சென்னை பாடி சரவணா ஸ்டோர்ஸில் பிஸ்கட் அதிக விலை விற்றதைத் தட்டிக் கேட்ட உமர் பாரூக் என்ற வாடிக்கையாளர் பவுன்சர்களால் தள்ளிவிடப்பட்ட சம்பவமும், அதையடுத்து அவர் கொரட்டூர் காவல் நிலையத்தில் சரவணா ஸ்டோர்ஸ் மீது புகார் கொடுத்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இதுகுறித்து மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் நேற்று (அக்டோபர் 9) அநியாய விலை: தட்டிக்கேட்டவரைத் தாக்க முயன்ற சரவணா ஸ்டோர்ஸ்என்ற தலைப்பில் வீடியோ ஆதாரத்துடனான செய்தி வாசக நேயர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு வாசகர்களும், தாங்களும் இதுபோன்ற நெருக்கடியை சரவணா ஸ்டோர்சில் அனுபவித்திருப்பதாக இன்றுவரை தொடர்ந்து கருத்துப் பகிர்ந்து வருகின்றனர்.
இதற்கிடையில் புகார் தாரர் உமர் பாரூக்குடன் நேற்று கொரட்டூர் காவல் நிலையம் சென்ற மமக இளைஞரணிச் செயலாளர் புழல் ஷேக் முகமது அலி, ‘காவல்நிலையம் மூலம் சமரசம் பேச சரவணா ஸ்டோர்ஸ் தொடர்ந்து முயன்று வருவதாக நம்மிடம் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக போலீஸ் வட்டாரத்தில் நாம் பேசினோம். பெயர் வெளியிட விரும்பாத காவல்துறையினர் நம்மிடம், “இந்தப் புகாரை பதிவு செய்ததே மிகப்பெரிய சாதனை. அதுவும் மின்னம்பலம் போன்ற பிரபல ஊடகத்தில் செய்தி வெளிவந்ததால் சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகம் கடுமையான அதிருப்தியில் இருக்கிறது. குறிப்பிட்ட அந்த பணியாளர்களை கடையின் உரிமையாளரே அழைத்து, ‘ஒரு சின்னப் பிரச்சினைய உங்களுக்கு ஹேண்டில் பண்ணத் தெரியாதா? இப்ப தீபாவளியும் அதுவுமா கடைக்கு எவ்வளவு கெட்ட பெயரு பார்த்தியா?” என்று கண்டித்திருக்கிறார். மேலும் புகார் தாரரை பல வழிகளிலும் சமரசத்துக்கு ஆட்படுத்தும் முயற்சிகளையும் சரவணா ஸ்டோர்ஸ் மேற்கொண்டிருக்கிறது.
இது இப்படியென்றால் மாமல்லபுரத்துக்கு மோடியும் சீன அதிபரும் வருவது இந்த பிரச்சினையில் சரவணா ஸ்டோர்ஸ் தரப்புக்கும், போலீஸ் தரப்புக்கும் சாதகமாகிவிட்டது. சீன அதிபர் வருகையை ஒட்டி சென்னையில் இருக்கும் பெரும்பாலான காவல் துறை அதிகாரிகள் அது தொடர்பான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனால் போலீஸ் ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டர்களே இல்லை. இன்னும் இரண்டு, மூன்று நாளைக்கு இதுதான் நீடிக்கும். இந்த இடைவெளியில் அந்த புகார் தாரரை எப்படியாவது சமரசத்துக்குக் கொண்டு வாருங்கள் என்று சரவணா ஸ்டோர்ஸ் தரப்பிடம் போலீஸார் சொல்லியிருக்கிறார்கள். எனவே அதற்குள் இப்புகாரை ஒரு வழியாக முடிவுக்குக் கொண்டுவர தீவிர முயற்சியில் இருக்கிறது சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகம்” என்று போலீஸ் தரப்பிலேயே நம்மிடம் மெல்லக் கிசுகிசுக்கிறார்கள்.