மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

உள்ளே விஜய் பேசப் பேச, வெளியே ரசிகர்களுக்கு அடி!

உள்ளே விஜய் பேசப் பேச, வெளியே ரசிகர்களுக்கு அடி!

‘இட்லியும் சரி, அட்லீயும் சரி எப்பவுமே சூடு தான்’ என்று கலகலப்பாக பேசி விஜய் தனது ரசிகர்களுக்குக் கொடுத்த எனெர்ஜி, பிகில் இசை வெளியீட்டு விழா முடியும் வரை குறையவே இல்லை. பத்தாயிரம் பேர் கூடும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது அந்த விழா. பல மாதங்களாக விஜய் தனக்குள் அடக்கிவைத்திருந்த பல விஷயங்களைப் பற்றி நேற்று(19.09.19) சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பிகில் இசை வெளியீட்டு விழாவில் பேசினார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல் பாடிய அனுபவத்தை “முதலில் நான் தனியாகவே பாடலைப் பாடிவிட்டுச் சென்றேன். பிறகு, ரஹ்மான் கூப்பிடுவதாக அட்லீ கூறியதும் எனக்கு படபடப்பாகிவிட்டது. பிறகு, அவர் தான் தைரியம் சொல்லி அழைத்துச் சென்றார்” என்று பகிர்ந்துகொண்டு, அந்தப் பாடலை டிவிட்டரில் டிரெண்ட் செய்து வெற்றிபெறச் செய்த ரசிகர்களுக்கு நன்றியும் கூறினார்.

டிவிட்டரில் இயங்கும் விஜய் ரசிகர்களுக்கு அறிவுரையாகவும், அஜித் ரசிகர்களுடன் ஏற்படும் மோதல் குறித்தும் விளக்கும் வகையில், “என் ரசிகர்களும், இளைஞர்களும் ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யும் சக்தியை, வெறுப்பை உருவாக்க பயன்படுத்துவதற்கு பதிலாக, சுபஸ்ரீ இறந்தது போன்ற சமூகப் பிரச்சினைகளுக்கு நீதி கேட்க பயன்படுத்தவேண்டும்” என்று கூறினார்.

சுபஸ்ரீ பற்றி பேசும்போது “என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை சுபஸ்ரீயின் குடும்பத்துக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கிருப்பவர்கள், இந்தக் குற்றத்துக்குக் காரணமானவர்களை விட்டுவிட்டு பேனர் பிரிண்ட் செய்தவர்களையும், லாரி டிரைவரையும் கைது செய்திருக்கிறார்கள். யார் யாரை எங்கு வைக்கவேண்டுமோ, அங்கு வைத்தால் இதுபோன்ற பிரச்சினை வராது” என்று பொது விஷயங்களைப் பற்றி குறிப்பிட்டார்.

கடைசியாக பிகில் படத்தைப் பற்றிப் பேசுவது போல “நம் வாழ்க்கையும் ஒரு ஃபுட்பால் போட்டி போலதான். நாம் கோல் அடிக்க நினைக்கும்போது நம்மை கூட்டமாகச் சேர்ந்து எதிர்ப்பார்கள். அதேசமயம், நம்முடன் இருப்பவரே நமக்கெதிராக ஓன் சைடு கோல் அடிப்பார். வாழ்க்கையில் இன்னொருவரைப்போல நாம் இருக்கவேண்டும் என நினைக்கக்கூடாது. நமக்கான அடையாளத்தை உருவாக்க வேண்டும். நான் சொல்வது சரி என்று நினைத்தால் எடுத்துக்கொள்ளுங்கள் இல்லையென்றால் விட்டுவிடுங்கள்” என்று கூறினார்.

தன்னை எதிர்ப்பவர்களுக்கு விஜய் சொல்லும் ஒரு மெசேஜாகவும், அவர்களை மீண்டும் எதிர்க்க நினைக்கும் தனது ரசிகர்களுக்கு சொல்லும் அறிவுரையாகவும் எம்.ஜி.ஆர்-கருணாநிதி பற்றி பேசினார். “ஒரு முறை எம்.ஜி.ஆர் காரில் சென்றபோது, அவரிடம் கருணாநிதியைப் பற்றி ஒருவர் தவறாகப் பேசியிருக்கிறார். உடனே, எம்ஜிஆர் அவரை காரிலிருந்து கீழே இறக்கிவிட்டார். நமது எதிரிகளுக்கும் நாம் மதிப்பு கொடுக்கவேண்டும். இந்த கிண்டலெல்லாம் காமெடியாகத்தான் இருக்கும். ஆனால், ஒரு கட்டத்தை அடையும்போது காயப்படுத்தும். ஆனால், நமக்கு வேறு வேலைகள் உள்ளன. என்னுடைய ஃபோட்டோக்களை கிழித்தாலோ, பேனர்களை உடைத்தாலோ நான் கவலைப்படமாட்டேன். ஆனால், என் ரசிகர்கள் மீது கை வைத்தால் அது உங்களுக்கு நல்லதல்ல. அவர்களது அன்பின் அடையாளமாகவே அவர்கள் இப்படி செய்கிறார்கள். நீங்கள் அப்படிச் செய்தால் அது அவர்களைக் காயப்படுத்தும்” என்று விஜய் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, நிகழ்ச்சி நடைபெற்ற சாய்ராம் பொறியியல் கல்லூரிக்கு வெளியே விஜய் ரசிகர்களின் மீது போலீஸ் தடியடி நடத்திக்கொண்டிருந்தது.

காரணம், பத்தாயிரம் பேர் மட்டுமே உட்காரக்கூடிய இடத்தில் ஏற்கனவே அதிகமாக ஆட்களை அனுப்பிவிட்டோம், நீங்கள் உள்ளே செல்லமுடியாது என்று காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. வெளி மாவட்டங்களிலிருந்து இந்நிகழ்வுக்கான டிக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு வந்த பல்லாயிரம் ரசிகர்கள் வெளியில் நின்றுகொண்டிருந்தனர். “பத்தாயிரம் பேர் தான் உட்கார முடியும்னா, எதுக்கு இத்தனை பேருக்கு டிக்கெட் கொடுக்கணும்” என விஜய் ரசிகர்கள் போலீஸிடம் எகிற, ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களை கலைக்க தடியடி நடத்தியது போலீஸ். இதனால் காயமடைந்த பல ரசிகர்கள், மற்ற ரசிகர்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

வெள்ளி, 20 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon