மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 5 ஆக 2020

மாரத்தான்: உலக சாதனை படைத்த வீரர்!

மாரத்தான்: உலக சாதனை படைத்த வீரர்!

42 கிலோமீட்டர் தொலைவை 2 மணி நேரத்துக்கும் குறைவான காலத்தில் ஓடி கென்ய வீரர் எலியட் கிப்சோக் சாதனை படைத்துள்ளார் .

ஆஸ்திரியா, வியன்னா நகரில் மாரத்தான் ஓட்டம் நேற்று (அக்டோபர் 12) நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியன்கள் மேத்யூ சென்ட்ரோவிட்ஸ், பால் செலிமோ உள்ளிட்ட முக்கிய வீரர்களும் பங்கேற்றனர். இங்கிலாந்தின் ரசாயன நிறுவனமான ஐஎன்இஓஎஸ் இந்த மாரத்தான் போட்டியை நடத்தியது. இந்த ஓட்டத்தின் தொலைவு 42.2 கி.மீ ஆகும். இந்த தொலைவை 1 மணிநேரம் 59 நிமிடம் 40 விநாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார் கென்ய வீரர் எலியட் கிப்சோக்.

42 கிலோமீட்டர் தொலைவை 2 மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் ஒருவர் கடப்பது இதுவே முதன்முறை. இருப்பினும் அந்த சாதனை அதிகாரபூர்வ சாதனையாக அங்கீகரிக்கப்படவில்லை. வழக்கமாக இடையில் குடிநீர் போன்றவற்றை எடுத்துக்கொள்ள மாரத்தான் செல்லும் வழிகளில் டேபிள்களில் வைக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த மாரத்தான் போட்டியில் எலியட் தான் சோர்வடையாமல் குடிநீர் போன்றவற்றைத் தனக்கு அளித்து ஊக்கப்படுத்த ஒரு தனிக்குழுவைப் பயன்படுத்தினார்.

‌அந்தக் குழு வாகனத்தில் வந்து எலியட்டுக்குக் குடிநீர் போன்ற பொருட்களை வழங்கியது. இதனால் எலியட்டின் இந்த சாதனை அங்கீகரிக்கப்பட்ட சாதனையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இருப்பினும் எல்லோராலும் இந்த சாதனையைச் செய்ய முடியும் என்பதை தன்னுடைய முயற்சி காட்டுகிறது என எலியட் கிப்சோக் தெரிவித்துள்ளார். முன்னதாக, 2018ஆம் ஆண்டு ஜெர்மனியில் 2 மணி நேரம் 1 நிமிடம் 39 விநாடிகளில் மாரத்தான் போட்டி தொலைவைக் கடந்ததே எலியட்டின் அதிகாரபூர்வ சாதனையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 13 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon