மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 5 ஆக 2020

வனமெல்லாம் செண்பகப்பூ19-  தூறற்புதுமழை

வனமெல்லாம் செண்பகப்பூ19-  தூறற்புதுமழை

ஆத்மார்த்தி

நான் மனிதர்களை அவர்களது இசை மீதான ரசனையைக் கொண்டே முடிவுசெய்வேன்

--யாரோ

பாடல்களை மனிதக் குரலின் வழியாக வெளிப்படுகிற இசையுருக்கள் எனலாம். பாடல்கள் ஒலிகளுக்கும் மனங்களுக்கும் சொற்களுக்கும் இடையிலான பந்தத்தைத் தனித்துவமான மற்றும் நிலையான மீவார்த்தலுக்கு உட்பட்ட தொனியின் வழியே எடுத்து வைக்கின்றன

சொற்களை அர்த்தபூர்வமாய் அடுக்குவதே பாடல்களின் தன்மையாக முடியும்.அப்படி அடுக்குவதன் இசைவழி பெயர்த்தலே பாடல்களுக்கு உயிரூட்டுகிறது.பாடல்களின் மூலமாக விளையவல்ல உணர்தல்கள்.வரையறுக்கப் பட்டவை அல்ல. இசையின் நீட்சி பிற கலைகளை விடவும் அபரிமிதமானது. பாடல்கள் காலத்தின் உள்ளேயும் வெளியேயும் தன் சிறகுகளைக் கொண்டதாகவே உயிர்க்கிறது.இசையின் குறிப்புக்களை உள்வாங்கியபடி சூழலுக்குத் தகுந்தாற் போன்ற அடுக்கில் நிகழ்கிற சொற்கள் பாடல்வரிகளாகின்றன. பாடல்கள் எழுதப்படுவதில்லை. மாறாகப் புனையப்படுகின்றன. புனைவின் அலாதி மற்றும் உச்சபட்சம் இவற்றை எப்போதும் விசாரிக்கிற கலாவடிவ முயல்தலாகவே இசை பாடலைக் கோருகிறது மற்றும் கட்டுப்படுத்துகிறது.ஏற்கனவே எழுதப்பட்ட கவிதை அல்லது பாடலுக்கு இசைவார்த்தல் எப்போதும் இசையின் அதிகாரத்தைக் குன்றச்செய்வதாகவே நிகழ்கிறது. இசையிலிருந்து பிறக்கிற பாடல்கள் மொழியின் ஒத்திசைதலாகவே அடையப்படுகின்றன.

பாடல் புனைவது பெரிய கலை. வழங்கப்படுகிற சிச்சுவேஷனை மனதில் அலசி சொற்களைக் கொண்டு அந்த இசையை மீறாமல் பாடல் புனைவதென்ன லேசா..? இசைக்கருவிகள் பாடிய குரல்கள் இசை செல்லும் திசை போலவே பாடல்வரிகளும் காலத்தோடு சேர்ந்து இயங்குபவையே. அந்தந்தக் காலத்திற்கான பாடல்களை சமைப்பதில் பாடலாசிரியர்களின் பங்கு அளப்பரியது. யாரைத் திறந்தால் என்ன திறனிருக்கும் என்பது யூகிக்க முடியாத வித்தகமல்லவா வாழ்க்கை அள்ளித் தருகிற செல்வந்தம் தான் அறிவினூடே பெருகுகிற கவிபுனையும் ஆற்றலும்.

   சங்கீத மேதை ஸ்ரீனிவாசனின் மகனாகப் பிறந்த வெங்கடேஷ் காரைக்குடி வெங்கடேஷ் என்ற பேரில் இசை இருவர் சங்கர் கணேஷிடம் பல படங்களுக்கு உதவியாளராக இருந்தவர்.சிறு வயதிலேயே படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.சொந்தக் குரலில் பாடும் திறன் கொண்ட வெங்கடேஷ் சங்கர் கணேஷ் இசையில் பல பாடல்களை எழுதி இருக்கிறார்.

புடம் போட்டெடுத்த தங்கச்சொற்களே பாடல்களாகின்றன. ரசிகனின் செவிக்கு இன்பம் சேர்ப்பதற்கு முன்பாகவே பலராலும் பல அபிப்ராயங்களுக்கு பிறகே ஒரு பாடல் தப்பிப் பிழைக்கிறது. இசையோடு சேர்ந்து பாடலாக மெட்டுக்கிணங்கித் தன்னை நிலை நிறுத்துக் கொள்வதற்கு ஒவ்வோர் பாடலுமே படாத பாடு பட்டாகவேண்டியிருக்கிறது அதன் பிறகு தான் பட்டான பாட்டாக முடிகிறது. காரைக்குடி வெங்கடேஷ் எண்ணிக்கையளவில் எத்தனை பாடல்களை யாருக்கெல்லாம் எழுதினார் என்பது தகவல் கிடைக்கவில்லை. ஆனாலும் அவரது இரண்டு பாடல்கள் மொழியால் நம்மை வசப்படுத்துகின்றன இசையோடு இயைந்தொலிப்பதன் மூலமாகத் தான் ஒரு பாடல் தன்னை அர்த்தம் செய்து கொள்ள முடியும். அந்த வகையில் காரைக்குடி வெங்கடேஷ் எழுதிய இந்தப் பாடல்கள் காலவசீகர கானத்தேன் துளிகள் என்பதில் ஐயமில்லை.

1.சித்திரமே உன் விழிகள் கொத்து மலர்க்கணைகள் நெஞ்சிலே துணிவிருந்தால் படத்தில் சங்கர் கணேஷ் இசையமைப்பில்  இந்தப் பாடல் கேஜே யேசுதாஸ் பாடியது. தன் வழக்கமான குரலில் லேசாக மிக லேசாக ஒற்றை இறகின் லகுவான நகர்தலையும் அலைந்து திரியும் மென் காற்றுக்கேற்ப ஒரு தாளம் உருவாகிறாற் போன்ற குழைதலையும் உண்டாக்கி இதனைப் பாடி இருப்பார் தாஸ். அவருக்கே உரிய தனித்த குரல் எல்லாப் பாடல்களின் வழி என்ன செய்யுமோ அவ்வண்ணமே இந்தப் பாடலையும் மனங்களைக் கரைத்துக் கிளர்த்தித் தந்தது.

சித்திரமே உன் விழிகள் கொத்து மலர்க்கணைகள்

முத்திரைகள் இட்ட மன்மதன் நான்

உந்தன் மன்னவன் தான்

இந்த பொன்மானையே

ஒரு பூந்தென்றலாய்த் தொடவோ

சித்திரமே உன் விழிகள்

இந்தப் பாடலின் மொத்த அமைப்புமே லேசான சிருங்காரமும் சன்னமான அமானுடமும் கலந்து கிடைக்கிறது. இதன் இசைக்குறிப்புக்கள் தனியே கேட்கையில் சரசமும் நளினமும் கலந்தொலிப்பதை உணர முடிகிறது. இன்னும் சொல்வதானால் திரை இசை எல்லா விதமான நுட்பங்களையும் தன்னகத்தே உட்கொண்டு தனக்குத் தேவையான வடிவங்களில் அதனை உறையச் செய்துவிடுவதாகும். இப்படியான பாடல்கள் காலத்தோடு இயைந்து ஒலிக்கையில் மற்றுமொரு பாடலாகவே கலந்து மறைந்துவிடும். மீவருகைக் காலம் என்பது எப்போதெனக் கணிக்கவே இயலாத வேறொரு காலத்தில் மெல்லக் காற்றில் கசிந்து தூறற்புதுமழையெனவே மறுபடி ஜனிக்கும். கலையின் விசித்திரம் இத்தகைய பாடல்களின் வழியும் வழியும்.

இடை கொண்ட அன்னம் ஒன்று எழிலோடு வந்தாட

நடை சிந்தும்  நளினம் கண்டு மனம் ஒன்று போராட

படை கொண்ட மன்னன் கூட பசி கொண்டு தள்ளாட

பாவை உந்தன் பருவம் இன்று பதில் சொல்லுமோ

இந்த முதல் சரணத்தை முடிக்கிற இடத்தில் அதை வினவுதலாக நிறைத்திருப்பது கவி வல்லமை.

சித்திரமே உன் விழிகள்

கடல் போலப் பொங்கும் உள்ளம் கரை காணும் நேரத்தில்

உடல் மீறிப் பொங்கும் இன்பம் அலை மோதும் கோலத்தில்

மடல் கொண்டு இளமை எழுதும் கவி ஒன்று மலராதோ

விடை சொல்ல விடியும் காலை வரும் அல்லவோ

 இரண்டாம் சரணத்தை முதலது போலவே முடித்திடாமல் மூன்றாம் வரியில் வினவுதலை வைத்து கடைசி வரியின் பூர்த்தியில் ஒரு உடன்பாட்டு வாக்கியத்தை வினவுகிறாற் போல் முடித்திருப்பது கூடுதல் இன்பத்தை சாத்தியம் செய்து தருகிறது.

சித்திரமே உன் விழிகள்

2 நீரோட்டம் படத்தில் ஏவி,ரமணன் இசை அமைத்து உமாரமணனுடன் பாடிய இந்தப் பாடல் இதன் இசைக்காக மெட்டுக்காக வரிகளுக்காக இடையிசைக்காக பாடலின் செல்வழி நகர்தலுக்காக நிறைவுக்காக இடையிசைத் துணுக்குகளுக்காக ஏன் முன் பின்னாய்த் தன்னை மெழுகிக் கொண்டிருக்கும் மௌனத்திற்காகவும் கூட நினைவில் நின்றாடக் கூடிய வல்லமை கொண்ட அபூர்வமான பாடல்.ஏற்கனவே வேறொரு தொடரில் இது குறித்து எழுதி இருந்தாலும் இங்கே காரைக்குடி வெங்கடேஷின் கவித்திறனைப் பேசுகிற இடத்தில் இது இடம்பெற்றாக வேண்டியதால் இடம்பெறுதலை இரட்டிக்கிற வரம் பெறுகிறது

ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே அடிக்கடி துடிக்கிது ஏனோ தெரியல்லே

இது பருவத்தாலே மாறி வரும் ரசனை அல்லவா

இளம் மனதோடு மலர்ந்து வரும் ஆசை அல்லவா

இந்த மலர் கூட வண்டு வந்தால் தேனை சிந்துதே

வண்ண மயில் கூட மழையைக் கண்டு ஆடுகின்றதே

ஆசை இருக்கு

மேகத்தைக் கண்டு மயில் தான் ஆடும்

மோகத்தில் வண்டு மலர்களை நாடும்

இரண்டும் ஒன்று இதுதான் என்று

மனம் தினம் நினைத்திடும் விதம் அல்லவா

ஆசை இருக்கு

ஆற்றில் ஓடும் வெள்ளத்தைப் போலே

ஆனந்த வெள்ளம் உள்ளத்தில் ஓடும்

இதயம் இரண்டு இணைந்தது இன்று

மனம் தினம் நினைத்திடும் விதம் அல்லவா

ஆசை இருக்கு

தெளிவான சொற்களின் தடையற்ற ஓட்டமும் செறிவான இலக்கிய நயமும் செந்தமிழ்த் திறன் படரும் பாடலின் நகர்தலும் முன் சொல்லாப் புத்தம் புதிய சேர்விடங்களுமாய்த் தன் பாடல்களாய் ரசம் பொங்க எழுதினார் வெங்கடேஷ் காதலின் அதீதத்தை யதார்த்தமாகப் புனைந்து தருவதை அதற்கான வலிந்துருவாக்கப் பட்ட நம்பகம் ஒன்றை மீண்டும் மீண்டும் பழக்கம் செய்கிற தன்மை சினிமாவுக்கு உண்டு. அது சினிமா எனும் பெருங்கலையின் கலைகளின் கூட்டுப்புள்ளியின் தேவையும் கூட. அந்த வகையில் பாடல்களுக்கென்று இருக்கவல்ல இயங்குதளத்தின் தன்மையை முற்றிலுமாக உள்வாங்கிப் பாடல்களை எழுதுவதை அனாயாசமாக நிகழ்த்திய வகையில் வெங்கடேஷின் மேதமை அலாதியானது. போற்றுதலுக்குரியதும் கூட.

சந்தனக் காற்று படத்தில் பட்டுப்பாவாடை கட்டி பளபளக்கும் தாவணியில் என்று ஆரம்பிக்கிற பாடல் உற்சாகமான எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மாயக்குரலில் கேட்பவரை வசீகரித்தது. சங்கர் கணேஷ் இசைத்த அந்தப் படத்தின் எல்லா பாடல்களுமே ஹிட் அடித்தன என்றாலும் இந்தப் பாடல் இலக்கற்று அலையும் விடலை மனங்களின் விட்டேற்றி கானமாக வருடங்களைக் கடந்தொலித்தது. அந்தக் காலகட்டத்தில் எங்கே திரும்பினாலும் எதோ ஒரு இடத்தில் இந்தப் பாடல் நின்று கொண்டிருந்தது அந்த அளவுக்கு பெரும் ஒலித்தலைத் தன் வரலாறாகக் கொண்ட இந்தப் பாடலும் காரைக்குடி வெங்கடேஷ் தன் பேனாவிலிருந்து பெயர்த்துத் தந்தது தான்.

காலத்தின் பக்கங்களில் தான் எத்தனை எத்தனை மனித சரிதங்கள்? காரைக்குடி வெங்கடேஷ் இசையில் குரலில் பாடற் புனை திறனில் மட்டுமன்றி நடிப்பிலும் வல்லமை மிகுந்தவராயிருந்தவர்.,பெரிய புகழோ அனைவரும் அறிந்த ஒரு பெருமிதமோ அவருக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம். என்றாலும் காலம் கடந்து ஒளிர்வதும் மிளிர்வதுமான அவரது எழுத்து வன்மையை எடுத்து உரைப்பதே இந்த அத்தியாயத்தில் பூத்திருக்கும் செண்பகப்பூவின் நோக்கமாகிறது. வாழ்க இசை  

(தொடரும்)

ஞாயிறு, 13 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon