மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 28 மே 2020

சசிகலாவுக்கு புதிய சிக்கல்: விசாரணை அறிக்கையில் வெளியான உண்மை!

சசிகலாவுக்கு புதிய சிக்கல்: விசாரணை அறிக்கையில் வெளியான உண்மை!

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அடைக்கப்பட்டுள்ளனர். நன்னடத்தையைக் காரணம் காட்டி சசிகலாவை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சசிகலா வெளியில் வருவதற்குச் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் இன்று அறிக்கை ஒன்று வெளியாகியிருக்கிறது.

2017ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா ஷாப்பிங் சென்றதாக வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. சசிகலாவுக்குச் சிறை விதிகளை மீறி சலுகைகள் வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா இதுகுறித்து ஆய்வு நடத்தினார். சசிகலாவுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்காகச் சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியிருந்ததாக குற்றம்சாட்டியிருந்தார் டிஐஜி ரூபா.

சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டு, கட்டில் மெத்தை டிவி, சமையலறை என சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்த வினய் குமார் ஐஏஎஸ் தலைமையில் உயர் மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த விசாரணைக் குழுவின் அறிக்கை அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடப்படாத நிலையில், அதில் இருக்கும் சில தகவல்கள் இன்று (அக்டோபர் 9) கசிந்துள்ளன.

அதில், சசிகலாவுக்கு தனிப்பட்ட சிறப்பு சமையல் அறை வழங்கப்பட்டது. 5 அறைகளிலிருந்த கைதிகள் வெளியேற்றப்பட்டு அவருக்குத் தனி அறை ஒதுக்கப்பட்டதாகவும், சிறைத்துறை டிஜிபிக்கு ரூ.2 கோடி கொடுத்தது உண்மை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது டிஐஜி ரூபா அளித்த அறிக்கை உண்மை என்றும் சசிகலா மீதான குற்றச்சாட்டுக்கு வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சசிகலா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தற்போது புதிய சிக்கல் உருவாகியிருக்கிறது.

இதற்கிடையே, பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள கைதிகளுக்குத் தாராளமாகக் கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் வழங்கப்படுவதாகவும், செல்போன்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும் பெங்களூரு மாநகர போலீஸாருக்கு தொடர்ந்து புகார் வந்ததைத் தொடர்ந்து இன்று போலீஸார் சிறையில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கத்தி, ஸ்பேனர், உள்ளிட்ட 37 ஆயுதங்கள், மொபைல்கள், சிம் கார்டுகள், ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

புதன், 9 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon