மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 15 ஆக 2020

உத்வேகம் தந்த சோனியா: ப.சிதம்பரம்

உத்வேகம் தந்த சோனியா: ப.சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தை இன்று (செப்டம்பர் 23) காலை காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தியும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் சிறைக்கு சென்று சந்தித்தனர். சிதம்பரத்தின் உடல் நலம் பற்றி விசாரித்த சோனியா, இந்தியாவின் தற்போதைய பொருளாதார நிலைமை பற்றியும் விவாதித்தார்.

சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் நீடித்த இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம்,

“காங்கிரஸ் தலைவர் , முன்னாள் பிரதமர் ஆகியோர் எனது தந்தையை சந்தித்திருக்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் எப்போதுமே தனது ஆதரவை எனது தந்தைக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் ஆதரவும் எனது தந்தைக்கு உறுதியாக உண்டு என என்னிடம் சொல்லியிருக்கிறார். இதை இன்று என் தந்தையை சந்தித்து நேரடியாகவே சொல்லியிருக்கிறார். இந்த சந்திப்பு எங்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தைத் தந்திருக்கிறது. மத்திய அரசின் பொய் வழக்கை எதிர்த்துப் போராட எங்களுக்கு மிகப் பெரும் சக்தியைக் கொடுத்திருக்கிறது” என்று கூறினார்.

இன்று காலை திகார் சிறையில் சோனியாவும், மன்மோகன் சிங்கும் தன்னை சந்தித்தாக ப.சிதம்பரம் தனது குடும்பத்தினர் மூலம் ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

“காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஆகியோர் என்னைப் பார்க்க வந்ததை நான் இன்று மதிக்கிறேன். காங்கிரஸ் கட்சி வலுவாகவும் தைரியமாகவும் இருக்கும் வரை நானும் பலமாகவும் தைரியமாகவும் இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார் சிதம்பரம்..

தனது ட்விட்டரில் மேலும் குறிப்பிட்டிருக்கும் சிதம்பரம், “வேலையின்மை, இருக்கும் வேலைகள் இழப்பு, குறைந்த ஊதியம், கும்பல் வன்முறை, மூடிக் கிடக்கும் காஷ்மீர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் தள்ளுவது தவிர இந்தியா மிகவும் நன்றாகத்தான் இருக்கிறது” என்று அமெரிக்காவில் பிரதமர் மோடி, ‘இந்தியாவில் எல்லாம் நன்றாக இருக்கிறது’ என்று சொன்னதைக் கிண்டலடித்திருக்கிறார்.

திங்கள், 23 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon