மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 21 செப் 2020

பிகில்: விஜய்யை துரத்தும் பழைய கணக்கு!

பிகில்: விஜய்யை துரத்தும் பழைய கணக்கு!

பிகில் திரைப்படம் அக்டோபர் 27 ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 20 நாட்களே மீதமிருக்கும் நிலையில், பிகில் திரைப்படத்தினை இதுவரை சென்சார் செய்யவில்லை. இதற்குக் காரணம், படத்திலுள்ள ஏதாவது ஒரு காட்சியையோ அல்லது குறிப்புகளையோ வைத்து யாரும் எந்தப் பிரச்சினையும் செய்துவிடக்கூடாது என்பது தான். ஆனால், அதையும் தாண்டி பிகில் படத்துக்கு பிரச்சினையை ஏற்படுத்த காத்திருக்கின்றனர் சிலர். அதற்குக் காரணம் விஜய் தீர்க்காமல் வைத்திருக்கும் பழைய கணக்குகள்.

அக்டோபர் 9ஆம் தேதி(நாளை) தான் பிகில் படத்தை சென்சார் செய்ய அப்ளிகேஷன் கொடுக்கப் போகிறது தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். முழு ஸ்கிரிப்ட் மற்றும் படத்தின் இறுதி வடிவத்தை இயக்குநர் அட்லீ தயாரிப்பு தரப்பிடம் கொடுத்துவிட்டார். ஆனால், படம் சென்சாருக்குச் செல்வதற்கு முன்பே பிகிலுக்கு பிரச்சினை ஏற்படக்கூடிய காரணிகளிடம் சமாதானம் செய்ய தயாரிப்பு தரப்பிலிருந்து முயற்சிகள் எடுக்கப்பட்டன.

மெர்சல் திரைப்படத்திற்கு ஏற்பட்ட பிரச்சினையின்போது, அந்தப் படத்தைத் தயாரித்த தேனாண்டாள் ஃபிலிம்ஸின் முரளி தான், எச்.ராஜாவுடன் பேசி அந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவந்தார். எனவே, முரளி மூலமாகவே பிகிலுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத் தடுக்கலாம் என ஏ.ஜி.எஸ் தரப்பு முயற்சித்தது. ஆனால், அதற்கு முரளி சம்மதிக்கவில்லை.

சக தயாரிப்பாளரான ஏ.ஜி.எஸ் அழைத்தும் முரளி செல்லாததற்கான காரணம் என்னவென்று விசாரித்தபோது வெளியாகும் தகவல்கள் மீண்டும் மெர்சல் காலத்துக்கே கொண்டுசெல்கின்றன.

மெர்சல் திரைப்படத்துக்கு ஏற்பட்ட பிரச்சினைகளால் எதிர்பாராத பல பண இழப்புகளை தேனாண்டாள் நிறுவனம் சந்திக்க நேர்ந்தது. அதற்காக, அப்போது விஜய்யும், அட்லீயும் தங்கள் சம்பளத்திலிருந்து தலா 5 கோடிகளை விட்டுக்கொடுத்தனர். கிட்டத்தட்ட 50 கோடி வரை ஏற்பட்ட இழப்புக்கு அந்த 10 கோடி போதாது என்பதால், 2019ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு படத்துக்கான கால்ஷீட் கொடுப்பதாக அப்போது விஜய் உறுதி கூறியிருக்கிறார். ஆனால், அந்த கால்ஷீட்டை தான் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தளபதி 64’ படத்துக்குக் கொடுத்துவிட்டார்.

இதனால் மனமாற்றம் அடைந்த முரளி அடுத்த படங்களுக்கு வேலை செய்ய கிளம்பிவிட்டார். இந்நிலையில், ஏ.ஜி.எஸ் நிறுவனத்திடமிருந்து அழைப்பு வந்தது. எவ்வித தொடர்பும் இல்லாமல் எதற்காக இந்தப் பிரச்சினையில் தலையிடவேண்டும் என்று அவர் ஒதுங்கிவிட்டார்.

பிகில் படத்திற்கு ஏற்படவிருக்கும் பிரச்சினைக்கு உதவ தமிழ் சினிமாவில் யாருமே தயாராக இல்லை என்கின்றனர். ‘சாதாரணமாக ரிலீஸாகும் படத்துக்கு பிரச்சினை என்றால் உதவச் செல்லலாம். அப்படி இல்லாமல், இசை வெளியீடு நிகழ்ச்சியின்போது விஜய் பேசுவதாலும், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுவதாலும் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நாம் என்ன செய்யமுடியும்’ என்று எல்லோரும் ஒதுங்குகிறார்கள்.

அக்டோபர் 9ஆம் தேதி பிகில் படத்தை சென்சாருக்கு சமர்ப்பிக்கும் பட்சத்தில், அக்டோபர் 14ஆம் தேதி அந்தப் படத்தை சென்சார் குழுவினர் பார்க்க முடியும். ஆனால், பிகிலை சுற்றி நடைபெறும் அரசியல் மூவ்களின் காரணமாக சென்சார் நடைபெறுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது என்கிறது கோடம்பாக்கத்தின் கணக்கு.

அப்படி என்ன அரசியல் பிகிலைச் சுற்றி நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள:

விஜய் படத்துக்குத் தடை: மத்திய, மாநில அரசுகள் தீவிரம்!

செவ்வாய், 8 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon