�தீபாவளிக்கு முன்பும் பின்பும் தேர்வு: விழிபிதுங்கும் பொறியியல் மாணவர்கள்!

public

சென்னை அண்ணா பல்கலை கழகம் சமீபத்தில், பருவத் தேர்வுகளுக்கான டைம் டேபிலை வெளியிட்டது. இளங்கலை பட்டப்படிப்பான பி.இ / பி.டெக்,/பி.ஆர்க் மற்றும் முதுகலை பட்டப்படிப்புக்கான எம்.இ / எம்.டெக் / எம்.பி.ஏ / எம்.சி.ஏ / எம்.எஸ்.சி ஆகிய துறைகளுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது.

III, V, VII, IX செமஸ்டர் 21.10.2019 முதல் 02.11.2019 வரை தேர்வு நடத்தப்படவுள்ளது. அக்டோபர் 21 ஆம் தேதி முதல் செய்முறைத் தேர்வுகள் தொடங்குகின்றன. முதல் பிரிவுக்கான தேர்வுகள் 21 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையும், இரண்டாம் பிரிவுக்கான தேர்வுகள் அக்டோபர் 28 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளன. நவம்பர் 6 ஆம் தேதி எழுத்துத் தேர்வுகள் தொடங்குகிறது.

இதற்கிடையில் தீபாவளி பண்டிகை வரவிருக்கிறது. 27 ஆம் தேதி தீபாவளி என்ற நிலையில் அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நாட்களில் செய்முறைத் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உட்பட சொந்த ஊர்களிலிருந்து பிற ஊர்களில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியிருக்கின்றனர். தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாடலாம் என்று எண்ணியிருந்த மாணவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. இதனால் தேர்வு தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று மாணவர்கள் வினவி வருகின்றனர்.

தீபாவளிக்கு அடுத்த நாளே அண்ணா பல்கலை தேர்வா என்று கேள்வியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “ தேர்வு தேதியை ஒத்திவைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். ”தீபாவளியையொட்டி பேருந்துகளிலும், ரயில்களிலும் பயணம் செய்யக் கடுமையான நெரிசல் நிலவும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தீபாவளிக்கு முதல் நாள் செய்முறைத் தேர்வை முடித்துவிட்டு சொந்த ஊருக்குச் செல்வதோ, தீபாவளியை முடித்துக்கொண்டு அடுத்த நாளே தேர்வுக்குத் திரும்புவதோ சாத்தியமற்றவை என்பதை அனைவரும் அறிவர்.

இவற்றையெல்லாம் ஆராயாமல் அண்ணா பல்கலைக்கழகம் எந்த அடிப்படையில் தேர்வு அட்டவணையை இறுதி செய்தது என்பது தெரியவில்லை. மாணவர்கள் தீபாவளியைக் கொண்டாடுவதற்கு வசதியாகவும், தீபாவளிக்காகச் சொந்த ஊர் செல்லும் மாணவ, மாணவியர் கல்லூரிகளுக்கு திரும்புவதற்கு வசதியாகவும் வரும் 26, 28 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள செய்முறைத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். அந்த நாட்களில் நடைபெற வேண்டிய செய்முறைத் தேர்வுகளைப் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும், மாணவர்களுக்கும் வசதியான இன்னொரு நாளில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

பள்ளிகளுக்கு தீபாவளி முதல் நாள் விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது, அதுபோன்று தீபாவளிக்கு மறுநாள் தேவைப்பட்டால் விடுமுறை அளிப்பது பற்றி பள்ளிகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *