மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

நீலகிரி மாணவர்களுக்கு இஸ்ரோ தலைவர் கடிதம்!

நீலகிரி மாணவர்களுக்கு இஸ்ரோ தலைவர் கடிதம்!

நிலாவை ஆராய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் போது இறுதி நேரத்தில் பின்னடைவு ஏற்பட்டது. இதனால் இஸ்ரோவின் இந்த திட்டம் தோல்வியில் முடிவடைந்தது. நாடே ஆர்வமுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த திட்டம் தோல்வியில் முடிந்தாலும், இஸ்ரோவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தன.

பள்ளி மாணவர்களும் இஸ்ரோ தலைவர் சிவனுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நீலகிரி மாவட்டம் பந்தலூர் முக்கட்டி அரசு பள்ளி மாணவர்கள் இஸ்ரோ தலைவருக்குச் செப்டம்பர் 10ஆம் தேதி ஒரு கடிதம் எழுதினர். அதில் அறிவியல் ஆய்வுகளுக்குத் தோல்வி என்பதே கிடையாது என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதற்கு இஸ்ரோ தலைவர் சமீபத்தில் அப்பள்ளி மாணவர்களுக்கு பதில் கடிதம் எழுதியிருக்கிறார். அதில், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எழுதிய கடிதம் கிடைக்கப்பெற்றதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

”உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் அன்பாலும், ஆதரவாலும் நம் இந்திய விண்வெளித்துறை மென்மேலும் சாதனைகள் படைக்கும். சந்திரயான்-2 லேண்டர் தரை இறங்காமலிருந்தாலும் ஆர்பிட்டர் மிக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அதன் கருவிகள் 7 ஆண்டுகளுக்குத் தகவல்களை அனுப்பும்” என்று கூறி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இக்கடிதத்தை அவர் தமிழில் அனுப்பியுள்ளார். இந்நிலையில் இஸ்ரோ தலைவர் எங்களுக்குப் பதில் அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர்.

வியாழன், 10 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon