மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 22 அக் 2020

பழைய பன்னீர் செல்வமாக மாற வேண்டும்: எம்.ஆர்.கே.வுக்கு பாமக பதில்

பழைய பன்னீர் செல்வமாக மாற வேண்டும்: எம்.ஆர்.கே.வுக்கு பாமக பதில்

வன்னிய சமுதாயத்துக்கு திமுக செய்த நன்மைகள் குறித்து அக்கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையின் தொடர்ச்சியாக அறிக்கைப் போர் நீடிக்கிறது.

ஸ்டாலினுக்கு பதில் சொல்லி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட, அவருக்கு எதிராக திமுக கடலூர் மாசெ எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் நேற்று அறிக்கை வெளியிட்டார். இன்று (அக்டோபர் 9) எம்.ஆர்.கே.வை கேள்வி கேட்டு பாமக சார்பில் மாநில துணைப் பொதுச் செயலாளர் வைத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

“மருத்துவர் அய்யா அவர்களுக்கு எதிராக அறிக்கை விடும் அளவுக்கு தூக்கிப் பிடிக்கப்படும் அண்ணன் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், அய்யா அவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு உறுதியாக பதிலளிக்க முடியவில்லை என்றாலும், ஓரளவுக்காவது பதில் அளித்திருந்தால் கூட, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று மகிழ்ந்திருப்போம். ஆனால், பன்னீர்செல்வமோ சந்தையின் முகப்பில் சண்டையிடுவோரைப் போல சகதி வார்த்தைகளை அள்ளித் தெளித்திருக்கிறார். ஒருவேளை இது தான் அவரது முன்னாள் தலைவர் கற்றுத்தந்த கலாச்சாரமோ, இன்னாள் தலைவர் கற்றுத் தந்த நாகரீகமோ தெரியவில்லை.

திமுகவில் பிற வன்னியத் தலைவர்கள் அவமதிக்கப்பட்டது இருக்கட்டும்... நீங்கள் எந்த அளவுக்கு அவமதிக்கப்பட்டீர்கள். வட மாவட்ட திமுகவில் வன்னியத் தலைவர்களை ஸ்டாலினுடன் இருக்கும் இரு முன்னாள் அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் அவமதிக்கிறார்கள் என்று மதுரைக்கு சென்று மு.க. அழகிரியிடம் புகார் கூறி அவரிடம் சரணடைந்தீர்களா, இல்லையா? அதனால், ஆத்திரம் அடைந்த ஸ்டாலினின் துதிபாடிகள் உங்களை மாவட்ட செயலர் தேர்தலில் வீழ்த்த துடித்தனரா, இல்லையா?

கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளரின் இல்லத் திருமணத்திற்கான அழைப்பிதழில் தமிழகம் மட்டுமின்றி புதுவையில் உள்ள மாவட்ட செயலாளர்களின் பெயர்கள் கூட அச்சடிக்கப்பட்டிருந்த நிலையில், அதே மாவட்டத்தைச் சேர்ந்த உங்கள் பெயர் மட்டும் கட்சித் தலைமையின் ஆசியுடன் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டதா, இல்லையா? உங்கள் அகராதியில் இதற்குப் பெயர் அவமதிப்பு இல்லையா?

மாவீரன் குரு மீது பன்னீர்செல்வத்திற்கு பாசம் வந்திருக்கிறது. மாவீரன் எந்தத் தவறுமே செய்யாத நிலையில், திமுகவின் தவறுகளை தட்டிக் கேட்டார் என்பதற்காக அவரை முதன்முதலில் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது நீங்கள் அமைச்சராக அங்கம் வகித்த அரசு தானே? மாவீரன் மீது இப்போது அக்கறை காட்டும் நீங்கள் அப்போது அவர் மீதான நடவடிக்கையை கண்டித்து அமைச்சர் பதவியிலிருந்தா விலகினீர்கள்? அதுமட்டுமல்ல.... மாவீரன் ஜெ.குருவை படுகொலை செய்ய உங்கள் கட்சித் தலைமை சதித் திட்டம் தீட்டியதே? அதுகுறித்த உண்மைகள் அனைத்தும் உங்களுக்கு தெரிந்திருந்தாலும் அமைச்சர் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக கை கட்டி வாய் மூடி அமைதியாக இருந்தவர் தானே நீங்கள். மாவீரனைப் பற்றியெல்லாம் பேச உங்களுக்கு தகுதியில்லை.

அண்ணன் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்களே, நீங்கள் மிகவும் நல்லவர். திமுகவில் எவ்வளவு அடி விழுந்தாலும் வலிக்காதது போலவே காட்டிக் கொண்டு தாங்கிக் கொள்வீர்கள். வன்னியர்கள் அடிமையாகத் தான் இருக்க வேண்டும் என்று கூறினால், தரையை தோண்டி அதற்குள் நின்று கொண்டு உங்கள் தலைமையின் காலைத் தொட்டு வணங்குவீர்கள். ஆனால், எல்லா வன்னியர்களும் அப்படியே இருப்பார்கள் என்று நினைக்காதீர்கள். அவர்களின் பதிலடி விக்கிரவாண்டியில் வலிமையாக இருக்கும்” என்று கூறியிருக்கும் வைத்தி, இன்னொரு பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்திருக்கிறார்.

“1989ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை மருத்துவர் அவர்களால் நிறுவப்பட்ட வன்னியர் சங்கம் புறக்கணித்தது. மருத்துவர் அய்யா அவர்களின் அறிவுரைப்படி, ‘‘எந்த கட்சியும் எங்கள் கிராமத்திற்குள் ஓட்டு கேட்க வரக்கூடாது’’ என ஆயிரக்கணக்கான கிராமங்களின் நுழைவாயிலில் மக்கள் எழுதி வைத்திருந்தனர். அதனால் ஆத்திரமடைந்த திமுக நிர்வாகியும், உங்கள் தந்தையுமான எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி, தேர்தலில் வாக்களிக்காதவர்கள் எவரும் தமது வீட்டிற்குள் வரக்கூடாது என்று எழுதி வைத்தார். அதைக் கண்டு ஆத்திரமடைந்த நீங்கள், உங்கள் தந்தையை பகைத்துக் கொண்டு, மருத்துவர் அய்யா அவர்களின் நிலைப்பாட்டை ஏற்று, ‘‘தேர்தலில் வன்னியர்கள் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்கக்கூடாது’’ என்று ஊர், ஊராக சென்று பிரச்சாரம் செய்தீர்கள். அப்போது உங்கள் வீரமும், தன்மரியாதையும் எங்களை மெய்சிலிர்க்க வைத்தது. அப்போது அப்படி இருந்த நீங்கள், திமுகவில் சேர்ந்த பின்னர் எப்படி ஆகி விட்டீர்கள்? என்பதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது. உங்களுக்காக நாங்கள் வருந்துகிறோம்.

இனி வரும் நாட்களிலாவது நீங்கள் பழைய பன்னீர்செல்வமாக மாற வேண்டும்; பழைய வீரத்தையும், தன்மரியாதையையும் பெற வேண்டும். அதை விடுத்து கழகத் தலைவரின் கனவுத் தோழராக மாறி, 2021 குறித்த கனவுகளில் மூழ்கி இருந்தால், உங்களுக்கு அரசியல் அடையாளத்தை எந்த சமுதாய மக்கள் கொடுத்தார்களோ, அதே மக்கள் உங்களின் அரசியலுக்கு முடிவுரை எழுதுவர். அது உறுதி!” என்று தெரிவித்திருக்கிறார்.

புதன், 9 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon