மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

விக்கிரவாண்டி: ஜெகத்ரட்சகன் மகனுக்கு திமுக சீட்டா?

விக்கிரவாண்டி:  ஜெகத்ரட்சகன் மகனுக்கு திமுக சீட்டா?

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து இத்தொகுதிகளில் யார் வேட்பாளர் என்ற கேள்வி திமுக, அதிமுக என இருதரப்பிலும் எதிரொலித்து வருகிறது.

திமுக கூட்டணியில் நாங்குநேரி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுவிட்ட சூழலில், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு விடை தேடி விக்கிரவாண்டியில் வலம் வந்தோம்.

103 ஊராட்சிகள், ஒரு பேரூராட்சியைக் கொண்ட விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட திமுகவின் அனைத்து ஒன்றிய செயலாளர்களையும் சில வாரங்கள் முன்பு அறிவாலயத்துக்கு அழைத்திருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். விக்கிரவாண்டி, கானை கிழக்கு, மேற்கு உட்பட அனைத்து ஒன்றியச் செயலாளர்களிடமும் யாருக்கு வேட்பாளர் வாய்ப்பு கொடுக்கலாம் என்று கேட்டிருக்கிறார். மத்திய மாவட்டப் பொருளாளர் புகழேந்தி, மத்திய மாவட்ட துணைச் செயலாளர் ஜெயச்சந்திரன் ஆகியோரது பெயர்கள் பற்றிய விவாதம் வந்தது.

இரு ஒன்றிய செயலாளர்கள் புகழேந்திக்குக் கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்கள். ஒரு ஒன்றிய செயலாளர் கட்சி யாருக்குக் கொடுத்தாலும் வேலை செய்கிறோம் என்று சொல்லியிருக்கிறார். இன்னொரு ஒன்றிய செயலாளரோ, ‘யாருக்குக் கொடுத்தாலும் ஜெயச்சந்திரனுக்கு கொடுத்து விடாதீர்கள்’ என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.

விக்கிரவாண்டியில் வன்னியர் சமுதாய வேட்பாளர்தான் நிறுத்தப்படுவார். புகழேந்தி, ஜெயச்சந்திரன் இருவருமே வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஆனாலும் இவர்களால் சி. வி. சண்முகத்துக்கு ஈடுகொடுத்துப் போராட முடியுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இந்த நிலையில்தான் ஸ்டாலினுக்கு இன்னொரு யோசனை எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

”முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் விழுப்புரம் மாவட்டத்துக்காரர்தான். ஆனால் அவருக்கு, தான் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து அரசியல் செய்ய முடியவில்லையே என்ற ஒரு குறை இருக்கிறது. வேண்டுமானால் இந்த முறை ஜெகத்ரட்சகனின் மகன் லட்சுமி நாராயணன் என்கிற சந்தீப் ஆனந்தை விக்கிரவாண்டியில் நிறுத்தலாம். அப்படி நிறுத்தினால் அமைச்சர் சி.வி. சண்முகம் உள்ளிட்ட அதிமுக அரசின் ஆற்றலுக்கு எல்லா வகையிலும் ஈடு கொடுக்கக் கூடிய வன்னியராக இருப்பார்.

இதில் இன்னொரு வசதி இருக்கிறது. கடந்த தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் பாமக தனித்துப் போட்டியிட்டு 40 ஆயிரம் வாக்குகள் வாங்கியிருக்கிறது. இப்போது அதிமுக கூட்டணியில் பாமக இருக்கிறது. நாம் ஜெகத்தின் குடும்பத்திலிருந்து ஒருவரை நிறுத்தினால், பாமக மேலிடத்திடம் எப்படியாவது பேசி ஜெகத், அதிமுகவுக்கான பாமகவின் ஒத்துழைப்பைக் குறைத்து விடுவார். இது மற்ற வேட்பாளர்களை நிறுத்தினால் நடக்காது. தவிர ஜெகத் மகனை நிறுத்தினால் செலவுக்கும் பிரச்சினை இருக்காது” என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஜெகத்ரட்சகனின் மகன் இப்போது பாரத் பல்கலைக் கழகம், லட்சுமி நாராயணா கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார்.

இந்த பாயின்ட்டுகளை யோசித்த ஸ்டாலின் முன்பே இதுகுறித்து ஜெகத்ரட்சகனிடம் பேசியிருக்கிறார். ஆனால் ஜெகத்ரட்சகனோ, “எதுக்குங்க அவரையெல்லாம் கூட்டி வந்துக்கிட்டு” என்று இழுத்திருக்கிறார். ஆனாலும் விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடியின் அதிருப்தியாளர்கள் இதுதான் சமயம் என்று ஜெகத்ரட்சகன் மகனை களத்தில் இறக்கிவிடலாம் என்று தீவிரமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

அதிமுக தரப்பில் அமைச்சர் சிவி. சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணன் தேர்தலில் நிற்க மறுத்து வரும் நிலையில், கானை ஒன்றிய செயலாளர் முத்தமிழ்ச்செல்வன், ஏற்கனவே கடந்த தேர்தலில் போட்டியிட்ட சிந்தாமணி வேலு என்கிற சேவல் வேலு ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று பேசப்படுகிறது.

ஞாயிறு, 22 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon