மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 27 மே 2020

மாமல்லபுரத்தில் சீன அதிபர்: வரவேற்பும் எதிர்ப்பும்!

மாமல்லபுரத்தில் சீன அதிபர்: வரவேற்பும் எதிர்ப்பும்!

சீன அதிபரின் மாமல்லபுரம் வருகைக்கு ஸ்டாலின், வைகோ ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மாமல்லபுரத்தில் வரும் 11,12 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்தியா-சீனா இடையேயான முறைசார உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் கலந்துகொள்கின்றனர். மாமல்லபுரத்தில் அர்ஜுனன் தபசு, ஐந்துரதம், கடற்கரை கோயில் ஆகியவற்றையும் பார்வையிடுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்துவருகிறது.

இந்த நிலையில் சீன அதிபர் வருகை தொடர்பாக இன்று (அக்டோபர் 8) அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “உலகம் உற்றுநோக்கி, பாடம் பெறத் தகுந்த ஒரு தேசத்தின் அதிபர், தமிழகம் வருவது தமிழர்கள் அனைவருக்கும் பெருமை தரத்தக்கது என்ற அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் என்னும் முறையிலும், திமுக சார்பிலும் மனமார வரவேற்கிறேன். சீன நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பல்லவ மன்னர்களின் துறைமுகப் பட்டினமாக விளங்கிய மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் ஜீ ஜின்பிங் வருகை தருவது, இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

சீன அதிபரும், பிரதமர் நரேந்திர மோடியும் நடத்தும் இருநாட்டு நல்லுறவுப் பேச்சுவார்த்தை தமிழகத்தில் நடப்பது தமிழகத்துக்கு பெருமை தரத்தக்கது எனவும், இதற்காக மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், “தேசம் வேறு வேறு ஆனாலும், வானம் ஒன்றே, எல்லைகள் பிரித்தாலும் எண்ணம் ஒன்றே என்ற அடிப்படையில் அமையும் இந்தப் பேச்சுவார்த்தை இரண்டு தேசங்களுக்கு மட்டுமல்ல, உலக சமுதாயத்துக்கும் ஒளிதருவதாய் அமையட்டும்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், “நீண்ட நெடிய பாரம்பரிய கலாச்சாரத் தொடர்புகளை மீள் உருவாக்கம் செய்கின்ற வகையில், கல்லில் கலை வண்ணம் கண்ட பல்லவர்களின் துறைமுகப்பட்டினமான மாமல்லபுரத்தில், பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் சந்தித்துப் பேசுவது வரலாற்றுச் சிறப்பு ஆகும். இதன் மூலம் இரு நாட்டிற்குள்ளும் சகோதரத்துவம் மலர்ந்து, ஆசியக் கண்டத்தின் அமைதிக்கு வித்திடுவார்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “புகழ் வாய்ந்த மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலா நகரமாகத் திகழ, சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை அறிந்து, உள்ளூர் மக்களின் கருத்துக் கேட்டு, அயல்நாட்டுப் பயணிகளை மென்மேலும் ஈர்க்கின்ற வகையில், சுற்றுலா வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளையும் வைகோ முன்வைத்திருக்கிறார்.

ஆனால் சீன அதிபரின் வருகைக்கு சமூக செயற்பாட்டாளர் ட்ராபிக் ராமசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “சீன அதிபர் தமிழகம் வரவுள்ளார். ஒரு சீன அலுவலகத்தில் அதிகாரியாக உள்ள ஒருவர் 13.5 டன் தங்கம் வைத்திருக்கிறார் என ஊடகங்களில் தகவல் வந்திருக்கிறது. ஊழல்வாதியான சீன அதிபருக்கு வரவேற்பு அளிப்பது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழகல்ல. அதை நிறுத்தினால் நல்லது. இல்லையெனில் இருவர் மீதும் வழக்கு தொடரப்படும்” என்று எச்சரித்துள்ளார்.

செவ்வாய், 8 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon