மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 16 ஜூலை 2020

டிஜிட்டல் திண்ணை: ஜனவரி 21 எடப்பாடிக்கு மோடி வைத்த கெடு!

டிஜிட்டல் திண்ணை:  ஜனவரி 21 எடப்பாடிக்கு மோடி வைத்த கெடு!

மொபைல் டேட்டா ஆஃப் செய்யப்பட்டிருந்தது. ‘சண்டே மார்னிங்’ என்று முதலில் ஒரு வாழ்த்துச் செய்தி வந்தது. அதன்பின் செய்தி வந்தது.

“அக்டோபர் 11, 12 தேதிகளில் தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடந்த சீன அதிபர் - இந்தியப் பிரதமர் சந்திப்பு எந்தவிதமான சிறு குறையுமின்றி நடந்தேறியது பிரதமர் மோடிக்கு மிக்க நிறைவை அளித்திருக்கிறது. இந்த வாய்ப்பை சிறப்பானதாக ஆக்கிய தமிழர்களுக்கு நன்றி சொல்லிக்கொண்ட பிரதமர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகக் காவல் துறை அதிகாரிகளுக்கும் தனிப்பட்ட முறையில் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

இதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டிஜிபி உள்ளிட்டோரிடம் பகிர்ந்துகொண்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். பிரதமரை டெல்லிக்கு அனுப்பிவைத்துவிட்டு அவசரமாக விக்கரவாண்டி தேர்தல் பரப்புரைக்குச் சென்றுவிட்டார் எடப்பாடி.

சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சந்திப்பை எந்தவிதமான குறைகளும் இன்றி நடத்திக் காட்டியதில் பிரதமரின் பாராட்டு பெற்றது எடப்பாடிக்கு மகிழ்ச்சி அளித்தாலும் அதைவிட பெரிய விவகாரம் எடப்பாடியை சில நாட்களாகவே உலுக்கிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.

தமிழ்நாட்டில் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமைக்கப்போகும் வியூகம் என்ன என்பது பற்றி ஆர்எஸ்எஸ்ஸின் உயர்மட்ட நிர்வாகிகள் அவ்வப்போது ஆலோசித்து வருகிறார்கள். அந்த வியூகத்துக்கு ஏற்ப சில கட்சிகளை வளைப்பதும் சில கட்சிகளை விலக்கிவைப்பதும் தமிழகத்தில் பாஜகவுக்கு இன்றியமையாததாக இருக்கிறது. இந்த வியூகத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தின் இப்போதைய முக்கிய அரசியல் தலைவர்களின் முழு ஜாதகத்தையும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் திரட்டி வருகிறார்கள்.

ஆர்எஸ்எஸ்ஸில் இருக்கும் தொழில்நுட்ப அறிவும் தகவல் தொடர்பு ஆர்வமும்கொண்ட இளைஞர் குழுவினர் இதற்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத் தலைவர்களின் பலம், பலவீனம் ஆகியவற்றை அலசி, தரவுகளை பாஜக மேலிடத்துக்குத் தருவதுதான் இவர்களின் வேலை.

அந்த வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவியிலிருந்த கடந்த இரண்டு வருடங்களில் என்ன செய்திருக்கிறார் என்பதே ஆர்எஸ்எஸ்ஸின் முதல் ஆய்வாக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.

அதாவது முதல்வர் எடப்பாடி, அவரது நெருங்கிய நண்பர்கள், அவரது குடும்பத்தினர் தினம்தோறும் யார் யாரிடம் தொலைபேசியில் பேசுகிறார்கள்... யார் யாரிடமிருந்து இவர்களுக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது... எடப்பாடியின் குடும்பத்தினர் யாரிடம் பேசுகிறார்களோ அவர்கள் வேறு யார் யாரிடம் தினந்தோறும் தொடர்பில் இருக்கிறார்கள். இப்படி ஒரு தகவல் சங்கிலி எடப்பாடியை மையமாக வைத்து குடும்பத்தினர், நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், நண்பர்களின் நண்பர்களுடைய நண்பர்கள் என்று விசாரணை சங்கிலியை வீசி இருக்கிறது ஆர்எஸ்எஸ்.

இதுபோன்ற தகவல்கள் எல்லாம் தனிப்பட்ட நபர்கள் கேட்டால் எந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களும் கொடுக்க சட்டத்தில் இடமில்லை. அப்படியிருக்க ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் இதையெல்லாம் எப்படிப் பெறமுடியும் என்ற சந்தேகம் எழலாம். ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் மூலமாகத் தகவல் தொடர்பு நிறுவனங்களுக்கு இதுபோன்ற விவரங்களை கேட்டதும் கொடுக்கவேண்டுமென ஆஃப் த ரெக்கார்டு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே எந்த தொலைபேசி நிறுவனத்தில் இருந்தும் எப்படிப்பட்ட தகவல்களையும் இந்தக் குழு பெறுவதற்கு எந்த தடையும் இல்லை என்பதே உண்மை.

இப்படி திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஓர் அறிக்கையை தமிழகத்திலிருந்து பாஜக மேலிடத்துக்கு சமர்ப்பித்து இருக்கிறார்கள்.

அதில் தமிழக முதல்வரின் குடும்பத்தினர் அவரது நண்பர்கள் நெருங்கிய நண்பர்கள் என ஒரு சிறு வட்டத்துக்கு மட்டும் ஆயிரக்கணக்கான கோடி மதிப்புடைய சொத்துகளும் நிறுவனங்களும் இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. இது மட்டுமல்ல; சமீபத்தில் முதலீடுகளைத் திரட்டப் போவதாகச் சொல்லி வெளிநாடுகளுக்குப் பயணம் சென்ற முதல்வர், அங்கே யார் யாரை சந்தித்தார் யார் யாரோடு பேசினார், அவர்களின் பின்னணி என்ன என்பது பற்றிய விவரங்களும் திரட்டப்பட்டு பாஜக தலைமையிடம் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சில ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளில் சாமர்த்தியமான வழிகள் மூலம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்புகள் ஆர்எஸ்எஸ்ஸுக்குக் கிடைத்திருக்கின்றன.

இந்தத் தரவுகள் இப்போது பாஜக தலைமையிடம் இருக்கும் நிலையில் இவற்றை வைத்து அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பிரதமர் மோடியின் கருத்தை வலுப்படுத்த எடப்பாடி பழனிசாமியிடம் சில நிபந்தனைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு சம்மதம் தெரிவித்தால் இந்தத் தரவுகள் தரவுகளாகவே இருக்கும். ஜனவரி 21ஆம் தேதி வரை இதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதற்குள் அவர் பாஜகவின் கூட்டணிக் கணக்குகளுக்கு ஏற்ற பதிலை அதிமுக சார்பாக அளிக்கவில்லை என்றால் திரட்டப்பட்ட தரவுகள் சட்டரீதியான நடவடிக்கைகளாக பரிணாம வளர்ச்சி பெறும் என்பதுதான் பாஜக மேலிடம் எடப்பாடிக்கு விதித்திருக்கும் நிபந்தனை.

சீனா அதிபர் சென்னை பயணம் அளித்த மகிழ்ச்சியையும் தாண்டி இப்போது எடப்பாடி பழனிசாமியை உறுத்திக்கொண்டிருக்கும் விஷயம் இதுதான் என்கிறார்கள் அவர்களது வட்டாரத்திலேயே” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

ஞாயிறு, 13 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon