மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 22 ஜன 2021

வெங்காயத்தைத் தொடர்ந்து தக்காளி விலையும் உயர்வு!

வெங்காயத்தைத் தொடர்ந்து தக்காளி விலையும் உயர்வு!வெற்றிநடை போடும் தமிழகம்

வெங்காயத்தைத் தொடர்ந்து தற்போது தக்காளியின் விலையும் அதிகரித்திருப்பது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடும் மழையின் காரணமாக வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் காமதேனு கடைகளில் குறைந்த விலைக்கு வெங்காயத்தை விற்பனை செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. மத்திய அரசு தனது கையிருப்பிலிருந்த வெங்காயத்தை மாநில அரசுகளுக்குக் கொடுத்தது. வெளிநாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதியை நிறுத்தியது. இந்த நிலையில், வெங்காயத்தைப் போன்று சமையலுக்கு அதிகளவு பயன்படுத்தப்படும் தக்காளியின் விலையும் உயர்ந்திருக்கிறது.

மத்திய அரசு தரவுகளின்படி டெல்லியில், அக்டோபர் 1ஆம் தேதி 45 ரூபாயாக இருந்த தக்காளியின் சராசரி சில்லறை விலை நேற்று (அக்டோபர் 9) 54 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

கர்நாடகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வெள்ளம் மற்றும் பலத்த மழை காரணமாகத் தக்காளி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களில் தக்காளி விலை கடுமையாக அதிகரித்துள்ளது என்று வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இதன்மூலம் தக்காளியின் தரத்தைப் பொறுத்து டெல்லியில் ஒரு கிலோ ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 40 ரூபாயாகவும், மும்பையில் 54 ரூபாயாகவும், கொல்கத்தாவில், 60 ரூபாயாகவும் தக்காளியின் விலை உள்ளது. கடந்த வாரம் இதே போல எக்கச்சக்க விலைக்கு விற்கப்பட்ட வெங்காயத்தின் விலை ஒரு வாரத்தில் கணிசமாகக் குறைந்து தற்போது கிலோ 60 ரூபாய்க்கு வந்துள்ளது. அதற்குள் தக்காளி விலை உயர்ந்துள்ள நிலையில் சாமானிய மக்கள் தக்காளியை வாங்க முடியாமல் திணறி வருகின்றனர். தக்காளி விலையையும் குறைக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வியாழன், 10 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon