மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 5 ஆக 2020

ஒரே நாளில் மூன்று படங்கள், ரூ.120 கோடி: நாட்டில் மந்தநிலை இல்லை!

ஒரே நாளில் மூன்று படங்கள், ரூ.120 கோடி: நாட்டில் மந்தநிலை இல்லை!

மூன்று திரைப்படங்கள் வெளியான முதல் நாளிலேயே ரூ.120 கோடி சம்பாதித்ததால் நாட்டில் பொருளாதார நெருக்கடி இல்லை என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியிருக்கிறார்.

சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை காணப்படுவதாகவும், உலகளாவிய மந்தநிலையின் வெளிப்பாடு வளர்ந்து வரும் முக்கிய சந்தையாகக் கருதப்படும் இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் அதிகம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று (அக்டோபர் 12) மும்பையில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “நான் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கத்தில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சராக இருந்தேன். அதனால் எனக்கு சினிமா பிடிக்கும். அக்டோபர் 2ஆம் தேதி மூன்று திரைப்படங்கள் வெளியாகின. திரைப்பட விமர்சகர் கோமல் நஹ்தா இது குறித்து என்னிடம் பேசும்போது, ‘தேசிய விடுமுறையான அக்டோபர் 2ஆம் தேதி வெளியான வார், ஜோக்கர் மற்றும் சைரா நரசிம்மா ரெட்டி ஆகிய படங்கள் 120 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்தது’ என்றார். பொருளாதாரம் நன்றாக இருப்பதால் மட்டுமே ஒரே நாளில் திரைப்படங்கள் ரூ.120 கோடியைப் பெற முடிந்தது” என்று கூறினார்.

தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் வேலையின்மை பற்றிய பட்டியல் அறிக்கை தவறானது என்றும் பிரசாத் கூறினார், “இந்த அறிக்கை தவறானது, முழு பொறுப்போடு நான் சொல்கிறேன். எலெக்ட்ரானிக் சாமான்கள் உற்பத்தி துறை, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்டவை சிறப்பாக இயங்குகின்றன. அனைவருக்கும் அரசு வேலை தருவோம் என்ற நாங்கள் ஒருபோதும் சொன்னது கிடையாது. அரசுக்கு எதிரான சில அமைப்புகள் மக்களைத் தவறாக வழி நடத்துகின்றன. மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் இந்தியா பொருளாதாரத்தில் 11ஆவது இடத்தில் இருந்தது. இப்போது 5ஆவது இடத்தில் நாம் இருக்கிறோம். நாம் பிரான்ஸையே பின்னுக்குத் தள்ளியுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

இந்த வருடம் ஜனவரி 31ஆம் தேதி, பிசினஸ் ஸ்டாண்டர்டு வெளியிட்ட அறிக்கையில், அரசாங்கத்தால் மூடி மறைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஓர் ஆய்வில், வேலையின்மை 2017-18ஆம் ஆண்டில் மட்டும் 6.1 சதவிகிதமாக இருப்பதாகக் கண்டறிந்தது. இது நாடெங்கும் பணமதிப்பழிப்பு கொண்டுவந்த பிறகான முதல் முழு ஆண்டாகும். மேலும் இந்த அறிக்கை, கடந்த 45 ஆண்டுகளில் இல்லாததைவிட வேலைவாய்ப்பின்மை இந்தியாவில் உயர்ந்துள்ளதாகக் குறிப்பிடுகிறது.

சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை காணப்படும் சூழலில், அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்துள்ள நிலையில், திரைப்படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூலைச் சுட்டிக்காட்டி மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நாட்டில் மந்தநிலை இல்லை எனக் கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

சனி, 12 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon