மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 29 நவ 2020

அநியாய விலை: தட்டிக் கேட்டவரைத் தாக்க முயன்ற சரவணா ஸ்டோர்ஸ்- வீடியோ ஆதாரம்!

அநியாய விலை: தட்டிக் கேட்டவரைத் தாக்க முயன்ற சரவணா ஸ்டோர்ஸ்- வீடியோ ஆதாரம்!

ஷாப்பிங் உலகின் சூப்பர் ஸ்டோர் என்று அழைக்கப்படும் சரவணா ஸ்டோர்ஸ் சர்ச்சை ஸ்டோர் ஆகவும் அவதாரம் எடுக்கிறது.

இந்த வகையில் சென்னை பாடியில் அமைந்திருக்கும் சரவணா ஸ்டோர் மீது வாடிக்கையாளர் ஒருவர் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த உமர் பரூக் பாடியில் அமைந்திருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு கடந்த 8ஆம் தேதி சென்றிருக்கிறார்.

பல பொருட்கள் வாங்கிய நிலையில் ஹைடன் சீக் பிஸ்கட் வாங்கி இருக்கிறார். அதன் விலை 80 ரூபாய் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்க கடைசியில் வந்த பில்லிலோ 95 ரூபாய் என்று இருந்திருக்கிறது. 15 ரூபாய் எதற்கு அதிகமாக வாங்குகிறீர்கள் என்று பணிப் பெண்ணிடம் கேட்க அவர் அதற்கு இன்னொருவரை காட்டுகிறார்.

அவரோ இது பற்றிப் பேசிக் கொண்டிருக்க அப்போது அங்கே வந்த பவுன்சர்கள் உமர் பரூக்கை தரதரவென இழுத்துச் சென்றிருக்கிறார்கள்.

தீபாவளி நேரம் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் ஏன் இப்படி கஸ்டமரை தரதரவென இழுத்துச் செல்கிறீர்கள் என கடையில் இருந்த வாடிக்கையாளருள் சிலர் கேட்க விவகாரம் வாக்குவாதம் ஆகியிருக்கிறது.

கஸ்டமர்கள் பலரும் தட்டி கேட்டதால் ஆஃபீஸ் ரூமுக்கு கூட்டிட்டு போயி பேச போறேன் என்று சொல்லியிருக்கிறார் அந்த பவுன்சர்.

ஏன் இங்கேயே பேசுங்க என கஸ்டமர்கள் உரிமைக்குரல் எழுப்பியதும் வேறு வழியின்றி அவரை விட்டிருக்கிறார்கள் அந்த பவுன்சர்கள்.

பல பேர் முன்னிலையில் தனக்கு ஏற்பட்ட இந்த அவமானத்தை அடுத்து கொரட்டூர் காவல் நிலையத்தில் சென்று சரவணா ஸ்டோர்ஸ் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்திருக்கிறார் உமர் பரூக்.

"பொதுவாகவே சரவணா ஸ்டோர்ஸ் மீது பல்வேறு புகார்கள் எடுக்கப்பட்டாலும் போலீஸ் நிலையம் வரை எழுத்துப்பூர்வமாக செல்வது அரிது.அப்படி சென்றாலும் அங்கே பேசி முடிக்க சொல்லி காவல்துறைக்கும் சரவணா ஸ்டோர்ஸ் தரப்பிடமிருந்து அழுத்தம் வரும்.

இப்போதும் அப்படித்தான் வருகிறது. ஆனால் எனது நண்பருக்கு ஏற்பட்ட இந்த நிலைமைக்கு உரிய நீதி கிடைக்காமல் விடமாட்டோம்.நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த கடையில் பொருட்களை வாங்கி செல்கிறார்கள். இவ்வளவு விலை ஏற்றத்திற்கு இடையிலும் கூட்டம் வருகிறது என்றால் கடையின் மீது உள்ள நம்பிக்கையால் தான் வருகிறார்கள். அவர்களிடமே அதிக விலை வைத்து விற்கும் சரவணா ஸ்டோர் நிர்வாகத்திற்கு இந்த சம்பவம் மூலம் ஒரு பாடம் புகட்டியே தீருவோம்" என்கிறார் பரூக் கின் நண்பரும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளருமான ஷேக் முஹம்மது அலி.

ஆனால்...இன்று பகல் பொழுது கொரட்டூர் காவல் நிலையத்திற்கு சரவணா ஸ்டோர்ஸ் தரப்பையும் புகார் கொடுத்த உமர் பரூக் தரப்பையும் பஞ்சாயத்து பேச வரச் சொல்லியிருக்கிறார்கள் காவல் நிலையத்தினர்.

புதன், 9 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon