மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 5 ஆக 2020

முருகன் கொள்ளையடித்த நகை யாருக்கு? தமிழக போலீஸாருடன் மோதும் கர்நாடக போலீஸ்!

முருகன் கொள்ளையடித்த நகை யாருக்கு? தமிழக போலீஸாருடன் மோதும் கர்நாடக போலீஸ்!

கடந்த 2ஆம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரியின் சுவரில் துளையிட்டு ரூ.13 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக மணிகண்டன் என்பவனை கைது செய்து விசாரித்ததில், கொள்ளையில் முக்கிய சதிகாரனாக இருந்து செயற்பட்டது பிரபல கொள்ளையன் திருவாரூர் சீராத்தோப்பு முருகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக திருச்சி துணை ஆணையர் மயில்வாகனன் தலைமையில் ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதற்கிடையே முருகனின் அக்கா மகன் சுரேஷ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் காவல் நிலையத்தில் கடந்த 10ஆம் தேதி சரணடைந்தான்.

முருகனைத் தேடி கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளுக்குத் தனிப்படையினர் விரைந்தனர். முருகனுக்கு நெருக்கமானவர்களைக் காவல் துறையினர் தங்களது கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்துவிட்டதால், சரணடைவதுதான் ஒரே வழி என்ற முடிவுக்கு முருகன் வந்தான். இதையடுத்து வழக்கறிஞர்களின் ஆலோசனையின்பேரில் பெங்களூருவிலுள்ள நீதிமன்றத்தில் சரணடைந்தான். இதுதொடர்பாக நாம் நகைக்கடை கொள்ளையன் முருகனுக்கு உதவிய பெங்களூரு போலீஸ்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளோம்.

முருகனுடன் பெரம்பலூர் விரைந்த பெங்களூரு போலீஸ்

பெங்களூருவிலும் முருகன்மீது ஏராளமான கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளில் ஒன்றுதான் ஷொஷ்திகா நகைக்கடை கொள்ளை வழக்கு. அங்கு நகைகளைத் தான் திருடியதாக ஒப்புக்கொண்ட முருகன், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை பெரம்பலூர் அருகே ஒரு கிராமத்தில் பதுக்கி வைத்திருப்பதாக பெங்களூரு போலீஸில் தகவல் அளித்துள்ளான். இதையடுத்து, முருகனை அழைத்துக்கொண்டு பெங்களூரு போலீஸார் நேற்று (அக்டோபர் 12) பெரம்பலூர் விரைந்தனர். பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 12 கிலோ தங்க நகைகளையும் கைப்பற்றினர்.

இந்தத் தகவல் ரோந்துப் போலீஸார் மூலமாக பெரம்பலூர் எஸ்.பி நிசா பார்த்திபனுக்குத் தெரியவந்தது. இதை அப்படியே லலிதா ஜுவல்லரி வழக்கை விசாரித்துவரும் துணை ஆணையர் மயில்வாகனனுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார் நிசா பார்த்திபன். முருகனை அழைத்துவந்த தகவல் அறிந்ததும், உடனடியாக அங்கு விரைந்த மயில்வாகனன் கைப்பற்றப்பட்ட நகைகளை ஆய்வு செய்துள்ளார். நகைகளில் லலிதா ஜுவல்லரி முத்திரை இடம்பெற்றிருந்ததைக் கண்டு, அது திருச்சியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள்தான் என்பதை உறுதியும் செய்திருக்கிறார்.

லலிதா ஜுவல்லரி நகைகள் கண்டுபிடிப்பு

இதையடுத்து, பெங்களூரு போலீஸாரிடம் நகைகளின் முத்திரையைக் காண்பித்து, ‘நகைகள் திருச்சியில் கொள்ளையடிக்கப்பட்டவை’ என்று விளக்கமாக சொல்லியிருக்கிறார். ஆனாலும் பெங்களூரு போலீஸார், ‘கைப்பற்றப்பட்ட நகைகள் பெங்களூருவில் கொள்ளையடிக்கப்பட்டது என முருகன் வாக்குமூலம் அளித்துள்ளான். எனவே, நகைகளை நாங்கள்தான் எடுத்துச் செல்வோம்’ என பிடிவாதம் பிடித்துள்ளனர். இதனால் இரண்டு மாநில போலீஸாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, முருகனையும் பெங்களூரு போலீஸாரையும் கர்நாடகத்துக்கு அனுப்பாமல் பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி அலுவலகக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். பிரச்சினைக்குத் தீர்வு எட்டிய பிறகே திருப்பி அனுப்பப்பட இருக்கிறார்கள். இதுதொடர்பான அனைத்து விவரங்களும் டிஜிபி திரிபாதியிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. டிஜிபி திரிபாதியும் கர்நாடக டிஜிபியைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். ஆனால், இரு தரப்பு பேச்சுவார்த்தையிலும் இழுபறி நீடித்து வருவதாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஞாயிறு, 13 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon