இடைத்தேர்தல்: அதிமுக கூட்டணியில் நாங்குநேரியைக் கேட்கும் பாஜக

public

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதி அக்டோபர் 21 என்று அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்துள்ளது.

நாங்குநேரியை காங்கிரஸுக்கே ஒதுக்கி அறிவித்துவிட்டது திமுக. திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக இளைஞர் அணித் தலைவர் ஆகாத நிலையிலேயே, உதயநிதி பேசும்போது திருச்சி காங்கிரஸ் எம்.பி.யான திருநாவுக்கரசரை மேடையில் வைத்துக் கொண்டே நாங்குநேரி தொகுதியை திமுகவுக்கு விட்டுக்கொடுக்கவேண்டும் என்று அழுத்தமாகப் பேசினார். அதே நேரம் காங்கிரஸார் நாங்குநேரியை தங்களுக்கே வேண்டும் என்று கேட்டனர். அண்மையில் நாங்குநேரியில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்திய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியும் இதையே பேசினார்.

இந்நிலையில் இன்று செப்டம்பர் 21ஆம் தேதி, தேர்தல் ஆணையம் இடைத் தேர்தல் தேதியை அறிவித்தபோதே காங்கிரஸ் தலைவர்கள் அறிவாலயத்துக்கு சென்றுவிட்டனர். பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் விக்கிரவாண்டியில் திமுகவும், நாங்குநேரியில் காங்கிரஸும் போட்டியிடும் என்று அறிவித்தார்.

அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியைத் தனிமைப்படுத்திவிடவேண்டும் என்பது பாஜக தலைவர் அமித்ஷாவின் மாஸ்டர் பிளான். அதன்படிதான் ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகள் மீது கடுமையான அணுகுமுறையைக் கையாண்டுவருகிறது. ஆனாலும் தனக்கு இந்த நேரத்தில் காங்கிரஸின் உதவி தேவை என்பதால் ஸ்டாலினே நாங்குநேரியை காங்கிரசுக்குக் கொடுக்க முடிவு செய்துவிட்டார்.

திமுகவில் இப்படி என்றால் அதிமுக கூட்டணியில் இன்னும் ஒரு நகர்வு தீவிரம் அடைந்திருக்கிறது. அது என்னவென்றால் நாங்குநேரி தொகுதியை பாஜக குறிவைத்திருக்கிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “பாரதிய ஜனதா கட்சி அதிமுக கூட்டணியில் ஓர் அங்கமாக இருக்கிறோம். இந்த இடைத் தேர்தலில் பாஜகவின் நிலைப்பாட்டை பற்றி மத்திய தலைமையிடம் கேட்டிருக்கிறோம். அதன்படி முடிவெடுப்போம். எது எப்படி இருந்தாலும் எங்கள் கூட்டணி வெற்றிபெற முழு உழைப்பையும் கொடுப்போம்” என்று சொல்லியிருக்கிறார்.

வேலூர் மக்களவைத் தேர்தலின் போதெல்லாம் அதிமுக கூட்டணி பற்றி பெரிதாகப் பேசாத பாஜக, இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே, ‘நாங்கள் அதிமுக கூட்டணியின் அங்கம்’ என்று சொல்லியிருப்பதன் அர்த்தமே நாங்குநேரியில் பாஜக போட்டியிட விரும்புகிறது என்பதுதான்.

“நாங்குநேரி தொகுதியில் 2016இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக வசந்தகுமார் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளர் விஜயகுமாரைவிட 17,315 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி, பாமக, அகில இந்திய பார்வேடு பிளாக் கட்சி போன்ற வேட்பாளர்களும் போட்டியிட்டார்கள்.

தென் மாவட்டங்களில் பாஜக வளர்ச்சி பெற்றிருப்பதாக நினைக்கும் பாஜக, அதிமுக கூட்டணியில் தாங்களே நாங்குநேரியில் நின்று மத்திய, மாநில ஆளுங்கட்சி பலத்துடன் வெற்றிபெற்றுவிடலாம் எனத் திட்டமிடுகிறார்கள். என்னதான் வெளியே திமுக- காங்கிரஸ் தலைவர்கள் சிரித்துக் கொண்டே போஸ் கொடுத்தாலும் நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு திமுக முழுமையாக வேலை செய்யாது. அதுவே பாஜகவுக்குச் சாதகமாக இருக்கும். நாங்குநேரி தொகுதியை பாஜக கேட்டால், தரமுடியாது என்று அதிமுகவால் சொல்ல முடியுமா என்ன?” என்கிறார்கள் பாஜக தரப்பில்.

அப்படி நாங்குநேரி பாஜகவுக்குக் கொடுக்கப்பட்டால் காங்கிரஸும் பாஜகவும் சட்டமன்றத் தேர்தலில் நேரடிப் போட்டியிடும் தொகுதியாக நாங்குநேரி மாறும்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *