மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 அக் 2019

சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி: வந்தாச்சு இன்சுலின் மாத்திரை!

சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி: வந்தாச்சு இன்சுலின் மாத்திரை!

நீரிழிவு நோயாளிகள் தங்களது சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதற்காக இன்சுலின் ஊசிகளைப் போட்டுக்கொள்கிறார்கள். உலகெங்கிலுமுள்ள கோடிக்கணக்கான டைப் 1 சர்க்கரை நோயாளிகள், தங்கள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை இந்த ஊசிகளைப் போட்டுக் கொள்கின்றனர். ஆனால் மருத்துவரின் உதவி இன்றி தாங்களே தோலுக்கு அடியில் செலுத்திக்கொள்ளும் இந்த இன்சுலின் ஊசிகள் பல சமயங்களில் அவர்களை சிரமத்திற்கு உள்ளாக்குகிறது.

சற்று வயது முதிர்ந்தவர்கள் ஒவ்வொரு முறையும் இந்த ஊசியைப்போட பிறரின் உதவியை நாட வேண்டியுள்ளது. இந்த இன்சுலின் மருந்தை சாதாரண அறை வெப்ப நிலையில் வைத்துப் பயன்படுத்த இயலாது. குளிர்ந்த வெப்பநிலையில் அதனை வைத்துப் பாதுகாக்க வேண்டும். இத்தகைய சிரமங்களிலிருந்து சர்க்கரை நோயாளிகளுக்கு விடுதலை அளிக்கும் விதமாக ஊசியாகப் போடப்பட்டு வந்த இன்சுலின் மருந்தை மாத்திரையாக உட்கொள்ளும் வகையில் அமெரிக்க ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவன ஆய்வாளர்கள் இன்சுலின் மாத்திரையைக் கண்டறிந்து சாதனையை நிகழ்த்தியுள்ளனர். அவர்கள் தயாரித்த இந்த மாத்திரை சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு அதன் முடிவுகள் நேச்சர் மெடிசன் என்ற இதழில் வெளியாகியுள்ளது. 30 மில்லி மீட்டர் நீளம் கொண்ட இந்த மாத்திரை ஜீரண மண்டல அமிலங்களால் பாதிக்கப்படாமல் இருக்க அதன் மீது பிரத்யேக பூச்சு பயன்படுத்தியிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மாத்திரை உட்கொள்ளப்பட்டவுடன் நேரடியாக சிறுகுடலை சென்றடையும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. சிறுகுடலில் பி.ஹெச். அளவு அதிகம் இருக்கும் என்பதால் அப்பகுதியை அடைந்த பின்பே மாத்திரை வெடிக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னனதாக, புளூ பெர்ரி அளவிலான மாத்திரையைக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள் அதன் மூலம் இன்சுலினைச் செலுத்தி சோதனையிட்டனர். ஆனால், அதில் சில குறைகள் இருந்ததால் மாத்திரையை விழுங்கியதும் அது வேறெங்கும் சிக்காமல் நேராக சிறுகுடலைச் சென்றடையும் வண்ணம் புதிய மாத்திரையை வடிவமைத்து சாதனை புரிந்துள்ளனர்.

புதன், 9 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon