மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

சுபஸ்ரீ வழக்கு: நீதிபதிகள் கருத்து!

சுபஸ்ரீ வழக்கு: நீதிபதிகள் கருத்து!

சுபஸ்ரீ வழக்கில் அவரது தந்தை தொடர்ந்த மனுவை இன்று (அக்டோபர் 10) விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் , சீன அதிபரின் வருகையால் சென்னை சுத்தமாகியிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

பள்ளிக்கரணை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமணத்துக்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார். இவ்வழக்கில் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள நிலையில் சுபஸ்ரீ தந்தை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனரால் தான் என் மகள் உயிரிழந்தார். இதற்கு அதிகாரிகளின் மெத்தன போக்கே காரணம். இந்த வழக்கு விசாரணை அனைத்தையும் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு மாற்ற வேண்டும். சுபஸ்ரீயின் மரணத்துக்கு இழப்பீடாகத் தனது குடும்பத்துக்கு ரூ. 1 கோடி வழங்க வேண்டும். சட்டவிரோத பேனர்கள் வைக்கப்படுவதைத் தடுக்க கடுமையான சட்ட விதிகளை வகுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், சுபஸ்ரீ உயிரிழப்புக்குப் பிறகு தமிழகத்தில் எந்த பகுதியிலும் பேனர் வைக்க அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டது. சுபஸ்ரீ தந்தை ரவி தரப்பில், இந்த வழக்கைச் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பேனர் வழக்குகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகளை பார்த்துவிட்டு இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். அப்போது சீன அதிபரின் வருகையால் சென்னை சுத்தமாகியுள்ளது. உலக தலைவர்கள் தமிழகத்துக்கு வந்தால் தமிழகமே சுத்தமாகிவிடும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே சிறையில் உள்ள ஜெயகோபால் அவரது உறவினர் மேகநாதன் ஆகியோர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு சாலையில் பேனர் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எண்ணம் ஏதும் தங்களுக்கு இல்லை. கட்சியினர் பேனர் வைத்ததற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை. முறையான விசாரணை இல்லாமல் இயந்திரத்தனமாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர், பெரும்பான்மையான விசாரணை முடிந்துவிட்ட நிலையில் தங்களை சிறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்திருந்தனர். இம்மனுவை அக்டோபர் 15ஆம் தேதி விசாரிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி வருகைக்காக பேனர் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 10 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon