி சொல்ல வந்ததற்குக் கவனம் செலுத்தாமல் சுற்றியடிக்கும் திரைக்கதை, கதாநாயகனின் மிகை நடிப்பு, வழக்கமான காட்சிகள், யூகிக்க கூடிய க்ளைமாக்ஸ் என ‘பப்பி’ பார்வையாளனைச் சோதிக்கக் கூடிய படமாக வந்திருக்கிறது.

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்திருக்கிறார். நட்டு தேவ் இயக்கியிருக்கிறார். வருண், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, நித்யா ரவீந்திரன், மாரிமுத்து, ஆர்.எஸ்.சிவாஜி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஞாயிறு, 13 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon