மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

வாட்ஸ் அப்: மாற்றப்போகும் மூன்று விஷயங்கள்!

வாட்ஸ் அப்: மாற்றப்போகும் மூன்று விஷயங்கள்!

சிவபெருமானுக்கும் தருமிக்கும் இடையே இப்போது ஒரு சோதனை நடைபெறுகிறதென வைத்துக்கொள்ளுங்கள். அதில், தருமி ‘இன்றியமையாதது எது?’ என்று கேட்டால், ‘வாட்ஸ் அப்’ என்று பதில் சொல்வார் சிவபெருமான். அந்தளவுக்குப் பெரும்பாலான மக்களின் தினசரி உபயோகத்தில் இடம்பிடித்துவிட்டது வாட்ஸ் அப். அதிகம் பயன்படுகிறதென்பதால், அப்படியே வைத்துக்கொள்ள முடியுமா... மாறும் காலத்துக்கேற்ப அதையும் அப்டேட் செய்யவேண்டியது அவசியம் அல்லவா...

அடுத்த கட்ட வளர்ச்சியாக வாட்ஸ் அப் அறிவிக்கக்கூடிய சில டெக்னாலஜியைப் பற்றி பார்ப்போம்.

மறைந்து போகும் மெஸேஜ்கள்

யாரோ ஒருவருக்குத் தெரியாமல் வாட்ஸ் அப் மெஸேஜ் அனுப்பிவிட்டு, பிறகு அதை டெலிட் செய்திருக்கிறீர்களா? அப்படி டெலிட் செய்யப்பட்ட அந்த மெஸேஜ் என்னவென்று அவர் உங்களுக்கே போன் போட்டு கேட்கும்போது தர்ம சங்கடமான நிலைக்கு ஆளாகியிருக்கிறீர்களா? இந்த அப்டேட் உங்களுக்கானதுதான். வாட்ஸ் அப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம், ஒருவருக்கு அனுப்பப்படும் அல்லது அனுப்பப்பட்ட மெஸேஜ் எவ்வளவு நேரம் தெரிய வேண்டும் என்பதை நம்மால் செட் செய்ய முடியும். அதன்பிறகு, அந்த மெஸேஜ் இருந்த தடமின்றி அழிந்துவிடும். அநேகமாக அரசியல்வாதிகளுக்காகவே இந்த அப்டேட்டை வெளியிடுகிறதோ என்னவோ வாட்ஸ் அப்.

டார்க் மோட்

கூகுள் அறிவித்து வெற்றி பெற்றதும், ஆப்பிள் கம்ப்யூட்டர்களில் வெற்றிகரமாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பதுமான இந்த டார்க் மோட் அடுத்து வாட்ஸ் அப் அப்ளிகேஷனுக்கும் வருகிறது. இரவில் அல்லது குறைந்த ஒளியில் வாட்ஸ் அப் பயன்படுத்தும்போது, அதிக வெளிச்சத்தால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாக்க, வாட்ஸ் அப்பின் வெள்ளை மற்றும் பச்சை நிறங்கள் வேறு நிறத்துக்கு (பெரும்பாலும் கறுப்பாக) மாறக்கூடியதே டார்க் மோட் எனப்படும். என்னதான் டார்க் மோட் இருந்தாலும், குறைந்தபட்ச வெளிச்சத்தை மறைக்க முடியாது. எனவே, போர்வைக்குள் வைத்துக்கொண்டு ஸ்மார்ட்போனை பயன்படுத்தினால் பெற்றோரிடமோ, மனைவியிடமோ மாட்டிக்கொள்வீர்கள்.

வாட்ஸ் அப் உதவிக்கு வரும் கூகுள் அசிஸ்டென்ட்

வீடு முழுவதும் ஸ்மார்ட் எலெக்ட்ரானிக் பொருட்களைப் பொருத்தி, அதை ‘குரல் கட்டளை’ (Voice Command) மூலம் செயல்படுத்தும் காட்சிகள் விரைவில் எல்லா வீடுகளுக்கும் வந்துவிடும். இப்போது ஸ்மார்ட்போன் வரை வந்திருக்கிறது. கூகுள் அசிஸ்டென்ட்டைத் தட்டி எழுப்பிவிட்டு ‘ராமசாமிக்கு போன் போடு’ என்று சொன்னால் உடனே நம்பரை அழுத்தி போன் செய்துவிடுகிறது கூகுள் அசிஸ்டென்ட். ஆனால், அதுவே ராமசாமியிடம் ரகசியமாக பேச வேண்டியதிருந்தால் வாட்ஸ் அப் போன் கால்தான் சரியாக இருக்கும். ஆனால், அதை கூகுள் அசிஸ்டென்ட்டின் உதவி கொண்டு செய்ய முடியாத நிலை இருந்தது. இந்த நிலை மாறி, கூகுள் அசிஸ்டென்ட் மூலம் இனி வாட்ஸ் அப் கால்களை எளிதாக செய்யக்கூடிய வகையில் இந்தத் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

கேட்கும்போதே ஒரு விதமான பரவசம் பாயும் இந்தத் தொழில்நுட்பங்கள் வாட்ஸ் அப்பில் எப்போது வரப் போகிறதென்பது உங்கள் கேள்வியாக இருக்கலாம். அதே கேள்விதான் வாட்ஸ் அப் நிறுவனமும் கேட்டுக்கொண்டிருக்கிறது. வாட்ஸ் அப் டெவலப்பர் டீம் மேற்கண்ட தொழில்நுட்பங்களை 2020ஆம் ஆண்டின் பாதிக்குள் கொண்டுவந்திட வேண்டும் என்று வேலை செய்து கொண்டிருக்கிறது.

புதன், 9 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon