மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 28 மே 2020

உலகளாவிய மந்தநிலை: எச்சரிக்கை மணியடித்த ஐ.எம்.எஃப் தலைவர்!

உலகளாவிய மந்தநிலை: எச்சரிக்கை மணியடித்த ஐ.எம்.எஃப் தலைவர்!

உலகளாவிய மந்தநிலையின் விளைவு இந்தியாவில் அதிகமாக வெளிப்பட்டிருக்கிறது என சர்வதேச நாணய நிதியத்தின் புதிய தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.

பல்கேரிய பொருளாதார நிபுணர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா சர்வதேச நாணய நிதியத்தின் புதிய தலைவராக சென்றமாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, நேற்று(அக்டோபர் 8) வாஷிங்டனில் தனது முதல் உரையை ஆற்றிய கிறிஸ்டலினா, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக போர், உலகப் பொருளாதாரத்தை பாதிக்கிறது என்றும், உலகளவில் கடந்த பத்து ஆண்டுகளில் மிகக் குறைவான வளர்ச்சி விகிதம் இந்தாண்டில் தான் நிகழ்ந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

கிறிஸ்டலினா ஜார்ஜீவா தனது உரையில், “2019 ஆம் ஆண்டில், உலகப் பொருளாதார வளர்ச்சியில் கிட்டத்தட்ட 90 சதவீதம் மெதுவான வளர்ச்சி நிலவி வருவதை நாம் பார்க்கிறோம். அதே சமயம், உலகளாவிய மந்தநிலை தற்போது நிலவி வருகின்றது. வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், அமெரிக்கா மற்றும் ஜெர்மனியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது. உலகளாவிய மந்தநிலையின் வெளிப்பாடு வளர்ந்து வரும் முக்கிய சந்தையாக கருதப்படும் இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் அதிகம் வெளிப்பட்டிருக்கிறது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு சீனாவின் பொருளாதார வளர்ச்சி படிப்படியாக குறைந்து வருகின்றது.

வர்த்தகப் போரின் இரண்டாம் நிலை விளைவுகளாக இருப்பவை: நம்பிக்கை இழப்பு மற்றும் நிதிச் சந்தை எதிர்வினைகள் போன்றவை. இவை நேரடி பொருளாதார தாக்கத்தை விட மிகப் பெரியவை என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆராய்ச்சி காட்டுகிறது” எனக் கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் சீனாவுடனான வர்த்தகப் போர், இருவழி வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. அதே சமயம், இது நேரடியாகவும் மறைமுகமாகவும் வர்த்தக உலகை பீடித்திருக்கின்றன. இது குறித்து கருத்து தெரிவித்த கிறிஸ்டலினா ஜார்ஜீவா “முடிவுகள் தெளிவாக உள்ளன. வர்த்தகப் போரில் எல்லோரும் தோற்றார்கள், ”என்று கூறினார். மேலும், “வர்த்தக மோதலின் தாக்கம் பரவலாக இருப்பதாகவும், பண உட்செலுத்துதலுடன் ஒற்றுமையாக உடன்பட உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் ஐ.எம்.எஃப் ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகிறது” என்றார்.

பருவ நிலை மாற்றங்களையும் குறிப்பிட்ட ஐ.எம்.எஃப் புதிய தலைவர், “காலநிலை மாற்ற நெருக்கடிக்கு தேசிய வரி முறைகளில் மாற்றம் தேவைப்படுகிறது. இதில் கார்பன் உமிழ்வு மீதான வரிகளில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும். காலநிலை மாற்றம் என்பது நெருக்கடி. அனைவருக்கும் இதில் செயல்பட வேண்டிய பொறுப்பு உள்ளது. புவி வெப்பமடைதலை பாதுகாப்பான நிலைக்கு கட்டுப்படுத்துவதற்கு கணிசமான அளவில் கார்பன் விலையை அதிகப்படுத்துவது தேவைப்படுகிறது. இங்கே முக்கியமானது வரி முறைகளை மாற்றுவதே தவிர, புதிய வரியைச் சேர்ப்பதில்லை. இந்த புதிய வரி வருவாய்கள் சேதத்தைத் தணிக்கவும், பூமியை குணப்படுத்த உதவும் தூய்மையான எரிசக்தி உள்கட்டமைப்பில் முதலீடுகளை ஆதரிக்கவும் பயன்படும்" என்று அவர் கூறினார்.

புதன், 9 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon