மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 22 ஜன 2021

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – உடையாத முறுக்கும் உப்பாத தட்டையும்

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – உடையாத முறுக்கும் உப்பாத தட்டையும்வெற்றிநடை போடும் தமிழகம்

‘நானும்தான் தீபாவளிக்குத் தீபாவளி பலகாரங்கள் செய்றேன். ஆனால், மற்றவர் தரும் பலகாரங்கள் போல் இல்லையே... முறுக்கு உடைந்து போகுது; தட்டை, தட்டையா இருக்க மாட்டேங்குது’ என்று ஏங்குபவர்களுக்கான டிப்ஸ் இதோ...

உடையாத முறுக்கு

முறுக்குக்கு மாவு பிசையும்போது பழைய அரிசியின் மாவாக இருந்தால் அதிகமாகத் தண்ணீர் தேவைப்படும். புது அரிசியின் மாவாக இருந்தால் பிசைவதற்குக் குறைந்த தண்ணீரே தேவைப்படும்.

பச்சரிசியில் மாவு பிசைவதாக இருந்தால் குறைந்த அளவு தண்ணீர் தேவைப்படும். புழுங்கல் அரிசி மாவாக இருந்தால் தண்ணீர் அதிகமாகத் தேவைப்படும். அரிசிக்குத் தகுந்தவாறு நீர் ஊற்றிப் பிசைந்தால்தான் மாவு பதம் சரியாக இருக்கும்.

முறுக்கு செய்யும்போது எண்ணெயில் பிரிந்தாலோ, உடைந்தாலோ பிசைந்த மாவில் 2 டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு சேர்த்து மேலும் சிறிதளவு நீர்விட்டு மென்மையாகப் பிசைந்து எண்ணெயில் போட்டுப் பொரித்தால் உடையாது; பிரியாது.

முறுக்குக்கு மாவு பிசையும்போது வெண்ணெய், நெய், சூடான எண்ணெய் என எது வேண்டுமானாலும் மாவின் அளவுக்கு ஏற்றவாறு சேர்த்துப் பிசைந்தால் சுவை அதிகமாக இருக்கும்.

உப்பாத தட்டை

தட்டைசெய்யும்போது உப்பி வராமல் (எண்ணெயில் போட்டதும்) இருக்கவும், மொறுமொறுப்பாக இருக்கவும் தட்டை தயாரித்தவுடன் எண்ணெயில் போடும் முன்பு ஒவ்வொரு தட்டையையும் ஃபோர்க்கால் இரண்டு மூன்று இடங்களில் குத்திவிட்டுப் பிறகு எண்ணெயில் போட்டு பொரித்தால் தட்டை உப்பி வராது.

தட்டை செய்யப் பயன்படுத்தும் அரிசி மாவை வெறும் வாணலியில் வறுத்துவிட்டுப் பிறகு தட்டை தயாரித்தால் (மற்ற பொருட்களையும் சேர்த்துப் பிசைந்து) மொறுமொறுப்பாக இருக்கும்.

இந்தப் பலகாரங்களைச் செய்யும்போது எண்ணெய் பொங்காமல் இருக்க...

எண்ணெய் காய்ந்ததும், அதில் ஒரு வாழைப்பழத்தோலின் சிறிய துண்டைப் போட்டு, அதைக் கருகப் பொரித்தெடுத்து விட்டால், பிறகு எண்ணெய் பொங்காது.

கொய்யா மர இலைகளைக் கொதிக்கும் எண்ணெயில் பலகாரம் செய்யத் தொடங்கும் முன் ஒருமுறை போட்டு எடுத்துவிட்டாலும் எண்ணெய் வாணலியிலிருந்து பொங்கி வழியாது.

நேற்றைய ரெசிப்பி: பனீர் பக்கோடா

ஞாயிறு, 13 அக் 2019

chevronLeft iconமுந்தையது