மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 21 செப் 2020

அக்டோபர் 21 இடைத்தேர்தல்: போட்டியிட மறுத்த அமைச்சரின் அண்ணன்!

அக்டோபர் 21 இடைத்தேர்தல்:  போட்டியிட மறுத்த அமைச்சரின் அண்ணன்!

தமிழ்நாட்டில் நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி திங்கள் கிழமை தொடங்குகிறது. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம். மனுக்கள் பரிசீலனை அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறும். மனுக்களை வாபஸ் வாங்க கடைசி நாள் அக்டோபர் 3 ஆம் தேதியாகும்.

இதையடுத்து அக்டோபர் 21 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். இந்தத் தகவல்களை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று (செப்டம்பர் 21) டெல்லியில் அறிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் முக்கியமான கால கட்டத்தில் நடக்கும் இந்த இடைத்தேர்தல் களத்தில் திமுகவும், அதிமுகவும் நேரடியாக மோதும் தொகுதியாக விக்கிரவாண்டி தொகுதி இருக்கிறது. விக்கிரவாண்டி தொகுதி மீது பாமக ஒரு கண் வைத்தபோதும், அமைச்சர் சி.வி. சண்முகம் அதற்கு சம்மதிக்கவில்லை. விக்கிரவாண்டி தொகுதியில் தனது அண்ணன் ராதாகிருஷ்ணனை நிறுத்த விரும்பினார் அமைச்சர். ஆனால் அண்மையில் தனது மகனுக்கு ஏற்பட்ட விபத்தை அடுத்து மகனுக்கான சிகிச்சைகளில் தீவிரமாக இருக்கும் ராதாகிருஷ்ணன், இந்த நிலைமையில் தன்னால் தேர்தலில் போட்டியிட முடியாது என்று மறுப்பு தெரிவித்துவிட்டார். அதனால் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யும் பொறுப்பை அமைச்சர் சி.வி. சண்முகத்திடமே கொடுத்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இதேபோல நாங்குநேரி தொகுதியை தங்கள் தொகுதி என்ற வகையில் காங்கிரஸ் மீண்டும் கேட்டு வரும் நிலையில் அத்தொகுதியில் திமுகவே நிற்கிறதா, காங்கிரஸுக்கு கொடுக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் செப்டம்பர் 20 ஆம் தேதி காலை 7 மணி பதிப்பில் விக்கிரவாண்டி: தொகுதிக்குள் ‘இறங்கியது’ அதிமுக பணம்!என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அச்செய்தியில், ‘கடந்த ஓரிரு தினங்களில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அத்தனை பூத்களுக்கும் அதிமுகவில் தலா 20 ஆயிரம் ரூபாய் விநியோகிக்கப்பட்டுவிட்டதாக அதிமுக வட்டாரத்தில் சொல்கிறார்கள். இந்தத் தொகை என்பது பூத் அளவில் கூட்டங்கள் போடுவது, சுவர்களுக்கு வெள்ளையடிப்பது போன்ற ஆயத்தப் பணிகளுக்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் விக்கிரவாண்டியில் விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும் என்று அறிந்துகொண்டு அதிமுக தனது பணிகளை கமுக்கமாக தொடங்கிவிட்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது” என்று குறிப்பிட்டிருந்தோம்.

அதன்படியே அடுத்த நாளான இன்று (செப்டம்பர் 21) இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சனி, 21 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon