மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

மோடியை வரவேற்பதில் பாஜக கோஷ்டிப் பூசல்!

மோடியை வரவேற்பதில் பாஜக கோஷ்டிப் பூசல்!

ஒவ்வொரு முறை பிரதமர் மோடி தமிழகம் வரும்போதும் ஆளுநர், முதல்வர் ஆகிய அரசு முறை வரவேற்புக்குப் பிறகு தமிழக பாஜக சார்பில் மோடியை வரவேற்க நிர்வாகிகள் செல்வார்கள்.

கட்சி நிர்வாகிகள் சற்று அதிக எண்ணிக்கையில் இருந்தால் கூட மாநிலத் தலைவர் தமிழிசை இருந்தபோது பிரதமர் அலுவலகத்திடமே பேசி அனுமதி வாங்கி, நிர்வாகிகளை பிரதமருடன் சந்திக்க வைத்து அவர்களது மனம் கோணாமல் பார்த்துக் கொள்வார்.

ஆனால் இன்று (அக்டோபர் 11) பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கும்போது அவரை வரவேற்க யார் யார் வரவேண்டும் என்று நேற்றே பாஜக மாநில அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ வினாயகம், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஒரு பட்டியலைத் தயாரித்தனர்.

அந்தப் பட்டியல்தான் நேற்று இரவு முதல் தமிழக பாஜகவுக்குள் பரபரப்பான விவாதத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறது. அதாவது பிரதமரை வரவேற்க தயாரிக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியலில் மாநில துணைத் தலைவர்கள் நயினார் நாகேந்திரன், அரசகுமார், எம்.என். ராஜா, சென்னை பொறுப்பாளர் சக்கரவர்த்தி, காளிதாஸ், ஜெயசங்கர், மாநில இளைஞரணிச் செயலாளர் வினோஜ், ஊடகப் பிரிவுத் தலைவர் ஏ.என்.எஸ். பிரசாத் ஆகியோர் பெயர்கள் இல்லை. இவர்களில் பலர் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசையின் ஆதரவாளர்கள். இன்னும் சொல்லப் போனால் இந்தப் பட்டியலில் இருக்கும் பெரும்பாலானோர் தமிழிசை ஆளுநராக பதவியேற்ற நிகழ்ச்சிக்காக ஹைதராபாத் சென்றவர்கள்.

“ தற்போது தலைவர் பதவி காலியாக இருப்பதால், எந்தப் பதவியிலும் இப்போது இல்லாத பொன்.ராதாகிருஷ்ணன் அமைப்புச் செயலாளர் கேசவ வினாயகத்தின் மூலமாக தனக்கு வேண்டப்பட்ட ஆட்களை மட்டுமே பிரதமரை வரவேற்கும் பட்டியலில் சேர்த்திருக்கிறார். இது தமிழகத்தில் பாஜகவை வளர்க்கும் செயல் அல்ல என்று பிரதமர் அலுவலகத்துக்கே இன்று அதிகாலை முதல் தகவல்கள் அனுப்பப்பட்டன” என்கிறார்கள்.

பொன்.ராதாவால் புறக்கணிக்கப்பட்ட சிலர் கடைசி நேரம் வரை கடும் முயற்சி எடுத்து பிரதமரை வரவேற்க சென்றுவிடமாட்டோமா என்று விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

வெள்ளி, 11 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon