மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

பாலியல் வழக்கு: சின்மயானந்தாவுக்கு 14 நாள் சிறை!

பாலியல் வழக்கு: சின்மயானந்தாவுக்கு 14 நாள் சிறை!

பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா பாலியல் வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார். இவரை 14 நாட்கள் காவலில் வைக்க ஷாஜகான்பூர் கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஷாஜகான்பூர் பகுதியில் உள்ள, முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம்பியுமான சின்மயானந்தாவின் முமுக்‌சூ ஆசிரமத்தால் நடத்தப்படும் எஸ்.எஸ். சட்டக் கல்லூரி மாணவி ஒருவர், சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துக் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதன்பின் அவர் மாயமானார். அவரை போலீசார் ராஜஸ்தானில் கண்டுபிடித்து உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவி தங்கியிருந்த அறை மற்றும் முமுக்சூ ஆசிரமத்தில் சின்மயானந்தா தங்கியிருந்த அறை ஆகியவற்றில் விசாரணைக் குழு ஆய்வு செய்து சீல் வைத்தது. சின்மயானந்தாவின் கல்லூரிகளில் பணியாற்றி வரும் 2 முதல்வர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், சின்மயானந்தாவிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. சட்டப்பிரிவு 354 டி (பின்தொடர்தல்), 506 (கிரிமினல் மிரட்டல்), உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்தச்சூழலில் நேற்று (செப்டம்பர் 20) காலை பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் சின்மயானந்தா கைது செய்யப்பட்டார். முதலில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அவர், பின்னர் ஷாஜகான்பூர் கீழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சின்மயானந்தாவுக்கு எதிராக வலுவான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்கள், ஆவணங்கள் இருப்பதாக நீதிமன்றத்தில் விசாரணைக் குழு தெரிவித்திருக்கிறது. இதை விசாரித்த நீதிபதி , 14 நாட்கள் சின்மயானந்தாவை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் ஷாஜகான்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக விசாரணைக் குழுவிடம் சின்மயானந்தா, எனது செயலுக்காகத் தான் வருந்துவதாகத் தெரிவித்திருக்கிறார். இவ்வழக்கை விசாரிக்கும் சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவரான நவீன் அரோரா, பாதிக்கப்பட்ட மாணவி சின்மயானந்தாவுக்கு மசாஜ் செய்துவிடும் வீடியோ தங்களிடம் இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கிழக்கு உ.பி. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டிய பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. சின்மயானந்தா கைதுக்கு மக்கள், பத்திரிகைகளின் வலிமையே காரணமாகும். பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் என்பது முழக்கமாக மட்டுமே இருக்கக் கூடாது. அது நடைமுறையிலும் கடைப்பிடிக்கப்படும் என்பதை மக்களுக்கு உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சனி, 21 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon