மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 22 ஜன 2021

மேகதாட்டு: மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்!

மேகதாட்டு: மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்!வெற்றிநடை போடும் தமிழகம்

மேகதாட்டு அணை விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடக மாநிலம் மேகதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கான பணிகளில் கர்நாடக அரசு தீவிரம் காட்டிவருகிறது. தற்போது, பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நிலையில், கடந்த 4ஆம் தேதி மத்திய அரசுக்கு இதுதொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பியது.

அதில், “மேகதாட்டு அணையில் நீரைத் தேக்கி நீர் மின் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே கர்நாடகாவின் நோக்கம். நீர் மின் உற்பத்தி திட்டம் என்பதால் இதற்கு தமிழக அரசின் ஒப்புதல் தேவையில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க மேகதாட்டு அணை உதவியாக இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. காவிரியின் குறுக்கே அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என அவர்கள் வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்டோபர் 10) கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு ஆகியவற்றுக்கு எதிராக காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு அனுமதிக்க கூடாது என கடந்த ஜூலை மாதம் கடிதம் எழுதியுள்ளேன். மேலும், மேகதாட்டு அணை கட்ட கர்நாடக அரசு மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருப்பது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு அது நிலுவையில் இருந்துவருகிறது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், “தற்போது மேகதாட்டுவில் அணை கட்ட அனுமதி கோரி கர்நாடகா மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. இதற்கு தமிழக அரசின் சார்பில் மீண்டும் ஒருமுறை எங்களுடைய கடுமையான ஆட்சேபத்தை தெரிவிக்கிறோம். காவிரி நதி பாயும் மற்ற மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் எந்த அணையையும் கட்ட கர்நாடக அரசுக்கு உரிமை இல்லை” என்று சுட்டிக்காட்டியுள்ள முதல்வர்,

மேகதாட்டு அணை கட்ட ஊக்குவிக்கக் கூடாது என அணைகள் மதிப்பீட்டுக் குழுவுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அறிவுறுத்த வேண்டும் என்றும், மேகதாட்டு அணை தொடர்பாக கர்நாடக அரசு அளித்துள்ள விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங்கிற்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.

வியாழன், 10 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon