மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 29 மே 2020

பூம்பூம் மாட்டுடன் அமைச்சர் ஜெயக்குமார்

பூம்பூம் மாட்டுடன் அமைச்சர் ஜெயக்குமார்

கீழடி நாகரிகம் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் அதேவேளையில், பூம்பூம் மாட்டுக்காரர் போன்றவர்களை நாம் மறந்துவிடக் கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் மீன்வளத் துறை அமைச்சராக இருப்பவர் ஜெயக்குமார். அதிமுகவின் முகமாக ஊடகங்களில் தோன்றும் ஜெயக்குமாரின் பேட்டிகள் வெளிவராத நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இவரின் பேட்டிகளும் அதில் சொல்லும் பழமொழிகளும் இணையவாசிகளுக்கு விருந்து படைப்பவை. ஒருபக்கம் அரசியலில் எதிர்க்கட்சிகளைக் காரசாரமாக விமர்சிக்கும் ஜெயக்குமார், மறுபக்கம் தன்னை பற்றி வரும் மீம்ஸ்களை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு பகிர்ந்துகொள்வார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் வசித்து வரும் ஜெயக்குமார், தினந்தோறும் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அவ்வாறு நேற்று (அக்டோபர் 8) காலை நடைப்பயிற்சி சென்றபோது, எதிரே வந்த பூம்பூம் மாட்டுக்காரரை அழைத்து மாட்டிடம் ஆசிபெற்றார் ஜெயக்குமார். இதை வீடியோவாகவும் எடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், “ஐயா நல்லா இருக்கணும்னு, ஐயா தலை மேல ஆசீர்வாதம் பண்ணு” என பூம்பூம் மாட்டுக்காரர் சொல்ல, மாடு ஆசீர்வாதம் செய்கிறது. அதன்பிறகு பூம்பூம் மாட்டுக்காரருக்கு வணக்கம் வைத்து விடை பெறுகிறார் அமைச்சர்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “பூம்பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி, டும்டும் மேளந்தட்டி சேதி சொன்னான்டி.. என்பது அந்தக்கால இளசுகளின் ரிங்டோன். இன்றோ, நமது பண்பாட்டு கூறுகளை, பாரம்பரிய அம்சங்களைக் கேலியாகப் பார்க்கும் மனோபாவம் நிறைய பேரிடம் உள்ளது” என்று குறிப்பிட்ட அமைச்சர் ஜெயக்குமார், “ஆனால் பல ஆண்டுகளுக்குப் பிறகு பூம்பூம் மாட்டுக்காரர் ஒருவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாட்டின் தலையசைப்பும், பூம்பூம் மாட்டுக்காரரின் பேச்சும் என்னுள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், “தோண்டி எடுத்து கீழடி நாகரிகம் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் அதேவேளையில், நாம் இத்தகைய பூம்பூம் மாட்டுக்காரன் போன்றவர்களை மறந்துவிடக் கூடாது. இவர்களைக் காப்பதும் ஒன்றுதான், நமது நாகரிகத்தைக் காப்பதும் ஒன்றுதான்” என்றும் கூறியுள்ளார்.

புதன், 9 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon